Published:Updated:

``தம்பி விஜய்க்கு `லவ் டுடே’... எனக்கு `எஸ்டர் டே’ " - கருணாநிதி கலகல! #Karunanidhi95

``தம்பி விஜய்க்கு `லவ் டுடே’... எனக்கு `எஸ்டர் டே’ " - கருணாநிதி கலகல! #Karunanidhi95

``தம்பி விஜய்க்கு `லவ் டுடே’... எனக்கு `எஸ்டர் டே’ " - கருணாநிதி கலகல! #Karunanidhi95

``தம்பி விஜய்க்கு `லவ் டுடே’... எனக்கு `எஸ்டர் டே’ " - கருணாநிதி கலகல! #Karunanidhi95

``தம்பி விஜய்க்கு `லவ் டுடே’... எனக்கு `எஸ்டர் டே’ " - கருணாநிதி கலகல! #Karunanidhi95

Published:Updated:
``தம்பி விஜய்க்கு `லவ் டுடே’... எனக்கு `எஸ்டர் டே’ " - கருணாநிதி கலகல! #Karunanidhi95

க்கிய முன்னணி கூட்டணி ஆட்சி மத்தியில் அமையவிருந்த நேரத்தில், தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக ஆக்கலாம் என்ற பேச்சு வந்தது. அப்போது, தி.மு.க தலைவர் கருணாநிதி பெயரும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது கருணாநிதி சொன்னார், "என் உயரம் எனக்குத் தெரியும்" என்று. பின்னர் கர்நாடகாவைச் சேர்ந்த தேவ கவுடா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் உயரம் தனக்குத் தெரியும் என்று கருணாநிதி சொன்னாலும், மத்தியில் யார் பிரதமராக வர வேண்டும் என்று முடிவெடுக்கும் உயரம் வரை சென்றவரல்லவா அவர். அதற்குக் காரணம் அவரின் ஓய்வறியா உழைப்பும், எப்போது எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற சமயோசித அரசியல் பார்வையும்தான் காரணம். அந்த அரசியல் ராஜதந்திரிக்கு நாளை வயது 95.

கருணாநிதியின் உடல்தான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறதே தவிர, அவர் மனம் நிச்சயம் பல திசைகளிலும் பயணித்து அசைபோட்டுக்கொண்டிருக்கும். ஏனென்றால் ஏறக்குறைய 75 ஆண்டுக்கால அவரின் பொது வாழ்வுப் பணியின் தடங்கள் தமிழ்நாடெங்கும் பதிந்துகிடக்கின்றன.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக அரசியல் லகானை தன் கையில் வைத்துக்கொள்ளும் வித்தை கற்றவர் கருணாநிதி. அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால் தினமும், 'இன்று கருணாநிதி என்ன கேள்வி எழுப்பியிருக்கிறார்', 'எதற்கு என்ன விளக்கம் அளிப்பது' என்றுதான் ஆட்சித் தலைமை நினைக்கும். அப்படி அனைத்து விஷயங்களிலும் ஆராய்ந்து அரசின் குற்றம் குறைகளை அறிக்கையாகவோ கேள்வி பதில்களாகவோ வெளியிட்டுவிடுவார்.

தான் ஆட்சியில் இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட தலைமைச் செயலகம் சென்று பணியாற்றுவார். இதனால் தலைமைச் செயலக அதிகாரிகள் முணுமுணுத்துக்கொண்டதும் உண்டு. ஏனென்றால், முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருக்கும்போது எப்போது என்ன கேட்பாரோ என அனைத்துத்துறை உயர் அதிகாரிகளும் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுவார்கள்.

1999-ம் ஆண்டு ஓர் அதிகாலைப் பொழுதில், புழல் ஏரி உடையும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தகவல் தரப்படுகிறது. உடனே உயர் அதிகாரிகளைத் தலைமைச் செயலகத்துக்கு வரச்சொல்லிவிட்டு தானும் புறப்பட்டுப் போகிறார். அதற்கு முன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் துணை ராணுவப் படையினரையும் செல்லச் சொல்லி உத்தரவிட்டார். அதுபற்றி எழுதிய ஆங்கில நாளேடு ஒன்று, ''அதிகாலையில் கருணாநிதி தலைமைச் செயலகம் சென்றபோது லிஃப்ட் ஆபரேட்டரும் இல்லை. லிப்ஃட்டும் தரைத்தளத்தில் இல்லை. உடனே முதல்வர் படிகள் வழியே தன் அறைக்குச் சென்றார். அவசரத்தில் முதல்வரின் கால்கள் இரண்டு இரண்டு படிகளைத் தாண்டி தாண்டிச் சென்றன'' என்று குறிப்பிட்டது.

இது கருணாநிதியைப் புகழ்ந்துரைப்பதற்காகச் சொல்லப்படவில்லை. ஒரு முதல்வர் எப்படி விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது. `பதவி ஆசை மிக்கவர் கருணாநிதி' எனப் பரவலான விமர்சனம் அவர்மீது உண்டு. ஆனால், இன்றைய தமிழக அரசியலில் நேற்றைய வட்டச் செயலாளர்கள் திடீரென்று `மாண்புமிகு'களாக மாறும் நிலையைப் பார்க்கும்போது, கருணாநிதியின் உழைப்புக்கும் போராட்டங்களுக்கும் அதனால் கிடைத்த சிறைவாசங்களையும் ஒப்பிடும்போது அவருக்குக் கிடைத்த பதவிகள் குறைவு என்று கூறலாம். 

`முரசொலி'யில் நடந்த ஒரு சம்பவம் இன்றைய இளைஞர்களுக்கு நெம்புகோலாக இருக்கும் என்பதால் இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். 2001-2006 காலகட்டத்தில் தினமும் காலை 10 மணிக்கெல்லாம் முரசொலி அலுவலகம் சென்றுவிடுவார் கருணாநிதி. அப்போது முரசொலிக்கு பிரசுரத்துக்காக வரும் கட்டுரைகள் கருணாநிதியிடம் காண்பித்து அவருடைய ஒப்புதல் வாங்கப்பட்ட பிறகே பிரசுரமாகும். ஒருமுறை தன் இருக்கையின் நுனியில் உட்கார்ந்துகொண்டு கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார் கருணாநிதி. அப்போது மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி அவர்கள் கலைஞரிடம், ''சேரில் சாய்ந்துகொண்டு பாருங்களேன்'' என்றார். அதற்கு கருணாநிதி  சொன்னார், ''வேணாங்க சாஞ்சிக்கிட்டா சோம்பேறித்தனம் வந்துடும்.'' - இப்படிச் சொன்னபோது அவருக்கு வயது 82.

தன்னைச் சுற்றி நடந்த, நடக்கும் சம்பவங்களை அரசியலிலும் தன் எழுத்துகளிலும் தன் பேச்சிலும் லாகவமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர் கருணாநிதி. நடிகர் விஜய் நடித்த 'லவ் டுடே' திரைப்படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் தன் பேச்சின் தொடக்கத்திலேயே நகைச்சுவையைத் தூவி கூட்டத்தை மயங்கவைத்தார். தன் பேச்சை இப்படி ஆரம்பித்தார் கருணாநிதி, ''தம்பி விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் எஸ்டர் டே'' - தன் உரை கேட்கக் கூடியிருக்கும் கூட்டத்தை ஆரம்பக்கட்டத்திலேயே தன்வயப்படுத்திவிடுவார். 

தன் எழுத்தின் மூலம் சமகால சம்பவங்களை நயமாக நையாண்டி செய்யத் தெரிந்தவர் கருணாநிதி. மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதிக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கின்போது (2008), 'உளியின் ஓசை' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு வசனம் இது: 'பறக்கத் தெரியும் என்பதற்காகச் சூரியனுக்குள் பாயக் கூடாது.'

60 ஆண்டுகளுக்கும் மேல், தமிழக அரசியலில் நீண்ட தூரம் ஓடி, அதிக உயரம் தாண்டி இன்று ஓய்வில் இருக்கிறார் கலைஞர் கருணாநிதி. அரசியலின் எல்லா நிகழ்வுகளுக்கும் எதிர்வினையாற்றி எழும் அவரின் குரலைக் கேட்க முடியாமல் அரசியல் ஆடுகளம் வெறிச்சோடிக் கிடப்பதென்னவோ உண்மை!