Published:Updated:

இந்தியாவுக்கு அச்சகத்தை அறிமுகப்படுத்தியவர்... கவனிப்பின்றி நடந்த சீகன்பால்கு பிறந்தநாள் விழா!

சீகன்பால்குவின் 337-வது பிறந்த தினத்தையொட்டி, கடற்கரையோரம் நிறுவப்பட்டுள்ள அவருடைய சிலைக்கு கிறிஸ்தவ மத குருமார்கள், பள்ளி மாணவ- மாணவிகள், தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  

இந்தியாவுக்கு அச்சகத்தை அறிமுகப்படுத்தியவர்... கவனிப்பின்றி நடந்த சீகன்பால்கு பிறந்தநாள் விழா!
இந்தியாவுக்கு அச்சகத்தை அறிமுகப்படுத்தியவர்... கவனிப்பின்றி நடந்த சீகன்பால்கு பிறந்தநாள் விழா!

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில், 'இந்தியாவின் அச்சக தந்தை' என்று போற்றப்படும் சீகன்பால்குவின் 337-வது பிறந்தநாள் விழா ஜுலை 10ம் தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக அச்சுக் கலையை அறிமுகம் செய்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும்நோக்கில் டென்மார்க் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்தான் சீகன்பால்கு. 'சோபியா ஹெட்பிக்' என்னும் பெயர்கொண்ட கப்பலில் 222 நாட்கள் பயணம்செய்து கி.பி. 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். ஆனால், இவர் வந்த நோக்கத்தையும் தாண்டி, இந்தியாவுக்கும், தமிழ் மொழிக்கும் பெரும் தொண்டாற்றி இருக்கிறார். வெளிநாட்டினர் அவ்வளவு எளிதில் கற்றுக்கொள்ள இயலாத தமிழ் மொழியை மிகுந்த ஆர்வத்தின் காரணமாக, விரைவாக கற்றுக்கொண்டு எழுதவும், படிக்கவும், சரளமாகத் தமிழில் பேசவும் செய்தார். 1715-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார். தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் கடுதாசிப் பட்டரையில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துக்கள் தயாரிக்கும் கூடத்தை அமைத்தார். இவற்றின் மூலம் சீகன்பால்குவே இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழியில் பைபிளை (புதிய ஏற்பாடு) காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார். அதன்பின், தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார்.

தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, இந்து சமயக் கடவுள்களின் வரலாறு போன்ற நூல்களையும் படைத்திருக்கிறார். இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருப்பதற்கு சீகன்பால்கு காரணம் என்றால் அது மிகையில்லை. ஜெர்மனியில் உள்ள 'ஹால்வே' பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவுவதற்கும் இவர் பெரும் பங்காற்றியிருக்கிறார். தமிழர்களுக்கு கல்விக் கூடங்கள் அமைத்து, பெண்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க 300 ஆண்டுகளுக்கு முன்பே விதவைகளை ஆசிரியர்களாக்கி, பெண்கள் படிக்கும் பள்ளிகளை அமைத்து சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டார். இந்தியாவில் பெண்களுக்கென தனியாக முதல் பள்ளிக்கூடத்தை அமைத்தவரும் சீகன்பால்குதான். தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து மக்களைப் போராடத் தூண்டியவரும் இவர்தான். 'தமிழ் மொழியே எனக்கு தாய் மொழியாகிவிட்டது' என்று பெருமையாக தன் கருத்தைப் பதிவு செய்தவர். ஆசியாவிலேயே முதல் தேவாலயமான புதிய எருசேலம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-ல் அமைத்திருக்கிறார். 1719-ல் இயற்கை எய்திய சீகன்பால்குவின் உடல், தரங்கம்பாடி புதிய எருசேலம் ஆலயத்தின் பலிபீடம் முன்பு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சீகன்பால்குவின் 337-வது பிறந்த தினத்தையொட்டி, கடற்கரையோரம் நிறுவப்பட்டுள்ள அவருடைய சிலைக்கு கிறிஸ்தவ மத குருமார்கள், பள்ளி மாணவ- மாணவிகள், தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  

இதுபற்றி சமூக ஆர்வலர்களிடம் பேசியபோது, "வெளிநாட்டுக்காரர் ஒருவர், தமிழ்நாட்டுக்கு வந்து தமிழைக் கற்று, தமிழ் நூல்களைப் படைத்திருக்கிறார். அவரே அச்சுக் கலையை இந்தியாவிற்கு அறிமுகம் செய்திருக்கிறார். அவரைப் பெருமைப்படுத்தும்விதமாக தரங்கம்பாடியில் பிரமாண்டமான மணிமண்டபம் அமைத்து, அவர் இங்கு வந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்" என்றனர்.