Published:Updated:

``வறுமையைப் போக்க நிலப்பகிர்வே சிறந்த வழி!'' - ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த தினப் பகிர்வு

Acharya Vinoba Bhave
Acharya Vinoba Bhave

ஆன்மிகரீதியான செயல்பாடுகளில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வினோபா பாவேயை, அரசியல்ரீதியாகத் திசை திருப்பியவரும், மகாத்மா காந்திதான்.

மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், வ.உ.சிதம்பரம் என இந்திய அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு தலைவருக்கும் தனித்த அடையாளம் ஒன்றுண்டு. அந்த வரிசையில் `நிலம்' என்றாலே நம் நினைவுக்கு வந்து நிற்பவர், காந்தியின் ஆன்மிக வாரிசாக அறியப்பட்ட `வினோபா பாவே'தான்.

1895-ம் ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொலபா என்னும் குக்கிராமத்தில், நரஹரி சம்புராவ் - ருக்மிணிதேவி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார் ஆச்சார்ய வினோபா பாவே. லௌகீக வாழ்வின்மீது ஈர்ப்புற்று மன அமைதி தேடி காசி, வங்கம் என மனம்போன போக்கில் சுற்றித் திரிந்தார். ஒருகட்டத்தில், ஆங்கிலேய அரசுக்கெதிராகப் போராடிக்கொண்டிருந்த கொரில்லா குழுக்களுடன் இணைந்து போராட முடிவுசெய்தவர், பின் காந்தியின் உரையைக் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

Acharya Vinoba Bhave
Acharya Vinoba Bhave

காந்திக்கெழுதிய கடிதத்துக்குப் பதில் கிடைக்க, வங்கத்தில் இருந்து சபர்மதி ஆசிரமத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார். தாம் தேடிய அமைதி அங்கு கிடைக்கவே, அங்கேயே தன் மிச்ச வாழ்க்கையைக் கழிக்கவும் முடிவு செய்தார். இறைவன்மீது கொண்ட பற்றின் காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவும் முடிவுசெய்தார். "என்னைவிட காந்தியத்தைச் சரியாகப் பின்பற்றுபவர், எனக்கு அவர் மாணவர் அல்ல... குரு'' என காந்தியால் போற்றப்பட்டவர், வினோபா பாவே.

ஆன்மிகரீதியான செயல்பாடுகளில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வினோபா பாவேயை, அரசியல் ரீதியாகத் திசை திருப்பியவரும் காந்திதான். சத்தியாககிரகம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை முன்னெடுக்க அப்பழுக்கற்ற மனிதர்கள் சிலரை பரிந்துரை செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார், காந்தி. நொடியும் தாமதமில்லாமல், அவர் மனதில் வந்து நின்றார் வினோபா பாவே.
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
Gandhi
Gandhi

பட்டியலில் முதல் பெயரும் அவருடையதுதான். அதற்குப் பிறகு, காந்திய வழியிலான விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டு, பல முறை சிறை சென்றார்.

சுதந்திர இந்தியாவில் காந்தியாரின் மரணத்துக்குப் பிறகு, வினோபா பாவேயின் வாழ்வு நிலச்சீர்திருத்தம் நோக்கி நகர்ந்தது. ஆந்திராவில் நிகழ்ந்த மிகப்பெரிய அரசு வன்முறைதான் அதற்குக் காரணமாக அமைந்தது. 1946-ல் தொடங்கி 1951 வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நிலம் வேண்டி அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகளை ஆயுதங்கள்கொண்டு அடக்கியது மத்திய அரசு.

4,000-க்கும் அதிகமான விவசாயிகளைப் பலிகொடுத்த பின்னும் போராட்டம் ஓயவில்லை. வங்காளத்தில் பற்றியெரிந்த கலவரத்தைத் தன் உயிர்கொண்டு அணைத்த காந்தியாரைப்போல், ஒரு காந்தியனாக ஆந்திராவில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றிய உண்மை நிலையறிய பாதயாத்திரையை மேற்கொண்டார், வினோபா பாவே. ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடையே அஹிம்சையைப் போதித்துவந்தார், வினோபா பாவே. அப்படி ஒரு கிராமத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வயதான முதியவர் ஒருவர் எழுப்பிய கேள்விதான், வினோபா பாவேவை 'நிலப்பங்கீடு' குறித்து சிந்திக்கவைத்தது.

Vikatan
"ஐயா, நீங்கள் அகிம்சையைப் பற்றிப் பேசுவதெல்லாம் சரிதான். எனக்கு, இது புரிகிறது. நாங்கள் அதற்கு எதிரானவர்களல்ல. ஆனால், இங்கே, இந்தக் கிராமத்தின் நிலமற்றோர் எங்கே இருக்கிறோம் பாருங்கள்? நிலவுடைமையாளர்கள்தான் உங்களைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள்.
விவசாயி

"ஆம்... நாங்கள் அவர்களது வயல்களை உழுகிறோம். எங்கள் உழைப்பால்தான் அவர்கள் இவ்வளவு செல்வமும் வசதியுமாக இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு ஒரு சிறு அளவு நிலம்கூட இல்லை. எனவே, எங்களுக்கும் நிலம் வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைக்கிறார், அந்த முதியவர். "எங்களின் கைகள் ஆயுதங்கள் நோக்கிச் செல்ல, நாங்கள் போராட... நிலமற்ற எங்கள் வறுமை நிலைதான் காரணம்'' என அந்த முதியவர் மேலும் சொல்ல, போராட்ட வழிமுறையைவிடப் பிரச்னையைத் தீர்க்க என்ன வழி எனச் சிந்திக்கத் தொடங்கினார், வினோபா பாவே.

Acharya Vinoba Bhave
Acharya Vinoba Bhave

அதன் தொடர்ச்சியாக, "நிலமில்லாத ஏழைகளுக்கு யார் தங்களின் நிலங்களைத் தருகிறீர்கள்?'' எனத் தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த கூட்டத்தில் கூக்குரல் விடுக்கிறார், வினோபா பாவே. ராமச்சந்திர ரெட்டி என்ற வழக்கறிஞர் தனது 100 ஏக்கர் நிலத்தைத் தானமாகத் தருவதாக அறிவிக்க, அப்படித் தொடங்கியதுதான் `பூமிதான இயக்கம்'. இந்தியா முழுவதும் பயணம் செய்து ஏக்கர் கணக்கான நிலங்களைத் தானமாகப் பெற்றார், வினோபா பாவே. மக்களுடன் உரையாடுவதற்காக எட்டு மொழிகளைக் கற்றுக்கொண்டார். அவரால் தொடங்கப்பட்ட, `சர்வோதயா ஆசிரமம்' முழுமூச்சுடன் பூமிதான இயக்கப் பிரசாரங்களை மேற்கொண்டது.

தமிழகத்தில், நிலங்களைத் தானமாகப் பெற பெரியாரின் உதவியைக் கோரினார், வினோபா பாவே. அவரும் தன்னால் ஆன உதவியைச் செய்வதாக ஒப்புக்கொண்டார். இந்தியாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜெயப்பிரகாஷ் நாராயணன் தானாக முன்வந்து, பூமிதான திட்டத்தில் இணைந்து செயல்பட்டார்.
Jeyaprakash Narayanan
Jeyaprakash Narayanan

பூமிதான திட்டத்தின்கீழ், ஒட்டுமொத்தமாக 40 லட்சம் ஏக்கர் நிலம் தானமாகப் பெறப்பட்டு, அதைப் பிரித்துக் கொடுப்பதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்பட்டன. பூமிதான இயக்கத்தைத் தொடர்ந்து கிராமதான இயக்கத்தை முன்னெடுத்தார். அதில், ஒட்டுமொத்த கிராமமும் தானமாகப் பெறப்படும். நிலம் அனைவருக்கும் பொதுவாக இருக்கும். அனைவரும், அவர்களுக்குத் தேவையான நிலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் யார் ஒருவரும் நிலத்தை உரிமைகோர முடியாது. இதன்மூலம் கிராமங்களில் வாழும் மக்களிடையே சமத்துவத்தைப் பேண முடியும் என நம்பினார் வினோபா பாவே.

கிட்டத்தட்ட 1.50 லட்சம் கிராமங்கள் கிராமதான திட்டத்தின்கீழ பெறப்பட்டு நிலப்பகிர்வு நடந்திருக்கிறது. இந்திய வரலாற்றில் நிலம் தொடர்பாக நிகழ்ந்த சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது, இது. காலப்போக்கில் இயக்கத்தை வழி நடத்தியவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாகப் 'பூமிதான இயக்கம்' அப்படியே முடங்கிப்போனது. தானமாகப் பெறப்பட்ட நிலங்களும் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

Vikatan
தமிழகத்தை எடுத்துக்கொண்டால்கூட 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பூமிதான திட்டத்தின்கீழ் தானமாகப் பெறப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான இடங்கள் தற்போது அரசியல்வாதிகளின், அதிகாரமிக்கவர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

பல இடங்களின் உரிமையாளர்களே, 'எங்கள் முன்னோர்கள் தெரியாமல் கொடுத்துவிட்டார்கள். இந்த இடம்தான் எங்களுக்கு ஜீவாதாரம்' என வழக்குத் தொடுத்துள்ளனர். அதனால் மக்களுக்கு நிலங்களைப் பிரித்துக்கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. 'பூமிதான இயக்கம்' தொடங்கப்பட்டு, 68 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், அது தொடங்கப்பட்டதற்கான தேவை இப்போதும் இருக்கிறது.

Vinoba bhave Stamp
Vinoba bhave Stamp

நிலமில்லாத மக்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் சுரண்டப்படும் அவலம் இப்போதும் தொடர்கிறது. வினோபா பாவேவுக்கு அளிக்கப்பட்ட ராமன் மகசேசே விருதோ, பாரத ரத்னாவோ, அவர் பெயரில் தபால்தலை வெளியிடுவதோ ஒருபோதும் நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகாது. அவர் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றுவது மட்டுமே, அவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

அடுத்த கட்டுரைக்கு