Published:Updated:

ரத்தமும் சதையுமாகக் காலத்தை எழுதிய கலைஞன் மன்ட்டோ! #MantoMemories

மன்ட்டோவின் பாத்திரங்கள் என்றும் ஒரு மதத்தை தூக்கிப் பிடித்ததில்லை. எந்த வரையறைக்கும் உட்படாதவர் அவர். தான் கண்ட ரத்தமும் சதையுமான உலகின் நிலையை நோக்கி கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்த மனசாட்சி.

ரத்தமும் சதையுமாகக் காலத்தை எழுதிய கலைஞன் மன்ட்டோ! #MantoMemories

மன்ட்டோவின் பாத்திரங்கள் என்றும் ஒரு மதத்தை தூக்கிப் பிடித்ததில்லை. எந்த வரையறைக்கும் உட்படாதவர் அவர். தான் கண்ட ரத்தமும் சதையுமான உலகின் நிலையை நோக்கி கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்த மனசாட்சி.

Published:Updated:

போரும் வன்முறையும் உலகின் ஒரு சுழற்சியைப் போல் இடைவிடாது நிகழ்த்தப்பட்டுக்கொண்டே உள்ளன. ஆட்சியாளர்களின் வல்லாதிக்கத்தால் நிகழ்த்தப்படும் போரில், பாதிக்கப்படும் சாமான்யனின் கேள்விகள் எத்தகையதாக இருக்கும்? படுகொலைகள், இடம்பெயர்வுகள், வன்புணர்வுகள்... என வீழும் உடல்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்! ஏதோ ஒரு முரண், அதுவரையிலான வாழ்வையே கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. இதை எதிர்கொள்பவர் சமூக அக்கறை மிக்க ஓர் எழுத்தாளாராக இருக்கும்பட்சத்தில், அவை வரலாற்றுப் பதிவாக எண்ணற்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். படைப்புகளை இந்தச் சமூகத்திற்கு அளிக்கத் தவறுவதில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், சாதத் ஹசன் மன்ட்டோ.

 மண்டோ
மண்டோ

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறை என்பது, மனித சமூகம் நாகரிக வளர்ச்சி அடைந்தது எனச் சொல்லிக்கொள்வதற்கு வெட்கப்படவேண்டியதாகும். உள்நாட்டின் முரண், லட்சக்கணக்கானவர்களைக் கொன்று, கோடிக்கணக்கானவர்களை இடம்பெறச் செய்தது வரலாற்றின் மிகப்பெரிய ரத்தக்கறை. மக்கள், குடிமகன் என்றிருந்த ஒருவன் எந்த அளவுக்கு மூர்க்கமான வன்முறையாளனாகிறான் என்ற புதிரை இன்றுவரை இந்தியப் பிரிவினை விடுவிக்கவில்லை. அதன் கோரத்தை ரத்தமும் சதையுமாக எழுதினார், மன்ட்டோ.

பஞ்சாப்பில் பிறந்த சாதத் ஹசன் மன்ட்டோ பிறப்பால் ஒரு இஸ்லாமியர். தலைசிறந்த எழுத்தாளர். காலத்தின் அறத்தை, உண்மையைப் பிரதிபலித்தவர். அத்தகைய ஒருவரையும் பிரிவினைக் காற்று வீசி எறிந்தது. 'நீ மட்டும் என் நண்பனாக இல்லாவிட்டால், உன்னையும் நான் கொன்றிருப்பேன்' என்று தன் நண்பனே கூறியதைக் கேட்கிறார். அதுவரையிலான தன் இருப்பையும், சூழலையும் கண்டு அதிர்கிறார். இஸ்லாமியன் என்ற உணர்வு துளியும் இல்லாத மன்ட்டோ, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் தனிப்பட்ட வாழ்விலேயே நேரடி விளைவைச் சந்தித்த மன்ட்டோ, அதைத் தன் எழுத்துகளில் வடிக்கிறார். மன்ட்டோவின் வாழ்வும் எழுத்தும் வேறானவையாக இருந்ததில்லை. அதுவே, அவர் கதைகளைப் படிக்கும் அனைவருக்கும் புனைவு என்ற தோற்றத்தைக் கொடுப்பதில்லை. 'நான் உண்மையாகவே கதைகளை எழுதவில்லை. அவை தன்னைத்தானே எழுதிக் கொள்கின்றன' என்றார் மன்ட்டோ. அந்த அளவிற்கு சமூகத்தின் அசைவில் தன்னிச்சையாகப் படர்ந்துகிடந்தார். அவரின் முதன்மை பாத்திரங்களாகத் தொழிலாளர்கள், சிறப்பு மனநலம் பெற்றவர்கள், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் சிறுமிகள், பிச்சைக்காரர்கள் போன்றோர்களே இருந்தனர். மூடிமறைக்கப்பட்ட கண்ணியத்தை எழுதுவதற்கு, வெறுத்தொதுக்கும் உண்மைகளை, இச்சமூகத்தின் சாட்சியங்களை எழுதுவது மேல் என்றிருந்தார் மன்ட்டோ.

Manto
Manto

பாலியல், பாலியல் தொழில் பற்றிப் பேசினால் 'ஆபாசம்' என்று குற்றம் சாட்டிய பொதுமனநிலை மன்ட்டோவை வசைபாடியது. 'பாலியல் தொழிலை எழுதினால் வெறுக்கும் நீங்கள், இன்றுவரை அவை நடைமுறையில் இருப்பதைப் பற்றி ஏன் எந்தச் சலனமும் அடையவில்லை?' என்பது மன்ட்டோவின் கேள்வியாக இருந்தது. ஓர் ஆண் எவ்வளவு கீழ்த்தரமான செயல்களின் ஈடுபட்டாலும் அவனை ஆணாக மட்டுமே பார்க்கும் நீங்கள், உங்களின் மனநிலைக்குச் சிறிது வித்தியாசப்படும் பெண்ணை ' வேசி' என்று விளம்பரப்படுத்துவது ஏன்? என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால், நாம் வாழும் காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று பொதுமனநிலை மீது மன்ட்டோவின் ஒவ்வொரு கேள்வியும் அதன் கண்ணியத்தின் அழுக்கை விசாரணைக்குப்படுத்தியது.

பாலியல் தொழிலாளர்களை அழைப்பதிலேயே கேவலப்படுத்தியபோது, ஆண்களால் முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பெண் பாலியல் தொழிலாளிக்கு எழுந்த சுயமரியாதையையும், தன்னுணர்வையும் விவரித்தது, 'அவமானம்' கதை. சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை 'ஆண்' என்ற பொதுச் சூழலால் கையாளப்படுவதுபோல், பாலியல் தொழிலாளி, பிச்சைக்காரர்கள் எனப் பாதிக்கப்பட்டவர்களின் மீதான அவதூரை விலக்கி சூழலைக் கண்டித்தன மன்டோவின் கதைகள். இவ்வாறு தான் வாழ்ந்த சூழலின் அறவியல் மதிப்பீட்டையே கடைப்பிடித்த மன்ட்டோவை பிரிவினை பெரிதும் பாதிக்கிறது. அதன் துயர் ஒவ்வொன்றிற்கும் அவரின் கதைகள் சாட்சியமாகின்றன.

வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியப் பிரிவினை பெண்களை தன் வன்முறைப் போதைக்குப் பயன்படுத்திக்கொண்டது. இந்தியப் பிரிவினை என்பது இரு நாட்டிற்கு இடையே போடப்பட்ட கோடல்ல. மாறாக, இரு நாட்டுப் பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்பதே அதன் உச்சபட்ச வெளிப்பாடு. மன்டோவின் கதைகளில் அதன் காட்சிகள் வார்த்தைகளால் விரிகின்றன.

பிரிவினையின்போது, எண்ணற்றவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண், மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கையில், மருத்துவர் 'திற' என்றதும், அவள் தன் கீழாடையின் நாடாவைத் திறக்க முயல்வாள். அந்தச் சொல், அவளின் உள்ளாழ்ந்த பெரும் மனச்சிதைவை ஏற்படுத்தியிருக்கும். இப்படியான கதையின் மூலம் அதிச்சிக்குள்ளாக்கிறார் மன்ட்டோ. பிணங்கள் சுமந்த ரயில்களின் கதையைப் பேசிய 'தன்னடக்கம்', மதவெறியில் வீழும் மனித உடல்களிடம் கேள்வியெழுப்பிய 'என்ன வேறுபாடு', சாமான்யன் மீதான தாக்குதலை விவரிக்கும் 'நிரந்தர விடுமுறை', 'அடையாளம் நீக்கப்பட்டது' போன்ற ஒவ்வொரு கதையின் அடர்த்தியில், வாசகனின் அமைதி நிலைகுலைகிறது.

`எனக்கு ஒரு பென்சிலே போதும்!’ - #Manto
`எனக்கு ஒரு பென்சிலே போதும்!’ - #Manto

மன்ட்டோவின் கதைகளின்மீது இந்திய அரசு, மூன்று வழக்கு தொடுத்தது, பாகிஸ்தான் அரசு மூன்று வழக்கு தொடுத்தது. அவரின் இந்து நண்பன், 'உன்னைக் கொன்றிருப்பேன்' என்று சொன்னான் என்றால், இஸ்லாமியர்கள் `ஒழுக்கக் கேடானவர்’ என்றார்கள். மன்ட்டோவின் பாத்திரங்கள் என்றும் ஒரு மதத்தை தூக்கிப் பிடித்ததில்லை. எந்த வரையறைக்கும் உட்படாதவர் அவர். தான் கண்ட ரத்தமும் சதையுமான உலகின் நிலையை நோக்கி கேள்வியெழுப்பிக்கொண்டே இருந்தது அதன் மனசாட்சி.

மன்டோவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்த நந்திதா தாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார், 'மன்ட்டோ ஒரு தனிநபரோ எழுத்தாளனோ அல்ல. இந்த நாட்டின் மனநிலை. ஒருவன் வாழ்ந்த உலகின் பிரதிபலிப்பை உண்டாக்குவதற்கான வழி.'