Published:Updated:

`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை!' - எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்புப் பகிர்வு! #Reshare

எம்.ஜி.ஆர்

இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள். தமிழகத்தில் வேறு எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத அன்பு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும் நிலைத்து நிற்கிறது. தமிழகத்தில் அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்றும் போற்றப்படுகின்றன.

`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை!' - எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்புப் பகிர்வு! #Reshare

இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள். தமிழகத்தில் வேறு எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத அன்பு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும் நிலைத்து நிற்கிறது. தமிழகத்தில் அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்றும் போற்றப்படுகின்றன.

Published:Updated:
எம்.ஜி.ஆர்

"நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்... இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!" இந்தப் பாடலைக் கேட்காதவர்கள் தமிழ்நாட்டில் மிகக்குறைவு. தமிழகத்தில் வேறு எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத அன்பு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும் நிலைத்து நிற்கிறது. தமிழகத்தில் அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்றும் போற்றப்படுகின்றன. அவர்தான் தமிழக மக்களால் புரட்சித் தலைவர், இதயக்கனி, வாத்தியார் என அழைக்கப்படும் எம்.ஜி.ஆர். இன்று எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள்.

மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பதின் சுருக்கமாக எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட இவரது பெற்றோருக்குப் பூர்வீகம் கேரளம் என்றபோதும் சில காரணங்களுக்காக அவர்கள் இலங்கையில் உள்ள கண்டிக்குக் குடிபெயர்ந்தனர். 5 வயதில் தந்தையை இழந்து, படிப்பைத் தொடரமுடியாமல், தன் அண்ணனுடன் சென்னைக்கு வேலைக்காக வருகிறார். தாயை விட்டுப் பிரிந்த சோகத்தை வெளிகாட்ட முடியாத வகையில் வறுமை அவர்களை வாட்டுகிறது. அங்கு தன் அண்ணனுடன் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகள் அப்படியே நகர்கின்றன. 1935-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அவருக்கு அறிமுகம் கிடைக்கிறது. அதன்பிறகு சினிமாவில் அவர் தொட்ட உச்சம் யாரும் அடைய முடியாதது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

1936-ம் ஆண்டில் 'சதிலீலாவதி' என்னும் படத்தில் துணை நடிகருக்கான வாய்ப்பு கிடைத்தது. நான்கு வருடங்கள் கழித்து,1940-ம் ஆண்டில் 'இராஜகுமாரி' என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமானார் எம்.ஜி.ஆர்.

தான் கால் பதித்த முதல் படத்திலிருந்து 20 ஆண்டுகளாக மக்களைத் தன் ரசிகர்களாக வைத்திருந்தது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மக்களைத் தன் நடிப்பாலும் துடிப்பாலும் கட்டி வைத்திருந்தவர். எத்தனையோ சண்டைக் காட்சிகள், பாடல்கள், தனித்துவமான நடன அசைவுகள், கருத்துகள் என அனைத்தையும் கொண்டு தமிழ்நாட்டு மக்களை ரசிக்கச் செய்தவர். எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பாடல்களைப் பலரும் தங்களின் தொலைபேசியில் இன்றும் பதிந்து வைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா', 'திருடாதே தம்பி திருடாதே' போன்ற பல பாடல்களில் தத்துவங்களைப் பேசினார் எம்.ஜி.ஆர். இப்படிச் சாதாரண கருத்துகளைத் திரையில் பேசிய எம்.ஜி.ஆர் தன் படங்களில் அரசியலைப் பேசவும் காலம் வந்தது. 1953-ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதற்குப் பிறகு, தன் படங்களில் திராவிடக் கொள்கைகளையும் அண்ணாவின் தலைமையையும் முன்வைத்து பாடல்களையும் வசனங்களையும் ஒலிக்கச் செய்தார்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

20 ஆண்டுகளாகத் தி.மு.க-வில் இருந்த எம்.ஜி.ஆர், தனியாக அ.தி.மு.க என்னும் கட்சியைத் தொடங்கினார். இந்த விலகலுக்குப் பின், அவருக்கும் கருணாநிதிக்கும் இடையிலான மோதல் காரணமாக அமைந்தது. திரைப்படங்கள் வாயிலாக கதாநாயகனாக இருந்த எம்.ஜி.ஆர், அரசியலின் வாயிலாக நிஜ நாயகனாக மக்களிடம் வலம் வந்தார். தனியாகக் கட்சி தொடங்கிய 5 வருடத்திலேயே ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து பத்தாண்டுகளுக்குத் தமிழகத்தை ஆட்சி செய்தார். முதல்முறை களத்துக்கு வந்த கதாநாயகனை மக்கள் நிஜ நாயகனாக மாற்றினார்கள். தனக்கென ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதில், எம்.ஜி.ஆர் தனி அக்கறை கொண்டவர். அவர் தலையில் அணிந்த தொப்பி, எப்போதும் போட்டிருக்கும் கண்ணாடி, ஏழைகளின் மகனாகத் தன்னை முன்னிறுத்துவது என எம்.ஜி.ஆர் தன் பிம்பத்தை வெளிக்காட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்கள் தொடங்கியும் விரிவுபடுத்தியும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொண்டு வந்தபோதும், அடுத்த முறை ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க இதை விரிவுபடுத்தியதில் பெரும் பங்காற்றியது. நியாய விலைக் கடைகளைக் கொண்டுவந்து அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களை மக்களுக்கு எளிதில் கிடைக்க வைத்தது.

தொண்டர்களிடையே உரையாற்றும் எம்.ஜி.ஆர்.
தொண்டர்களிடையே உரையாற்றும் எம்.ஜி.ஆர்.

காமராஜர் ஏழைக் குழந்தைகளைப் பள்ளிக்கு வர ஒரு முயற்சியாக மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். அதை விரிவுபடுத்தி, சத்துணவுத் திட்டமாக மாற்றினார் எம்.ஜி.ஆர். நாள்தோறும் அட்டவணைப்படி முட்டை, காய்கறி வகைகள் என சத்தான உணவு சமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. ஐந்து வயது நிரம்பிய ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால்தான் உணவு கிடைக்கும். ஆனால், ஐந்து வயது நிரம்பாத குழந்தைகளுக்கு உணவளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டது. திருமணமாகும் ஏழைப் பெண்களுக்குத் 'தாலிக்குத் தங்கம்’ கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். தங்கள் வீட்டுப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய்மார்களுக்கு உதவும் வகையில், மாதம்தோறும் அவர்களுக்கு உதவித் தொகை தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீடு சதவிகிதம் அதிகமாக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான 31% இட ஒதுக்கீடு, 50% ஆக உயர்ந்தது. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 18% சேர்த்து, மொத்தம் 68% இட ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. இந்திய மாநிலங்களிலேயே அதிகமான இட ஒதுக்கீடு உள்ள மாநிலமாகத் தமிழகம் இருந்தது.

கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர்.
கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர்.

இப்படியான பல்வேறு திட்டங்களைத் தந்து எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான தலைவராக மாறினார். எம்.ஜி.ஆர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தமிழக அரசியல் வரலாற்றிலும், தமிழக மக்களின் மனதிலும் அவருக்கென்று தனி இடம் இப்போதும் இருக்கிறது!

- தனிமொழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism