Published:Updated:

அம்பேத்கர், பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை... அவமதிப்பு தொடர்வது ஏன், சாதி ஒழிப்பு சாத்தியமா?

அம்பேத்கர்

'பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு' எனும் குரல்களை முறியடித்து 'சமூகரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு' என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் அவர்.

அம்பேத்கர், பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை... அவமதிப்பு தொடர்வது ஏன், சாதி ஒழிப்பு சாத்தியமா?

'பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு' எனும் குரல்களை முறியடித்து 'சமூகரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு' என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் அவர்.

Published:Updated:
அம்பேத்கர்

இது கொரோனா பெருந்தொற்றுக்காலம். முதல் அலை முடிந்து இரண்டாம் அலை அச்சுறுத்துகிறது. தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் சமூக இடைவெளியும் முகக்கவசமும் சானிட்டைசரும் இப்போதும் நம் தேவையாக இருக்கின்றன. சென்ற ஆண்டு பொதுமுடக்கத்தின்போது நாம் தொலைதூரத்தில் இருந்த உறவினர்களையோ நண்பர்களையோ சந்திக்க முடியவில்லை. கொரோனா சிகிச்சையளித்த ஒரு மருத்துவரோ, காவலரோ, தூய்மைப்பணியாளரோ வீட்டுக்குச் சென்று தங்கள் குழந்தைகளைக் கொஞ்சுவதில் தயக்கம் காட்டினர். மளிகைக்கடையில் கறிவேப்பிலை வாங்கச் செல்லும் வரிசையிலும் நாம் காலுக்குக் கீழே வட்டங்கள் முளைத்தன. நாம் யாரையும், நம்மை யாராலும் தீண்ட முடியாத நிலை.

நியாயமாகப் பார்த்தால், இதே துயரங்களை நூற்றாண்டுகளுக்கு முன் அனுபவித்து தீண்டத்தகாதவர்களாக மாறியவர்களின் வலியை நாம் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் நம்மில் சிலரோ 'பார்த்தீர்களா, இதனால்தான் தீட்டே உருவானது. நம் முன்னோர்கள்தான் எவ்வளவு புத்திசாலிகள்' என்று சிலாகித்துக்கொண்டனர். இந்த 'நோய் மனநிலை'யைத்தான் அம்பேத்கர் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாய், குரலற்ற மக்களின் நாயகனாக விளங்கிய அம்பேத்கர் வெறுமனே அரசியல் தலைவர் மட்டுமல்ல. அவர் ஒரு பொருளாதார நிபுணர், சட்ட வல்லுநர், தத்துவங்களின் ஆழத்தில் திளைத்தவர், சமயங்களைப் படித்தவர், இசையின் நுட்பம் தெரிந்து வயலின் இசைத்தவர். அவரது ஆய்வுப்படிப்பு ரூபாய் பிரச்னையைப் பற்றியது. புனே ஒப்பந்ததுக்குப் பிறகு 'இந்திய ராணுவம்' குறித்து நூல் எழுதத் தொடங்கியவர். நீர்ப்பாசனம், மின்னாற்றல் குறித்து கட்டுரைகள் எழுதியவர். மாநிலங்களின் உரிமைகள், மொழி, இனக்குழுக்கள், மக்கள்நலத்திட்டங்கள், அரசின் தன்மை, போராட்டங்களின் வழிமுறை என பலதளங்களில் சிந்தித்து உரையாடல் நிகழ்த்தியவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் அவரை ஒரு சாதித்தலைவராகக் குறுக்கி அவமானப்படுத்துகிறோம். அவரது சிலைகள் உடைக்கப்படுகின்றன. ஒரு புகழ்பெற்ற கல்வியாளரான அவரது பெயரைக் கல்வி நிறுவனங்களுக்கு வைக்கக்கூடாது என்று போராட்டங்கள் நடக்கின்றன. ஒட்டுமொத்த மக்களுக்குமான விடுதலையைச் சிந்தித்தவரின் சிலைகளைக் கூண்டுக்குள் அடைத்துவைத்திருக்கிறோம். இது அம்பேத்கரை அவமானப்படுத்துவது அல்ல. சூரியனை நோக்கி சாணி எறிய முடியாது. நாம் நம்மை, நம் விழுமியங்களை, நம் தகுதியை, நம் சமூகத்தை அவமானப்படுத்துகிறோம் என்பதுதான் உண்மை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தொடக்கத்தில் இல்லாத 'பிற்படுத்தப்பட்டோர்' என்னும் வகைமையை உருவாக்கியவர் அம்பேத்கர். யாரால் அவர் சிலைகள் உடைக்கப்படுகின்றனவோ, யார் அவரை சாதித்தலைவர் என்று தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்களோ அந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தவர் அம்பேத்கர்.

அம்பேத்கர் சிலை
அம்பேத்கர் சிலை
'பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு' என்னும் குரல்களை முறியடித்து 'சமூகரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு' எனும் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் அவர்.

அம்பேத்கர் தன் சட்ட அமைச்சர் பதவி விலகலுக்கான காரணங்களைக் குறிப்பிடும்போது 'பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை' என்று குற்றம் சாட்டினார். அவரை சாதித்தலைவர் என்று குறுக்குவதுதான் உண்மையில் சாதியமனநிலை.

அவரால் கொண்டுவரப்பட்ட இந்து சட்டத்தொகுப்பு மசோதா சனாதனிகளின் எதிர்ப்பால் நிறைவேற்றப்படாதபோது அவர் தன் அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தார். அந்த சட்டத்தொகுப்பு மசோதாவின் முக்கியமான அம்சங்கள் 'பெண்களுக்குச் சொத்துரிமை' மற்றும் 'பெண்களுக்கு மணவிலக்கு உரிமை'. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் உரிமைகளைப் பெறவேண்டும் என்று சிந்தித்து அதற்காகத் தன் பதவியைத் துறந்த அம்பேத்கரை எல்லாச் சாதிப்பெண்களும் உணர்ந்திருக்கிறார்களா?

தொழிலாளர்களுக்கு எட்டுமணி வேலைநேரத்தைச் சட்டபூர்வமாக்கியவர் அம்பேத்கர். ஆனால் சாதி அடிப்படையில் தொழிற்சங்கங்களை உருவாக்குபவர்கள் அம்பேத்கரைப் புரிந்துகொள்வதில்லை. இன்று தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன. அம்பேத்கர் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி போன்ற சுயேச்சை நிறுவனங்களின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில்தான் முன்பைவிட நாம் அம்பேத்கரை அதிகம் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான எதிர்காலம் குறித்து சிந்தித்த தலைவர். ஆனால் அவர் அவமானங்களில் விளைந்த, வளர்ந்த தலைவர். பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை அவர் அவமானங்களைச் சந்தித்தார். இறந்தபிறகும்கூட அவர் அவமானப்படுத்தப்படுகிறார். அவரைச் சாதித்தலைவராகக் குறுக்குவதுதான் அவருக்கு இழைக்கப்படும் அவமானங்களிலேயே பெரிய அவமானம்.

அம்பேத்கர்
அம்பேத்கர்
அவர்தான் 1916-லேயே 'இந்தியாவில் சாதிகள்' என்னும் தன் முதல்நூலிலேயே 'சாதிகளின் தோற்றத்துக்குக் காரணம் அகமணமுறை என்னும் ஒரே சாதிக்குள் நடைபெறும் திருமணம்' என்பதைச் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமல்ல, ''சாதித்தூய்மையைக் காக்கும் பொறுப்பு பெண்களின் தலையிலேயே சுமத்தப்பட்டிருக்கிறது. கணவனை இழந்த பெண் வேறுசாதி ஆணை மணந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விதவைகள் கொடுமையும் சதி என்னும் உடன்கட்டையும் உருவாக்கப்பட்டது'' என்று சாதியத்துக்கும் ஆணாதிக்கத்துக்கும் இடையிலான தொடர்பை விளக்கினார். இன்றும் ஆணவக்கொலைகளுக்கான விளைவுகளைச் சுமப்பவர்களாக இருப்பவர்கள், சாதித்தூய்மையைக் காக்கும் 'வரலாற்றுக்கடமையை'ச் சுமக்க வேண்டிய அவலத்தில் இருக்கும் பெண்களே.

சாதி என்பதை அம்பேத்கர் தனிப்பட்ட துயரமாகப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் அவலமாகப் பார்த்தார். வரலாற்றில் அதற்கான காரணங்களைத் தேடினார். . 'தீண்டப்படாதவர்கள் யார்?', 'சூத்திரர்கள் யார்?' என்னும் நூல்களின் வழியே ஆய்வுப்பயணத்தைத் தொடர்ந்தார். ''உலக வரலாறு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம்'' என்ற கார்ல் மார்க்ஸைப் போல் ''இந்திய வரலாறு என்பது பார்ப்பனியத்துக்கும் பவுத்தத்துக்கும் இடையிலான போராட்டம்'' என்னும் முடிவை வந்தடைந்தார். மனு ஸ்மிருதியில் இருந்து நீட்ஷே வரை, தம்மபதத்தில் இருந்து மார்க்சியம் வரை கற்றுத்தேர்ந்த அம்பேத்கர் இந்தியா நவீனத்துக்குத் தகுதியில்லாமல் இருப்பதற்குக் காரணம் சாதியமே என்று விளக்கினார். ''கலப்புத்திருமணங்களாலும் சமபந்தியாலும் மட்டும் சாதியை ஒழித்துவிட முடியாது. அது ஒரு மனநிலை'' என்றார்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

அந்த மனநிலைதான் நம்மைப் பல நூற்றாண்டுகளாக ஆட்டிவரும் கொடிய மனநிலை. நமது உடைகள் மாறியிருக்கின்றன; நமது பழக்கவழக்கங்கள் மாறியிருக்கின்றன; நமது கருவிகள் மாறியிருக்கின்றன; நமது தொழில்நுட்பங்கள் மாறியிருக்கின்றன. ஆனால் நூற்றாண்டுக்காலமாகப் பேரழிவாய், பெருநோயாய் சாதியமனநிலை மட்டும் மாறவில்லை. கொரோனாவால் நாமே தீண்டப்படாதவராய்த் தற்காலிகமாய் மாறினாலும் அந்த சாதியமனநிலை மாறவில்லை.

நாளை கொரோனா ஒழிந்துவிடும். ஆனால் அதைவிட அதிகம் தொற்றக்கூடிய, அதிக ஆபத்தான சாதி மனநிலை ஒழியவேண்டும். அதற்கான சமூக மருத்துவர் டாக்டர் அம்பேத்கர். அதற்கான மருந்து அம்பேத்கரைப் படிப்பது; அம்பேத்கரை உள்வாங்குவது; அம்பேத்கரைப் பரப்புவது.

நோயிலிருந்து மீள்வோம்!