Published:Updated:

16 வயதில் உயிர் நீத்த இந்தியாவின் புனித மகள்! - பிறந்ததின சிறப்புப் பகிர்வு #VikatanInfographics

தில்லையாடி வள்ளியம்மை

தனது 16 -வது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலைப் போராளி' வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

16 வயதில் உயிர் நீத்த இந்தியாவின் புனித மகள்! - பிறந்ததின சிறப்புப் பகிர்வு #VikatanInfographics

தனது 16 -வது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலைப் போராளி' வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

Published:Updated:
தில்லையாடி வள்ளியம்மை

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதை அல்ல. அவர் வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தார் என்பதையே சரித்திரம் பேசும். அந்த வகையில், 16 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார், வீரமங்கை வள்ளியம்மை. சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் எனப் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற காலகட்டம் அது. குறிப்பாக, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை இந்தியா எதிர்த்துக்கொண்டிருந்த சமயம், தென்னாப்பிரிக்காவில் இடம்பெயர்ந்துள்ள இந்தியர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார், மகாத்மா காந்தி. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் காந்தி. அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம் பாடி அருகிலுள்ள தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி - மங்களத்தம்மாள் தம்பதியினர், பிழைப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தனர். 1898-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி, 'ஜோகனஸ்பர்க்' நகரில் இவர்களுக்கு மகளாகப் பிறந்தார், வள்ளியம்மை.

தில்லையாடி வள்ளியம்மை
தில்லையாடி வள்ளியம்மை

அங்கு, இந்தியர்களுக்கு எதிராகப் பல்வேறு விதமான கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. நாடு முழுவதும் எப்போதும் ஏதாவது ஒரு போராட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். அதில், இந்திய மக்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பார், காந்தி. 1906ல் தென்னாப்பிரிக்காவில், இந்தியர்கள் அனைவரும் ஆசிய விவகாரத் துறையிடம் தமது பெயரையும் கைரேகையையும் பதிவுசெய்து, அனுமதி அட்டையைப் பெற வேண்டும் என்ற அவசரச் சட்டம் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, காந்தி தலைமையில் அகிம்சை வழியில் பேரணி நடத்தப்பட்டது. இந்தியர்கள் டிரான்சுவல் மாகாணத்திற்குள் நுழைவதைத் தடுக்க டிரான்சுவல் குடியேற்ற நுழைவு தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டது.

அதேபோல் 1913-ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் கிறித்துவ மதச்சடங்கின்படி, திருமணப்பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியாகாது என மார்ச் 14-ம் தேதி, கேப் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்தியர்களுக்கான உரிமையைப் பெறுவதற்காக 'ஜோகன்னஸ்பர்க்'கில் இருந்து 'நியூகேஸில்' நோக்கி அகிம்சை முறையிலான போராட்டத்தை நடத்தினார் காந்தி. நடைப்பயணத்தில், உறுதிமொழித் தாளை எடுத்து, நடைப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிடம் காண்பித்து, 'இந்த உறுதிமொழித்தாளை யார் படிக்கிறீர்கள்' என்கிறார். அப்போது, 15 வயதே நிரம்பிய சிறுமியான வள்ளியம்மை ஓடி வந்து, 'நான் படிக்கிறேன்' எனக் கூறி, 'வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்' என்ற முழக்கத்துடன் நடைப்பயணம் புறப்படுகிறது.

தில்லையாடி வள்ளியம்மை
தில்லையாடி வள்ளியம்மை

காந்தியை சுட்டுக்கொல்ல தென்னாப்பிரிக்க போலீஸ் திட்டமிட்டு காந்தியின் முன்வந்து துப்பாக்கியைக் காண்பிக்க, அதைக் கண்ட சிறுமி வள்ளியம்மை, காந்தியின் முன்வந்து நின்று, 'இப்போது அவரைச் சுடு பார்க்கலாம்' என்று தைரியமாக நிற்கிறாள். வள்ளியம்மையின் நெஞ்சுரம் கண்டு, ''என்னைச் சுடவந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிச் சென்றான்" என்று காந்தி தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

நடைப்பயணத்தின் முடிவில், கலந்துகொண்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்படுகிறார்கள். வள்ளியம்மையும் கைதுசெய்யப்பட்டு, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. கைதான அனைவரும் 'இந்தியர்கள்' என்று பதிவு செய்வதைப் பார்த்த சிறை அதிகாரிகள், 'ஆப்பிரிக்கர்கள் என்று பதிவுசெய்ய வேண்டியதுதானே' என்று நக்கலாய்க் கேள்வி கேட்கிறார்கள். வள்ளியம்மையிடம் ஓர் அதிகாரி, 'இந்தியா என்ற ஒரு நாடே இல்லையே, உங்களுக்கு ஒரு கொடியும் கிடையாதே' என்று கேட்கிறார். உடனே வள்ளியம்மை, தான் அப்போது உடுத்தியிருந்த துணியின் ஓரத்தைக் கிழித்து, 'இதுதான் இந்தியாவின் கொடி. இனி இதற்கு ஒரு நாடும் உண்டுதானே' என்று பதிலளிக்கிறார். பின்னர், அனைவரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சிறையில், கடுமையான வேலை கொடுக்கப்பட்டதாலும் போதுமான தூக்கம் இல்லாததாலும், அரைகுறை சாப்பாடும் வள்ளியம்மையின் உடல்நிலையைப் பாதித்தது. உடல்நிலை மிகவும் மோசமான நிலையிலிருந்த காரணத்தால், 'உரிய அபராதத் தொகை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்' என்கிறார் சிறை அதிகாரி. அதற்கு வள்ளியம்மை, 'அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேயே சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்ட மாட்டேன்' என்றார்.

ஒரு கட்டத்தில், காந்திக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக உடன்பாட்டின்படி , அனைவருக்கும் விடுதலை கிடைக்கிறது. வள்ளியம்மையும் விடுதலை கிடைத்து வீட்டுக்கு வருகிறார். விடுதலையான பத்து நாளில், 1914-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி, உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். தனது 16-வது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலைப் போராளி' வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

நினைவு மண்டபம்
நினைவு மண்டபம்

அவரின் உடலுக்கு தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியபின், ஜோகன்ஸ்பர்க்கில் அடக்கம் செய்யப்பட்டார். வள்ளியம்மையின் இறப்பின்போது காந்தி வரமுடியவில்லை என்றாலும், அவருடைய கல்லறைக்குச் சென்று இறுதியஞ்சலி செலுத்தினார். பின்னர், ''இவர்தான் இந்தியாவின் மேன்மையான பெண் குழந்தை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கவேண்டிய சுயநம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகிய உயர்ந்த அடையாளங்களைக் கொண்டவர் வள்ளியம்மை என்று பெருமையாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தியா உள்ளவரை தென்னாப்பிரிக்க சத்தியாகிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயரும் நீங்காத இடம்பெற்றிருக்கும்'' என்றார்.

 நினைவுத் தூண்
நினைவுத் தூண்

தென்னாப்பிரிக்காவில், வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை 1914-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, காந்தியடிகள் திறந்துவைத்தார். 1915ல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோது, தில்லையாடி சென்று வள்ளியம்மையின் தியாகத்தை நினைத்து அங்கிருந்த மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டார். 'பலன் ஏதும் கருதாமல், தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றிகண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்' என்று வள்ளியம்மையின் வீரத்தைக் குறித்து அவருடைய சுயசரிதத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சல்தலை
அஞ்சல்தலை

'இந்தியாவின் புனித மகள்' என்றும் கூறியுள்ளார். கைத்தறி நெசவாளர் சங்கம் சென்னையில் அமைத்த விற்பனை நிலையத்திற்கு, 'தில்லையாடி வள்ளியம்மை மாளிகை' என்று பெயர் சூட்டிக் கௌரவிக்கப்பட்டது. வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் 1915-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு சார்பில் நினைவுத் தூண் மற்றும் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 1997-ம் ஆண்டு, வள்ளியம்மையின் நூற்றாண்டின்போது ஜோகன்ஸ்பர்க் நகரில் நெல்சன் மண்டேலாவின் முயற்சியால் வள்ளியம்மையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு, விழா எடுக்கப்பட்டது.

வள்ளியம்மையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் விதமாக இந்திய அஞ்சல் துறை, அவரின் புகைப்படத்துடன் அஞ்சல்தலை வெளியிட்டு மரியாதை கொடுத்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு, நாகப்பட்டினத்தில் உள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் நூற்றாண்டு நினைவு விழா கொண்டாடப்பட்டது. அதுமட்டுமின்றி, அவரின் நினைவாகக் கட்டப்பட்ட பொதுநூலகம், தற்போதுவரை செயல்பட்டுவருகிறது.

வள்ளியம்மை சிலை
வள்ளியம்மை சிலை
16 ஆண்டுகளே மண்ணில் வாழ்ந்தாலும், தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களுக்காகப் போராடிய வீரமங்கையின் பிறந்த தினத்தில், வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றுவோம்.