Published:Updated:

இன்று 95-வது பிறந்த நாள்... போராட்டக் களத்தில் நல்லகண்ணு!

நல்லகண்ணுவை வாழ்த்திய கனிமொழி

95-வது வயதில் அடியெடுத்துவைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர்.நல்லகண்ணு, தன் பிறந்த நாளில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார்.

இன்று 95-வது பிறந்த நாள்... போராட்டக் களத்தில் நல்லகண்ணு!

95-வது வயதில் அடியெடுத்துவைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர்.நல்லகண்ணு, தன் பிறந்த நாளில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார்.

Published:Updated:
நல்லகண்ணுவை வாழ்த்திய கனிமொழி

ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்வது நம் நாட்டு அரசியலில் சகஜம். ஆனால், ஒரே ஒரு தலைவரைப் பற்றி மாத்திரம் கொள்கை முரண்பாடு கொண்ட மாற்றுக் கட்சியினர்கூட மிகுந்த மரியாதையோடுதான் பேசுவார்கள். காரணம், எளிமையும் நேர்மையும் மிகுந்த தலைவர் அவர். பல தியாகத் தழும்புகளைச் சுமந்தவர். அடி, உதை, அவமானம், சிறைவாசம் என அனைத்தையும் சந்தித்தப் பிறகும் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பவர். அவர்தான், சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஆர்.நல்லகண்ணு.

ஆர்ப்பாட்டத்தில் நல்லகண்ணு
ஆர்ப்பாட்டத்தில் நல்லகண்ணு

இன்று பிறந்தநாள் காணும் நல்லகண்ணுவுக்கு 95 வயதாகிறது. அன்றைக்கு `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்ற நல்லகண்ணு, அவரது பிறந்தநாளான இன்று சென்னை சேப்பாக்கத்தில் படைப்பாளிகள் பலரும் சேர்ந்து நடத்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அங்கு திரண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன், தி.மு.க-வின் எம்.பி-யான கனிமொழி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1925, டிசம்பர் 25-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு கான்பூரில் நடைபெற்றது. அதன் மறுநாளான டிசம்பர் 26-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நல்லகண்ணுவுக்கும் ஒரே வயது. 84 ஆண்டுக்கால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நல்லகண்ணு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

நல்லகண்ணு
நல்லகண்ணு
புகைப்படம் : ராகேஷ்

"நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோது, விடுதலைப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. எங்கள் பகுதியில் நடைபெற்ற எல்லா போராட்டங்களிலும் நானும் என் நண்பர் முத்தையா பிள்ளையும் கலந்துகொண்டு, முதல் வரிசையில் நிற்போம். `என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்... என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்...' என்ற பாடலை வீதிவீதியாகப் பாடிச்செல்வோம். வீட்டுக்குத் திரும்பிய பிறகு அந்தப் பாடல் நினைவுக்கு வரும். அப்போது, நான் அழுதுவிடுவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் கவனம் முழுவதும் போராட்டத்தில்தான் இருந்தது. பள்ளிக்கூடம் ஒரு பொழுதுபோக்கு இடமாகத்தான் இருந்தது. ஆனாலும், வகுப்பில் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் பெற்று பரிசுகள் வாங்கியுள்ளேன். ஒருமுறை பள்ளிக்கூட ஆய்வுக்கு மாவட்டக் கல்வி அதிகாரி வந்தார். அப்போது, என்னுடைய நோட்டில் பகத்சிங் பற்றி எழுதிவைத்திருந்தேன். அதை என்னுடைய வாத்தியார் பார்த்துவிட்டு, கோபத்தில் என்னைப் பெஞ்சு மீது நிற்கவைத்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த எனக்கு, பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டேன். 1943-ம் ஆண்டு எனக்கு 18 வயது. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் கிளைச் செயலாளரானேன். அந்த நேரத்தில் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

நல்லகண்ணு
நல்லகண்ணு

ஸ்ரீவைகுண்டத்தில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் ஒரு கோட்டை இருந்தது. அதற்குப் பத்தினிக்கோட்டை என்று பெயர். அதற்குள் அந்நிய ஆண்கள் யாரும் செல்ல முடியாது. ஆண் குழந்தைகளைக்கூட அனுமதிக்க மாட்டார்கள். அதிகாரிகள் கூட கவர்னரிடம் அனுமதி வாங்கித்தான் கோட்டைக்குள் செல்ல வேண்டும். அந்தக் கோட்டைக்குள் நெல்மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அது குறித்து ஆர்.டி.ஓ-வுக்குக் கடிதம் எழுதினேன். உடனே, அதிகாரிகள் கோட்டைக்குள் சென்று ஆயிரம் மூட்டை நெல் பறிமுதல் செய்தனர். அந்தச் சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாவடுதுறை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர், நாங்குநேரி ஜீயர் என அந்தப் பகுதியில் மடங்களுக்கு ஏகப்பட்ட சொத்து உண்டு. மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்பவர்கள், எதையுமே பூமியைத் தோண்டி வைக்கக் கூடாது. அம்மி, ஆட்டுக்கல்லை கூட பூமியைத் தோண்டி புதைக்கக் கூடாது. நிலைக்கதவு போடக் கூடாது. வீட்டு முன்பாக திண்ணை போடக் கூடாது. `கிளம்பு’ என்று சொல்லிவிட்டால், தட்டுமுட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட வேண்டும். ஆகவே, அவர்களுக்கு `ஓடுங்குடிகள்’ என்று பெயர். மடங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினோம். ஆதிக்க சக்திகளுக்கு எங்கள் மீது கடும் கோபம். ஆனாலும், எங்கள் போராட்டம் வெற்றிபெற்றது. `ஓடுங்குடிகள்’ எல்லாம் நிரந்தரக்குடிகளாக மாறின.

நாங்குநேரி பகுதியில் விவசாயிகளின் உரிமைகளுக்காக சங்கம் அமைக்கப்பட்டது. `தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்' என்ற முழக்கத்தை முன்வைத்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினோம். காவல்துறையினரின் அச்சுறுத்தல், மிராசுதார் அடியாட்களின் மிரட்டல்கள், அவர்களுடன் மோதல்கள் என்பதெல்லாம் அந்த நாள்களில் எங்கள் வாழ்க்கையில் சகஜமாக இருந்தது” என்றார் நல்லகண்ணு.

1950-ம் ஆண்டு நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது நெல்லை சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு போடப்பட்டது. மத்திய, மாநில அரசுகளைக் கவிழ்க்க பொது வேலைநிறுத்தங்களுக்குத் தூண்டிவிடுவது, ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்துவது, அதற்காக மாவட்டம் முழுவதும் வன்முறை மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது, அதற்குத் தடையாக இருப்பவர்களைத் தீர்த்துக்கட்டுவது, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயுதப்பயிற்சி அளிப்பது, வெடிகுண்டுகள் தயாரிப்பது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

நல்லகண்ணு
நல்லகண்ணு

மீளவிட்டான் என்ற இடத்தில் சரக்கு ரயில் வண்டியைக் கவிழ்த்தது, போலீஸ் உளவாளி ஒருவர் கொலை செய்யப்பட்டது, பதுக்கல் நெல்லைக் கண்டுபிடித்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தது எனப் பல குற்றச்சாட்டுகளில் நல்லகண்ணு உட்பட 109 பேர் 1949-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில், 1952-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நல்லகண்ணு உள்ளிட்ட பலருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 27 வயது.

மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட நல்லகண்ணுவுக்கு `கைதி எண் 9658' வழங்கப்பட்டது. சிறையில் மனித உரிமை மீறல்கள் ஏராளமாக நடந்தன. அதற்கு எதிராக சிறைக்கு உள்ளேயும் பல போராட்டங்களை நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள் நடத்தினார்கள். அதன் பிறகு, சிறைக் கைதிகளுக்குப் பல உரிமைகள் கிடைத்தன. சிறையில் ஒரு நூலகம் இருந்தது. அதன் பொறுப்பாளராக நல்லகண்ணு இருந்தார். கைதிகளுக்குக் கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று சிறைக்குள் அவர் போராடினார். அதில் வெற்றியும் பெற்றார். அதன் பிறகு சிறைக்குள் இருந்த பல தோழர்கள் இ.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். அவர்களுக்கு நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆசிரியர்களாக இருந்தனர்.

நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்கள் வலுத்தன. அதையடுத்து, அவர்களை விடுதலை செய்வதென்று அரசு முடிவு செய்தது. 1956 டிசம்பர் 13-ம் தேதி அவர்களின் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. ஏழு ஆண்டு கால சிறைவாசத்துக்குப் பிறகு நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள் வெளியே வந்தனர்.

ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தாலும், சமூக விடுதலையும் பொருளாதார விடுதலையும் அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை. ஆகவே, மக்களுக்கான போராட்டங்களை இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் நல்லகண்ணு. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை நடத்தி, அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். தாமிரபரணி நதியை மணல் மாஃபியாக்களிடமிருந்து பாதுகாத்தார் நல்லகண்ணு. அதற்காக உயர் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி, அவரே வாதாடினார். தாமிரபரணியில் மணல் அள்ளத் தடைவிதித்தது நீதிமன்றம்.

மனைவி ரஞ்சிதம் அம்மாளுடன் நல்லகண்ணு
மனைவி ரஞ்சிதம் அம்மாளுடன் நல்லகண்ணு

நல்லகண்ணுவுக்கு சொந்த வீடு கிடையாது. சென்னை சி.ஐ.டி நகரில் அரசுக் குடியிருப்பில் மாத வாடகைக்கு வசித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்பு, அந்த வீட்டிலிருந்து அவரைத் திடீரென காலிசெய்யச் சொன்னது அரசு. எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், வேறொரு வாடகை வீட்டுக்குப் போய்விட்டார்.

பதவிகளுக்கு ஆசைப்படாத அவரை, 1999 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது கம்யூனிஸ்ட் கட்சி. அதில் அவர் தோற்றுப்போனார். எளிமையான, நேர்மையான அரசியல்வாதிகள் ஆட்சி செய்தால்தான் நாடு உருப்படும் என்று பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சமூகம்தான், நல்லகண்ணுவைத் தோற்கடித்தது. அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமத்துவ சமூகம் என்கிற தான் கொண்ட லட்சியத்துக்கான போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்து வருகிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism