Published:Updated:

'பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று!’ - வள்ளலார் போற்றிய பசிதீர்க்கும் வழிபாடு

வள்ளலார்

தன் ஆன்மிக வாழ்வின் பொருளாகப் பசிப்பிணி தீர்ப்பதைக் கொண்டார். அதையே பேரறமாகவும் உபதேசிக்கத் தொடங்கினார்.

'பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று!’ - வள்ளலார் போற்றிய பசிதீர்க்கும் வழிபாடு

தன் ஆன்மிக வாழ்வின் பொருளாகப் பசிப்பிணி தீர்ப்பதைக் கொண்டார். அதையே பேரறமாகவும் உபதேசிக்கத் தொடங்கினார்.

Published:Updated:
வள்ளலார்

தமிழகம் அதிசய ஆன்மிக பூமி. சமூகத்துக்கு எத்தகைய ஆன்மிகம் தேவையோ அத்தகைய ஞானிகளை உலகுக்கு வழங்கும் பெருமை கொண்டது. மதங்களுக்கு உள்ளிருந்தே சாமானிய மக்களுக்கு ஆதாரவான குரல்களை உருவாக்கி அதிலிருந்து சமூக விடுதலைக்கு வழி கண்ட ஞானிகள் பலர் தமிழகத்திலிருந்து தோன்றினர். வைதிகத்திலிருந்து பிறந்த ராமாநுஜரும் சித்தமரபில் தோன்றிய திருமூலரும் வேறுவேறு சித்தாந்தங்களைப் பேசுவதுபோலத் தோன்றினாலும் அதன் அடிநாதம் சாமானியர்களின் விடுதலைதான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒலித்த அப்படி ஒரு குரல்தான் வள்ளலார்.

வள்ளலார்
வள்ளலார்

1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி ராமையாபிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகனாக அவதரித்தார் வள்ளலார். ராமலிங்கம் என்ற இயற்பெயரோடு வளர்ந்த வள்ளலார் சிறுவயதிலிருந்தே ஆன்மிக ஈடுபாடுகொண்டவராகத் திகழ்ந்தார். குழந்தையாக இருந்தபோது ஞானப்பால் ஊட்டியதுபோல, வள்ளலார் வளரிளம் பருவத்தில் இருந்தபோது அன்னை வடிவுடையம்மனே அவரின் அண்ணியின் உருவில் வந்து அன்னம் ஊட்டியதாகச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் மீது பற்றுக்கொண்ட வள்ளலார் நாளடைவில் சமூகத்துக்குத் தேவையான புதிய ஆன்மிக வழிகாட்டுதலை உருவாக்க விரும்பினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு காலகட்டம்தான் ஞானிகளை உருவாக்குகிறது என்று சொல்வதுண்டு. நம் பாரத தேசம் வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அந்நியர் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்தது. சுதந்திரம் மட்டும் பிரச்னையாக இல்லை. சாமானியர்கள் வாழ்வதுகூடப் பிரச்னையாக இருந்தது. 19-ம் நூற்றாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 9 மாபெரும் பஞ்சங்கள் தோன்றின. உண்ண உணவின்றி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிந்தனர். 1837 - 38-ம் ஆண்டில் ஆக்ராபஞ்சம், 1860 - 61-ல் மே தோவாப் பஞ்சம், 1865 - 67 ஒடிசா பஞ்சம் , 1868 -70 வரை ராஜபுதனா பஞ்சம், 1873 - 74 வரை பீகார் பஞ்சம் 1876 -78 வரையிலான சென்னை மாகாணப் பஞ்சம், 1888 -89 வரையிலான ஒடிசா, பீகார் பஞ்சங்கள், 1896 -1900 வரையில் இந்தியாவின் பல்வேறு மாகாணங்களில் நிகழ்ந்த பஞ்சங்களில் பல லட்சம் மக்கள் மடிந்தனர்.

வள்ளலார் பொன்மொழி
வள்ளலார் பொன்மொழி

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட வள்ளலார் தேவார திருவாசகங்களின் மேல் ஈடுபாடுகொண்டவராகத் திகழ்ந்தார். தில்லை அம்பலவாணரிடம் அவர் கொண்ட பக்தியின் காரணமாக அங்கு சில காலம் தங்கி ஆன்மிக உரைகளையும் நிகழ்த்தி வந்தார். கண்மூடித்தனமான வழக்கங்களைக் கண்டு அவர் மனம் வருந்தியது. அதே நேரம் நாடெங்கும் பசியால் மக்கள் செத்து மடியும் செய்தியும் வந்து குவிந்து அவர் மனதை வருத்தியது.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வருந்தும் வள்ளல்பிரான் மக்கள் பசிப்பிணி கொண்டு சாவதைப் பொறுப்பாரா என்ன? உண்ண உணவின்றி மக்கள் சாவதை அனுமதிக்கும் ஆட்சியைக் 'கருணையிலா ஆட்சிக் கடுகி ஒழிக' என்று பாடினார்.

தன் ஆன்மிக வாழ்வின் பொருளாகப் பசிப்பிணி தீர்ப்பதைக் கொண்டார். அதையே பேரறமாகவும் உபதேசிக்கத் தொடங்கினார். நாடு முழுமையையும் ஆட்டிப் படைக்கும் பசி அரக்கன் தான் வாழும் தமிழ் நிலத்திலும் கால் பதிப்பானோ என்று அஞ்சினார். அதுவே அவரது ஆன்மிக வாழ்வின் பாதையைப் புதிதாக மாற்றியது.

வள்ளலார்
வள்ளலார்

'பசி தவிர்ப்பதே முக்கியம்; அன்னதானமே பிரதானம்; பழங்கஞ்சியானாலும் வழங்குவது நன்று' (திருவருட்பா. 873) என்பதை தன் உபதேசமாக மாற்றினார். போகும் இடமெல்லாம் அன்னதானத்தின் மகிமையை எடுத்துரைத்து வந்தார்.

மனிதர்கள் இறந்த பின் உடலைத் தீக்கிரையாக்குவதால் என்ன பயன்? அதைக் கழுகுகளுக்கு இரையாக்கினாலாவது பலன் என்று சொல்வது மனித வாழ்வில் உடலும் பிற உயிர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதன் நீட்சியாகவே கருதலாம்.

வள்ளலார் சுவாமிகள் 1874 -ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி ஜோதியில் கலந்தார்

`அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே குருவருள் நெறி' என்றும் 'சீவகாருண்யமே முக்தி என்ற வீட்டின் திறவுகோல்’ என்றும் 'உயிர்களைப் பசியிலிருந்து காப்பதும் பிணியிலிருந்து விடுவிப்பதும், இயலாதோரை பேணிக்காப்பதும் இறைத்தொண்டு என்றும் ஆன்மிக வாழ்வுக்குப் புது இலக்கணம் படைத்தார்.

ஆனால், அந்தக்கால கட்டத்தில் அவரின் உபதேசங்களைப் பலர் ஏற்கவில்லை. குறிப்பாக, அவர் உயிர்க்கொலையை அவர் எதிர்த்தது புலால் உண்பவர்களிடையே பெரும் சிக்கலாக விளங்கியது. 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' என்று வள்ளல் பெருமான் மனம் வருந்திச் சொன்னதாகச் சொல்லப்படும் வாசகங்கள் திருமுறைகளில் காணப்படவில்லை என்றாலும் அத்தகைய உள வருத்தம் அவருக்குள் இருந்திருக்கலாம் என்பது பலரின் கருத்து.

வள்ளலார் சுவாமிகள் 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி ஜோதியில் கலந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் அஞ்சிய பசிப்பிணி அரக்கன் தமிழ் மண்ணில் கால்பதித்தான். 1876-ம் ஆண்டு வரலாற்றில் பதிவான தாது வருடத்துப் பஞ்சம் தமிழ் மண்ணில் பரவியது. 'தருமமிகு சென்னை' என்று வள்ளலாரால் புகழப்பட்ட சென்னை மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி இறந்தனர்.

வள்ளலார் பொன்மொழி
வள்ளலார் பொன்மொழி

'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்பது காப்பிய மொழி. வள்ளலார் தன் வாழ்க்கை முழுமையையும் பசிப்பிணி போக்குவதற்கே செலவிட்டவர். கிராமப்புற நாகரிகமான விவசாயங்கள் குறைந்து நகர்மயமாகிவரும் இந்த நாளில் உணவின் தேவையும் அதை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டிய தேவையும் அதிகரித்துவருகிறது. அதை முன்னெடுக்கும் அனைவருக்குமான வழியை வள்ளலார் ஏற்கெனவே அமைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றால் மிகையில்லை.