Published:Updated:

திருவருட்பாவின் ஆறாம் திருமுறை... பெரியார் ஏன் வெளியிட்டார்?!

சாமியார் எனச் சொன்னாலே நம் நினைவுக்கு வருவது… காவி உடை… சிம்மாசனம். இவையெல்லாம் இல்லாத ஓர் ஆன்மிகவாதி வாழ்ந்தார். அவர் வள்ளலார்!

Vallalar
Vallalar

மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் தேசத்துக்கு எதிராகவும் கருத்து சொன்னதாக மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்படும் கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 49 பிரபலங்கள், கடந்த ஜூலை 23-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினர்.

Vallalar
Vallalar

அப்போது, அது கடும் விவாதத்தைக் கிளப்பியது. சர்வதேச தளத்தில் இது நாட்டுக்கு அவமரியாதையை உண்டாக்கும் செயல் எனப் பலரும் அந்தக் கடிதத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர். கையொப்பமிட்ட பிரபலங்களோ, `நாங்கள் நாட்டில் நடப்பதைத்தான் சொன்னோம்' எனப் பதில் அளித்தனர். உச்சபட்சமாகக் கடிதம் எழுதியதற்காக, மிஜாப்பூர் நீதிமன்றத்தில் 49 பேரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு, பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

`நாட்டில் சமத்துவம் இல்லை, தேசத்தில் ஒற்றுமை இல்லை, மதரீதியாக தாக்குதல்கள் நடக்கின்றன. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என எதற்காகக் குரல் கொடுத்தனரோ, அந்தப் பிரிவுகளின் கீழே வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் நாம், அந்த வெள்ளை உடை தரித்த மனிதரை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. வெகுவாகப் பண்பட்டுவிட்டோம், நாகரிகமடைந்துவிட்டோம் எனச் சொல்லும் இந்த 21-ம் நூற்றாண்டிலேயே, நீதிக்காகக் குரல் கொடுத்தவர்களின் நிலை இப்படியெனில், 18-ம் நூற்றாண்டிலேயே அவன் குரல் கொடுத்திருக்கிறாரே? அப்படியென்றால், அவர் எத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்திருப்பார்.

Vikatan

அவர்மீதும் வழக்கு தொடுக்கப்பட்டதே… சமயத்துக்குள் இருக்கிற சாதிய பாகுபாட்டை, ஏற்றத்தாழ்வைச் சாடியதற்காக, சமதர்மத்தைப் போதித்ததற்காக, அவர் எழுதியது `திருவருட்பாவே இல்லை, மருட்பா எனவும், அவர் ஆன்மிகவாதியல்ல, இறை மறுப்பாளர் எனவும் மேடைதோறும் அவருக்கெதிராகக் கோஷங்கள் முன்வைக்கப்பட்டன.

Vallalar
Vallalar

எதிலும் தணியாத வெறுப்பு, இறுதியாக நீதிமன்றம்வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

இப்போது மிஜாப்பூர் என்றால், அவருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றம். சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பாக, அந்த வழக்கை எதிர்கொண்டது வேறு யாருமல்ல, தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும் தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கிய வள்ளலார் பெருமகன்தான், அவர். சாதிசமய பேதங்களை எதிர்த்துத் தமிழகத்தில் எழுந்த முதற்குரல், புரட்சிக்குரல் வள்ளலார் உடையது. அதனால்தான் அவர்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது

சாமியார் எனச் சொன்னாலே நம் நினைவுக்கு வருவது… காவி உடை… சிம்மாசனம்… இவையெல்லாம் இல்லாத ஓர் ஆன்மிகவாதி வாழ்ந்தார், இந்த மண்ணில். வாடிய பயிரைக் கண்டு வாடியதோடு மட்டுமல்லாமல், சாதிகளும், சமயங்களும் வேத ஆகமங்களும் மனிதனுக்கிடையே பிளவை உண்டாக்கக் கூடியவை என்றுணர்ந்து, அதற்கெதிரான பரப்புரையிலும், பாடல் புரட்சியிலும் ஈடுபட்டார்.

``மனிதர்களிடையே பிளவை, ஏற்றத்தாழ்வை உண்டாக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்; சமதர்மம் செழிக்க வேண்டும்" என்றார். அதனால்தான் கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார், வள்ளலாரின் திருவருட்பாவின் ஆறாம் திருமுறையை வெளியிட்டார். வெளியீடு எல்லா மக்களையும் சென்றுசேர வேண்டும் என்று எண்ணி மலிவு விலை பதிப்பாகவும், கட்டணச் சலுகை அளித்தும் விற்பனையை அதிகரித்தார். இந்த நூலை வியந்து அடிக்கடி விளம்பரமும் செய்தார், பெரியார்.

கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்க வேண்டாம். ஆணும் பெண்ணும் சமம். பெண்ணுக்கும் கல்வி அவசியம். சமய நூல்களைவிடத் திருக்குறளைப் படிப்பது சாலச் சிறந்தது.
வள்ளலார்

அது மட்டுமல்ல, எல்லோருக்கும் கல்வி அவசியம் என ஊர்ஊராகச் சென்று பரப்புரை செய்தார், வள்ளலார். கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்க வேண்டாம். ஆணும் பெண்ணும் சமம். பெண்ணுக்கும் கல்வி அவசியம். சமய நூல்களைவிடத் திருக்குறளைப் படிப்பது சாலச் சிறந்தது என்றார் வள்ளலார். தமிழகத்தில் பெரியார், திரு.வி.க போன்ற தலைவர்கள் முன்னெடுத்த பல சமூகப் போராட்டங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் வள்ளலாரே.

``சுயமரியாதை இயக்கத்துக்கு அவர்கள் (பெரியார்) தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்துபெற்ற பிள்ளையே சுயமரியாதையாகும். அந்தக் குழந்தை, தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்துவாழ்கிறது. அதன் வளர்ச்சி கண்டு யான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டார், திரு.வி.க.

Vallalar
Vallalar

அதுமட்டுமல்ல, 1866-ல் ஒடிசா மாநிலத்தில் உண்டான கொடிய பஞ்சம் நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் பட்டினியால் இறந்தார்கள். இந்தச் செய்தியை அறிந்த வள்ளலாரின் மனம் பதைபதைத்தது. அதனால்தான் 1867-ல் தருமசாலையை வடலூரில் நிறுவினார். அது, இன்றுவரை அணையா நெருப்பாகச் சுடர்விடுகிறது.

தமிழ் மொழியின் மீதும் தீராப்பற்றுக் கொண்டிருந்தார். துறவியாலும் துறக்க முடியாத பற்று தாய்மொழிப் பற்று என போற்றத்தக்க வாழ்ந்தார். சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர், சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகங்களைக் கொண்டவர், வள்ளலார். அவர், இறுதிவரையில் கடவுள் நம்பிக்கை உடையவராகவே இருந்தார். ஆனால் அது, இயற்கையுண்மை சார்ந்ததாக இருந்தது. ``பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும்" என்பதே அவர் நிலையாக இருந்தது.

தமிழகத்தில் இன்றவும் பக்தியின்பால் கோயில்களை நாடுவோர் கோடிகோடியாய் இருப்பினும், வட இந்திய அளவில் நிகழ்வது போன்ற மதச்சண்டைகள் நிகழாமல் இருக்க இந்த மண்ணின் அறப்பண்புதான் காரணம். அதற்கான மூலவர் நிச்சயமாக வள்ளலார்தான். இந்த மண்ணில் ஆன்மிகரீதியாக வள்ளலார் பெருமகனைப் பின்பற்றுவோர் பல லட்சமுண்டு. அவர்கள் அனைவரும் வள்ளலாரின் அறக்கருத்துகளைப் பரப்புவாரெனில், இன்னும் தமிழகம் தழைத்தோங்கும். மானுடம் செழித்தோங்கும்.

Vikatan