Published:Updated:

விஜயகாந்த், புரட்சிக் கலைஞர், கேப்டன்...! #HBDCaptain

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஜயகாந்த், புரட்சிக் கலைஞர், கேப்டன்...! #HBDCaptain
விஜயகாந்த், புரட்சிக் கலைஞர், கேப்டன்...! #HBDCaptain

விஜயகாந்த், புரட்சிக் கலைஞர், கேப்டன்...! #HBDCaptain

எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், ஒரு சினிமா ஹீரோவுக்கான தோற்றமும் இல்லாமல் `இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 150க்கும் மேற்பட்ட படத்தில் நடித்து இன்று `கேப்டன்' ஆக முன் நிற்கிறார் விஜயகாந்த். 

சுட்டெரிக்கும் மதுரை வீதிகளில் சுற்றிக்கொண்டு இருந்த விஜயராஜ், சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலகில் `விஜயகாந்த்' ஆக அறிமுகமானார். கமல், ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் திரை உலகில் ஆட்சி செய்து கொண்டு இருந்த சமயத்தில், தனக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்தவர். விஜயகாந்த் என்று சொன்னாலே... `ம்ஹூம்' என நாக்கைக் கடிப்பதும், சிவப்பு கண்களைக் கொண்டு கேமிராவை முறைத்துப் பார்ப்பதுதான் பலருக்கும் தெரியும். ஆனால், விஜயகாந்த் சாதனை பட்டியல் நிச்சயம் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பரதன், சேதுபதி ஐபிஎஸ், புலன் விசாரணை, ராஜ நடை, செந்தூரப் பூவே, அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி கந்திருந்தாள், சின்னக் கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் உள்படப் பல படங்களில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர். 

ரஜினி, கமல், சத்தியராஜ், பிரபு, கார்த்தி என அந்த காலத்தின் முன்னணி நட்சத்திரங்களின் 100வது படம் கூட வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடவில்லை. ஆனால், விஜயகாந்தின் 100வது படமான `கேப்டன் பிரபாகரன்' வெள்ளிவிழாவைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. கடனில் தமிழ் திரைப்பட மூழ்கியிருந்தபோது கடல் கடந்து தமிழ் சினிமா நட்சத்திரங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று நட்சத்திர கலை விழா நடத்தி கடனை அடைத்தவர் விஜயகாந்த். தனது படங்களில் தேசத் துரோகிகளிடம் கோபமாகப் பேசும்போது அதை எழுதி வைத்த வசனமாகப் படிக்காமல், தனது ஆழ்மனதில் இருந்து வரும் கோபங்களை வசனங்களாகப் பேசி நடிப்பில் அசத்திருப்பார். காமெடி கதாப்பாத்திரம் முதல் ஆக்‌ஷன் காட்சிகள் வரை தனது நடிப்பு மூலமாக ஈர்த்த ரசிகர்கள் ஏராளம். 

சிறந்த  குடிமகன்! 

நடிகர்களில் யாரும் செய்யாத அளவுக்கு ஏழை, எளிய மக்களுக்குப் பல வழிகளில் பெரும் பொருள் உதவி செய்தவர் விஜயகாந்த். இவரது சேவை மனப்பான்மை மற்றும் உதவும் குணத்துக்காக 2001-ல் `சிறந்த இந்திய குடிமகன்' விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டார். ஆனால், இன்று இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் `மீம்ஸ்' போட்டு விஜயகாந்தை கேலி செய்கின்றோம். தரம் தாழ்ந்து விஜயகாந்துக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கிறோம். வேறு எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத அளவுக்கு, விஜயகாந்தை மட்டும் கட்டம் கட்டுகிறோம். ஆனால், விஜயகாந்தின் செயல்பாடுகளையும், அவரது நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனிப்போருக்கு, அவர் மீதான மரியாதை அதிகரிக்குமே தவிர என்றுமே குறையாது. 

விஜயகாந்தின் பலம் மற்றும் பலவீனம் அவரது `சுபாவம்'தான். இவரின் சுபாவத்தை வைத்து நம்மில் பலர் அதிகம் கேளி செய்த தலைவர்தான் விஜயகாந்த். உங்களைக் கிண்டல் செய்தவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் மன்னிப்பு கோர ஆசைப்படுகிறேன். ஆனால், விஜயகாந்த் பிறரை போலப் பொய்யாக நடிக்கத் தெரியாமல், வெள்ளந்தியான, மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் அரசியல் தலைவர். மற்ற தலைவர்கள் போல் மனதில் இருப்பதை மறைத்துப் பேசுபவர் அல்ல. நிஜ உலகில் நடிக்கத்தெரியாத நல்ல மனிதரான விஜயகாந்தின் தற்போதைய பேச்சாற்றல் கவலையைத் தருகிறது. அவரின் பிரச்னை வயதும், உடல் நலமும்தான். 10 ஆண்டுக்கு முந்தைய விஜயகாந்தின் உடல்நலமும், பேச்சாற்றலும் தற்போது மட்டும் அப்படியே இருந்திருந்தால், இன்று நிலவும் அரசியல் வெற்றிடத்தை மிக எளிதாக நிரப்பி இருப்பார்?

உடல் நலத்தைப் பேணுங்கள் கேப்டன்... உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. 

மீண்டும் அரசியல் களத்தில் உற்சாகமாக இறங்குங்கள். அனைத்து பலமும் பெற்று கணீர் குரலோடு... வரணும்... பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வரணும்.

பிறந்த நாள் வாழ்த்துகள் கேப்டன் #HBDCaptain

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு