Published:Updated:

ஆங்கிலேயரிடம் ஆங்கிலத்தில் அசத்திய வேலுநாச்சியார்! பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆங்கிலேயரிடம் ஆங்கிலத்தில் அசத்திய வேலுநாச்சியார்! பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு
ஆங்கிலேயரிடம் ஆங்கிலத்தில் அசத்திய வேலுநாச்சியார்! பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு

ஆங்கிலேயரிடம் ஆங்கிலத்தில் அசத்திய வேலுநாச்சியார்! பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு

சிவகங்கைச் சீமையில் இருந்து வெள்ளையர்களை விரட்டியடித்த முதல் வீரப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் வேலுநாச்சியார். அவருடைய பிறந்த தினம் இன்று. வீரமங்கை ஜான்சிராணிக்கு முன்பே 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயேர்களுக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி, வேலுநாச்சியார். 


 

சிலம்பத்தில் குருவை வெல்லுதல்!

ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் தாய் முத்தாத்தாள் நாச்சியாருக்கும் பிறந்த ஒரே மகள் வேலுநாச்சியார். அரண்மனையில் ஆண் வாரிசு இல்லாத குறை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், ஆண்களைப்போன்றே வீர விளையாட்டுகளான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள்வீச்சு, வில்வித்தை முதலான வீரக்கலைகளில் நன்கு ஆர்வம்கொண்டு அதில் பயிற்சிபெறுகிறார் வேலுநாச்சியார். அந்தச் சமயத்தில் சிலம்ப ஆசிரியராக இருக்கும் வெற்றிவேல் என்பவர், இளவரசியாக இருந்த வேலுநாச்சியாருக்கும்  அரண்மனைக்குச் சென்று சிலம்பம் கற்றுக்கொடுக்கிறார். சிலம்பத்தில் வேலுநாச்சியாருக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு மகிழும் வெற்றிவேல், அதிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறார்...

விரைவிலேயே வேலுநாச்சியாரும் அதை கற்றுக்கொள்கிறார். முழுமையாகப் பயிற்சி முடித்த வேலுநாச்சியாருக்குப் போட்டிக் களம் ஆரம்பமாகிறது. அதுவும் தனக்குச் சிலம்பம் கற்றுக்கொடுத்த குருவுடன். இருவரும் சரியாய் மோத... ஒருகட்டத்தில், குரு தோல்வியைச் சந்திக்கிறார். தான் இளவரசி என்பதால்தான் குரு நம்மை ஜெயிக்கவைத்துவிட்டதாக நினைத்து அவர் காலில் விழுந்து தம்மை ஆசிர்வதிக்கும்படி வேண்டுகிறார் வேலுநாச்சியார். அவரோ, இளவரசி தம் காலில் விழுவதா என்று நினைத்துப் பின்னோக்கி நகர்கிறார். ஆனாலும், இளவரசி அவரை விடுவதாக இல்லை. பின்னர், அவரை ஆசிர்வதிக்கிறார். இதைக் கண்டு சந்தோஷமடைகிறார் விஜயரகுநாத சேதுபதி.

புலியிடமிருந்து கணவனைக் காப்பாற்றுதல்!

இப்படிப் போர்ப் பயிற்சிகளுடன் பிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் நன்கு தேர்ச்சிப் பெற்று நல்ல திறமைசாலியாகத் திகழ்கிறார், வேலுநாச்சியார். இந்தச் சூழ்நிலையில் தன் இளமைப் பருவத்திலேயே சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கைச் சீமைக்கு ராணியாகிறார். திருமணம் முடிந்த சில தினங்களில், தேன் நிலவுக்காகக் குற்றாலம் செல்கின்றனர் தம்பதிகள் இருவரும். அங்கு மகிழ்ச்சியுடன் இருக்கும்வேளையில், புலி ஒன்று முத்துவடுகநாதரைத் தாக்குகிறது. புலியிடமிருந்து தப்பிப்பதற்காக மிகவும் கடுமையாகப் போராடுகிறார் முத்துவடுகநாதர். ஒருகட்டத்தில், புலி அவரைக் குதறி தள்ளயிருக்கும் சூழ்நிலையில், புலியின் அடிவயிற்றை நோக்கி உதைவிடுகிறார் வேலுநாச்சியார். உதைபட்ட புலி, முத்துவடுகநாதரை விட்டுவிட்டு வேலுநாச்சியார் மீது பாயத் தொடங்கியது. இதையறிந்து முன்னெச்சரிக்கையாக ஒரு மரத்துக்கு முன் நிற்கும் வேலுநாச்சியார், அது வேகமெடுத்து தன்மீது பாய வரும்போது... சற்றே அங்கிருந்து விலகுகிறார். இதனால், புலி அந்த மரத்தின்மீது மோதி இறக்கிறது. தன் மனைவி புலியைக் கொன்ற விதத்தையும், தன்னைக் காப்பற்றிய விதத்தையும் பார்த்து... பெருமிதம் கொள்கிறார் முத்துவடுகநாதர்.

ஆங்கிலத்தில் அசத்திய வேலுநாச்சியார்!

இந்த நிலையில், நீண்டகாலமாகக் குழந்தை இல்லாமல் இருந்த வேலுநாச்சியாருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு 'வெள்ளச்சி' எனப் பெயர்சூட்டிச் சீமையே கொண்டாடுகிறது. நாள்கள் நகர்கின்றன. ஒருநாள், கப்பம் கேட்டு முத்துவடுகநாதரைச் சந்திக்கிறார் ஓர் ஆங்கிலேயர். அவர், ஆங்கிலத்தில் தரக்குறைவாக முத்துவடுகநாதரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கிலம் புரியாமல் தவிக்கிறார் மன்னர். அவருடைய அமைச்சரான தாண்டவராயரும் இல்லாததால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். இந்தச் செய்தியறிந்து வெளியில் வந்த வேலுநாச்சியார், ஆங்கிலத்தில் பேசி அசத்துகிறார். வந்த ஆங்கிலேயரோ தலைகுனிந்து நிற்கிறார். அவரிடம், திட்டவட்டமாகக் கப்பம் கட்ட முடியாது என்று தெரிவிக்கிறார் வேலுநாச்சியார். வந்தவழியே நடையைக் கட்டுகிறார் ஆங்கிலேயர். தன் மனைவிக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதே அப்போதுதான் முத்துவடுகநாதருக்கே தெரியவருகிறது. அதைக் கண்டு அவர் மட்டுமல்ல... அரண்மனையே பெருமைப்படுகிறது.

இடிந்துபோன வேலுநாச்சியார்!

இப்படிப் பலவித திறமையோடும், பெருமையோடும் விளங்கிய  வேலுநாச்சியார், திருமணமான கொஞ்ச காலத்திலேயே சோகத்தையும் நாட்டையும் சுமக்கவேண்டிய நிலைக்கு ஆளாகிறார். முத்துவடுகநாதர், கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படையும் நவாப் படையும் இணைந்து அவர்மீது படையெடுக்கின்றன. காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதரும் அவரது இளைய ராணியான கௌரி நாச்சியாரும் வீரமரணமடைகிறார்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் வேலுநாச்சியார் இடிந்துபோகிறார். என்னதான் வீரமங்கையாக இருந்தாலும் கணவனின் மரணம், மனைவிக்குக் கடும் அதிர்ச்சியைத்தானே தரும். அந்த அதிர்ச்சியில்தான் வேலுநாச்சியாரும் இருந்தார். அதிலிருந்து அவரை மீளச் செய்வதற்குத் தயாராயினர், பிரதானி தாண்டவராயரும், அவருடைய படைத் தளபதிகளான  மருது சகோதரர்களும். முதலில், அவர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டனர். பிறகு, வேலுநாச்சியாருக்கு நம்பிக்கை வாக்குறுதிகளைக் கொடுத்தனர். எப்படியாவது இழந்த சிவகங்கைச் சீமையை மீட்டே தீருவோம் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது.

நாட்டையும், மக்களையும் காப்பதற்காகத் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார் வேலுநாச்சியார். சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், தண்டவராயர் மற்றும் மருது சகோதரர்கள் துணையுடன் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சி பாளையத்துக்குச் தப்பிச் சென்றார். ஏழாண்டுக் காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாச்சிக் கோட்டை அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறிமாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தார் வேலுநாச்சியார். இதற்கிடையில்,  தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. இந்த நிலையில் தாண்டவராயர் முயற்சியினால், சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்துபேசி... விடுதலைப் படை ஒன்றை உருவாக்கினர்.

வேலுநாச்சியார் கடிதம்!

இந்த நிலையில், விருப்பாச்சிப்பாளையத்தில் தங்கியிருந்த வேலுநாச்சியார், திண்டுக்கல்லில் இருந்த மைசூரு மன்னர் ஹைதர் அலியைச் சந்தித்து ஆங்கிலேயர்களின் எதிர்ப்பு குறித்து உருதுமொழியில் விளக்கிப் பேசினார். இவரின் திறமையைக் கண்டு வியந்து நின்ற ஹைதர்அலி, போருக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்து மகிழ்ச்சியோடு அனுப்பிவைத்தார். அதன் பிறகு ஹைதர் அலிக்கு, தாண்டவராயர் மூலமாகக் கடிதம் ஒன்றை எழுதினார் வேலுநாச்சியார். அதில், ''5,000 குதிரைகளையும் 5,000 குதிரை வீரர்களையும் அனுப்பிவைத்தால் அவர்களுடன் சேர்ந்து போரிட்டு இரண்டு சமஸ்தானங்களையும் ஆற்காடு நவாப்பிடமிருந்து மீட்க முடியும்'' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில், வேலுநாச்சியாருக்கு உதவியாக இருந்த தாண்டவராயர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துபோனார். அதன்பின், வேலுநாச்சியார் நேரடியாக அரசியல் விவகாரங்களில் ஈடுபடலானார். அதற்காக மருது சகோதரர்களையும் அந்தப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார் வேலுநாச்சியார். 

ஹைதர் அலி கடிதம்!

ஆற்காடு நவாப்பையும் ஆங்கிலேயர்களையும் ஒழித்துக்கட்ட ஹைதர் அலி முடிவுசெய்து, அதற்கான திட்டங்களை வகுத்தார். இதற்கிடையில், ''சிவகங்கைச் சீமையை ஆற்காடு நவாப்பிடமிருந்து மீட்பதற்காக நீங்கள் கேட்ட படைகளைத் திண்டுக்கல் கோட்டை அருகே வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என வேலுநாச்சியாருக்குக் கடிதம் அனுப்பினார் ஹைதர் அலி. அதன்படி வேலுநாச்சியார், அந்தப் படைகளோடு சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார்.  படைகளோடு திரும்பி வரும் வழியில் ஆற்காடு நவாப் படைகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தின. அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு வரும் வழியில், மதுரை கோச்சடை என்னுமிடத்தில் ஆங்கிலேயர் - ஆற்காடு நவாப் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது வேலுநாச்சியார், கொரில்லா போர்முறையைப் பயன்படுத்தி அந்தப் படைகளை ஓடஓட விரட்டியத்தார். தனது படைகளைச் சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து கொரில்லா தாக்குதல் நடத்தி இழந்த ராஜ்ஜியங்களை மீட்டார் வேலுநாச்சியார்.

கொல்லங்குடி காளிகோயில்!

காளையார்கோவில் பகுதியை மீட்பதற்காக வேலுநாச்சியார் படைகள் மறைந்திருப்பது பற்றி ஆங்கிலேயப் படைத் தளபதிகளுக்குத் தகவல் கிடைக்கிறது. இதையடுத்து, காட்டுக்குள் ஆங்கிலேயப் படைத் தளபதிகள் சுற்றி வரும் வழியில் உடையாள் என்கிற பெண்ணிடம் விசாரிக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு அனைத்தும் தெரிந்தாலும் காட்டிக் கொடுக்க மறுக்கிறார். இதனால், கோபமுற்ற ஆங்கிலேயர்கள் உடையாளை வெட்டி வீசிவிடுகிறார்கள். இந்தத் தகவல் வேலுநாச்சியாருக்குத் தெரிந்ததும் தமக்காக உயிரைவிட்ட அந்தப் பெண்ணுக்காக வீரக்கல் ஒன்றை நட்டுத் தமது திருமாங்கல்யத்தை முதல்காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். அந்த வழிபாடு அப்படியே தொடர்ந்து இன்றைக்கு கொல்லங்குடி காளிகோயிலாக இன்றும் அப்பகுதி மக்களுக்கு நீதிவழங்கும் தெய்வமாக விளங்கி வருகிறது.

குயிலியின் உயிர்த் தியாகம்:

சிவகங்கையைக் காப்பாற்ற மருது சகோதரர்கள் தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைக்குள் அமைந்துள்ள ராஜேஸ்வரி அம்மனுக்கு விஜயதசமி நவராத்திரி விழாவுக்காகக் கூடிய மக்கள் கூட்டத்துக்குள் குயிலி என்கிற பெண், உடல் முழுவதும் வெண்ணெய்யைத் தடவிக்கொண்டு ஆங்கிலேயர் ஆயுதக்கிடங்குக்குள் குதித்து முதல் தற்கொலை போராளியானார். குயிலி சிறுவயதிலேயே தாயை இழந்ததால் வேலுநாச்சியார் மூலம் அன்புடனும் அரவணைப்புடனும் வளர்க்கப்பட்டார். குயிலியும், தன் தந்தையைப்போல் சிறந்த ஒற்றராக விளங்கினார். அவரது பணி வேலுநாச்சியாருக்குப் பல்வேறு ஆபத்தான கட்டங்களில் உதவியாக இருந்தது. அப்படியிருந்த குயிலி ஆயுதக்கிடங்கை அழிக்க முற்பட்ட போதுகூட.... வேலுநாச்சியார் அவரிடம், “நீ சின்னபொண்ணு... அப்படியெல்லாம் செய்யக்கூடாது'' என்கிறார். ஆனால் குயிலியோ, அவர் பேச்சைக் கேட்காமல் நாட்டின் சுதந்திரத்துக்காக முதல் மனித வெடிகுண்டாக மாறித் தன் தியாகத்தை வரலாற்றைப் பதியவைத்தார்.

கணவர் இறந்தபிறகும், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் மிகவும் கடுமையாகப் போராடிய வேலுநாச்சியார் டிசம்பர் 25-ம் தேதி பூமி தாயின் மடியில் சாய்ந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு