Published:Updated:

என் பிறந்த நாளுக்கு ஆடம்பரத்தை தவிருங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

என் பிறந்த நாளுக்கு ஆடம்பரத்தை தவிருங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
என் பிறந்த நாளுக்கு ஆடம்பரத்தை தவிருங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
என் பிறந்த நாளுக்கு ஆடம்பரத்தை தவிருங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தி.மு.க. தலைவர் கருணாநிதி-தயாளு அம்மாள் ஆகியோரின் பிள்ளையாய்ப் பிறந்து, பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின் சுடரொளி ஸ்டாலினின் பெயர் தந்தையாரால் எனக்குச் சூட்டப்பட்டு, சிறு கரம் நீட்டி, குறுகுறு நடக்கும் குழந்தைப் பருவத்திலேயே கொள்கைக் கோட்டமாம் கோபாலபுரம் சூழலில் வளர்ந்ததால், இளமையிலேயே இயக்கத்தின் பால் ஈர்த்திழுக்கப்பட்டு, திராவிட இயக்கத்திற்கு நாற்றங்கால்களாக இளைஞர்களைத் திரட்டிடும் இனிய பணியை என் தலை மேல் நானே ஏற்றிக் கொண்டு, இதுவரை பல கட்டங்களைக் கடந்து, எந்தக் கட்டமாயினும் இயல்பான அதன் மேடு-பள்ளங்களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு,

சென்னை மாநகர நிர்வாகத்திலும், தமிழக அரசின் நிர்வாகத்திலும், கருணாநிதி உவந்தளித்த பொறுப்பினைக் கடமை உணர்வோடு கடிதுழைத்து நிறைவேற்றி, தி.மு.க.வை கண்களாகவும், கருணாநிதியை கதிரொளியாகவும் கொண்டு, என்னால் இயன்றவரை எல்லோருக்கும் பயனுள்ள வகையில், கனிவு-துணிவு ஆகியவற்றைத் துணையாகக்கொண்டு, தொண்டூழியம் ஆற்றி வரும் எனக்கு மார்ச் 1 அன்று 63வது பிறந்த நாள்.

எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், ‘பிளக்ஸ்’ போர்டுகள், விளம்பரச் சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், பதாகைகள், பேனர்கள் போன்றவற்றை வைத்து என்னைச் சங்கடப்படுத்திவிட வேண்டாம் என்று தி.மு.க.வினரை மிகுந்த கனிவுடனும், கண்டிப்போடும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இத்தகைய கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்கள் கட்டாயம் தவிர்க்கப்படுதல் வேண்டும். நம்முள் அடக்கமும், அமைதியும் தவழ்ந்திட வேண்டும். ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் வெறுத்து விலக்கி வைத்திட வேண்டும். உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது. இனிது இனிது எளிமை இனிது. எளிமையின் ஏற்றம் இயம்பிட அரிது. இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும். இருக்கிறதே ஓராண்டு, என்ன அவசரம் என்று எண்ணிடாமல் இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுத் தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும்.

மாற்றத்தை விரும்புகின்றனர் மாநிலத்து மக்கள். எதையெதையோ சொல்லி நம்பவைத்து 2011ல் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் எதையும் செய்யாமல் ஏமாற்றி விட்டார்கள். நமது நோக்கத்தைச் சிதறவிடாமல், வில்லாளன் அர்ச்சுனன் வைத்த அம்புக் குறியைப் போல், ஒரு முகப்படுத்த வேண்டும். தமிழகத்தை மீண்டும் முன்னேற்றப்பாதையில் செலுத்திட, தி.மு.க.வை அரியணையில் அமர்த்திட வேண்டும். அதற்கான சூளுரையை அனைவரும் இன்றே மேற்கொள்ள வேண்டும். சூளுரை மேற்கொண்டு சுற்றிச் சுழன்று பணியாற்றிடத் தொடங்கினால், அதுவே எனக்கு வழங்கிடும் பிறந்தநாள் வாழ்த்தாகும்.

பிறந்த நாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை-எளிய மகளிர், முதியோர், அனாதைச் சிறுவர்-சிறுமியர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளை ஆங்காங்கே இளைஞர் அணியினர் உள்ளிட்ட தி.மு.க.வினர் செய்வதும், “இளைஞர் எழுச்சி நாள்” பொதுக் கூட்டங்களின் மூலம் பிரசாரப் பணியை மேற்கொள்வது. தி.மு.க. கொடிகளைப் புதுப்பிப்பது-புதிய கொடிகளை ஏற்றி வைப்பது கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது-அண்ணா, கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது, தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக ரத்தத் தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை.

இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன். சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்காரியங்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே தி.மு.க.வினரின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு எல்லையிலா மகிழ்ச்சி கொள்வேன். ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர். இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்" என்று கூறி உள்ளார்.