Published:Updated:

ஜெர்மனியில் களைகட்டிய இந்திய திருவிழா! – சுவாரஸ்ய ஹைலைட்ஸ் #MyVikatan

`கண்கள் இரண்டால் ...." பாடலுக்கு பரதநாட்டியம் ஆடியது தமிழ் மொழியின்பால் வேற்றுமொழியினர் காட்டும் ஆர்வத்துக்குச் சான்றாக அமைந்தது.

திருவிழா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே கொண்டாட்டம்தான். நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்கலாம் என்ற சந்தோஷம் தான். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற "Indian Fest" திருவிழா அதற்கு வழி செய்து கொடுத்தது. எங்கு நோக்கினும் இந்திய முகங்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் இந்திய மொழிகளின் சங்கீத ஓசைகள், காதுகளில் இனிய கானங்கள் இசைத்தன. ஜெர்மானியர்கள் மற்றும் பிராங்க்பர்ட்ல் வசிக்கும் இன்ன பிற நாட்டவர்கள் நிறைய பேர் வந்திருந்தது இந்திய கலைநிகழ்ச்சியின்பால் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தைப் பிரதிபலித்தது.

Indian Fest
Indian Fest

வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதலங்கள் மூலம் கடந்த சில வாரங்களாகவே இந்தியத் திருவிழா பற்றியும் அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் பற்றியும் செய்திகள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர். கூடுதலாக ஜெர்மன் மொழியில், வானொலியில் விளம்பரம் செய்திருந்தனர். அதனால் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் மக்கள் கூட்டம் அதிகம். ஏறத்தாழ 20,000 பேர். நிறைய மக்கள் வருவார்கள் என்று முன்னமே அறிந்திருப்பார்கள் போலும். Food Stalls அனைத்தையுமே நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு அருகில் உள்ள மைதானத்துக்கு இடமாற்றம் செய்திருந்தனர்.

Indian Fest
Indian Fest

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டது போல மதியம் 12 மணிக்கு பிராங்பேர்ட் நகரின் ரோஸ்மார்க்கெட் பகுதியில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் பிரமாண்ட மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. மைதானத்தின் நுழைவு வாயிலில் விநாயகர் விக்கிரகம் அமைந்திருக்க, அதன் அருகிலேயே இரண்டு இந்தியப் பெண்கள் கையில் பூ மற்றும் குங்குமம் ஏந்தி, ஜெர்மன் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டு இந்திய இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். Friends of India அமைப்பின் பிரதிநிதி கமல் அவர்கள் வரவேற்புரை வழங்க, விழா ஆரம்பமானது. ஒவ்வொரு மாநில அமைப்புகளிலும் இருந்து இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. நிகழ்ச்சியின் இடையே, இந்திய தூதரக அதிகாரி பிரதீபா பார்கர், பிராங்பேர்ட் நகர சேர்மன் ஸ்டெபான் சீக்லர் கெரி ரெடிங்டன் மற்றும் கமல் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

இந்தியத் துணைத் தூதரக அதிகாரி பிரதீபா பார்கர் பேசும்போது, ``வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட இந்தியா இன்று வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. மிகக் குறைந்த பொருள்செலவில் உருவாக்கப்பட்ட செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், சந்திரயான் 2 என்று அறிவியல் வளர்ச்சியில் இந்தியா வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தது. இங்கு நிறைய மக்கள் குழுமியிருக்கிறார்கள் என்றால் அதற்கு தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் வரவும் முக்கியக் காரணம்" என்று குறிப்பிட்டார்.

பிரதீபா பார்கர்
பிரதீபா பார்கர்

தொடர்ந்து பேசிய ஜெர்மனியின் வெளியுறவு ஆலோசனைக் குழு உறுப்பினர் கெரி ரெடிங்டன், ``ஒற்றுமைதான் இந்தியாவின் பலம், நிறைய பயிற்சிகள் எடுத்து இங்கு நீங்கள் நடத்திக் காட்டிய அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை" என்றவர் ``இதை வழிநடத்திக்கொண்டிருக்கும் பிராங்பேர்ட் நகர இந்தியத் தூதரக அதிகாரி, பிரதீபா பார்கர் உண்மையிலேயே `தி ஹம்பிள் லேடி' ' என்று குறிப்பிட்டார்.

பாரதியார், அப்துல்கலாம், விவேகானந்தர் ஆகியோரின் பொன்மொழிகள் பின்பக்க திரையில் மின்ன, நம் சிறுவர்களின் நடனம் பார்வையாளர்கள் அனைவரையும் ஆர்வமிகுதியால் எழுந்து நின்று பார்க்க வைத்து கைத்தட்டல்களை அள்ளியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆணழகே, சொக்கும் பேரழகே" பாடலுக்கு எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரமானது. ``இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக நடனம் இருந்திருக்கலாமே!" என்று பின்னாலிருந்து ஒலித்த குரல், நடனங்கள் பயிற்றுவித்த நாககுமார் & ஜெயசந்தர் ஆகியோருக்கு கிடைத்த பாராட்டுகள்.

Indian Fest
Indian Fest

தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் கோமதி சங்கர் அருணாசலம் நம்மிடம் , ``இது போன்ற விழாக்கள், மனதுக்கு மகிழ்ச்சி தருவதுடன் நம் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர உந்துதலாக இருக்கிறது" என்றவர், மேலும் ``தமிழ்ச் சங்கத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு குழந்தைகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வாய்ப்பளித்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துகிறோம்" என்றார். உடன் இருந்த மற்றொரு உறுப்பினர் பிரெஷ்னவ் ஜீவானந்தம், ``பிராங்க்பர்ட் தமிழ்ச் சங்கம் சார்பாக இளைய தலைமுறையினருக்கு சிலம்பாட்டம், பறை போன்ற நம் ஊர் பாரம்பர்ய கலைகளைப் பயிற்றுவிக்கிறோம்" என்றார். இவர், தமிழ் குழந்தைகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி வாராவாரம் யோகாசனம் கற்றுக் கொடுக்கிறார்.

விழாவில் சில ஹைலைட்ஸ்:

* Food Stall களில், நம்மூர் இட்லி, தோசை, சாம்பார் வடையில் ஆரம்பித்து கொல்கத்தாவின் ரசகுல்லா, சமோசா வடைபாவு என்று பலவித உணவு வகைகள் இடம் பிடித்தன. பிரியாணியின் வகைகளோ எண்ணிலடங்கா!

*மிகப்பெரிய LED ஸ்கிரீனில், சாப்பிடும் இடத்திலும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

*பேஷன் ஷோவில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்ட பெண்கள், புடவையை பலவிதங்களில் உடுத்தி வந்து ``சேலை கட்டுவதில் இத்தனை வகைகளா?" என்று புருவம் உயர்த்த வைத்தனர்.

*ராஜஸ்தான் பாலைவன கிராம மக்கள் மழைக்காக ஏங்குவதை, லேடீஸ் கிளப் உறுப்பினர்கள் தங்கள் நடனத்தின் மூலம் அழகாக பதிவு செய்து மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.

*மராட்டிய சங்கத்தின் `சத்ரபதிசிவாஜி' பற்றிய நாட்டிய நாடகம் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது

Indian Fest
Indian Fest

*அனைத்து நிகழ்ச்சிகளும் `India in Germany' என்ற முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

*காலநிலை நன்றாக இருந்ததால் ராட்டினம், பாஸ்கட் பால், துள்ளிக்குதிக்கும் மேடை என்று பல விதமான விளையாட்டுகள் பக்கத்திலேயே கடை பரப்ப, குழந்தைகளின் கூட்டம் அங்கும் களை கட்டியது.

*அருகிலேயே `சீனத் திருவிழா' நடைபெற்றது. சீனர்களின் உணவு வகைகளுடன் கூடிய பல்வேறு கடைகள், பார்ப்பதற்கு மழைக்காளான்கள் போல அழகாக இருந்தது! கடந்த வாரம் தாய்லாந்து திருவிழா இதே இடத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் மாலை 7 மணிவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோஷ நாளாக அமைந்தது.

-ஜேசு ஞானராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு