Published:Updated:

`இது ஒரு சுயமரியாதை திருமணம்!' -ஸ்வீடன் பெண்ணின் குடும்பத்தை ஆச்சர்யப்படுத்திய நாமக்கல் இளைஞர்

திருமணம்
திருமணம்

ஆரம்பத்தில் நானும் மரியாவும் நண்பர்களாகப் பழகினோம். பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பெரியாரின் கொள்கைகளை அவரிடம் சொல்லி இருக்கிறேன். அதைக் கேட்டு வியந்திருக்கிறார்.

இருவேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கிடையே திருமணம் நடக்கும்போது மணமகன் சார்ந்துள்ள மதத்தின் படியோ அல்லது மணமகள் சார்ந்துள்ள மதத்தின் படியோ திருமணம் நடைபெறுவது வழக்கம். ஆனால், நாமக்கல்லில் நடைபெற்றுள்ள திருமணம், ஒட்டுமொத்த உறவினர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தரணி மரினா
தரணி மரினா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல், தமிழரசி தம்பதியர். இவர்களின் மூத்த மகன் தரணி, இவர் எம்.டெக்., எம்.எஸ்., முடித்துவிட்டு சுவீடன் நாட்டில் தற்போது இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எம்.எஸ்., படிப்பதற்காகச் சுவீடன் நாட்டுக்குச் சென்றார்.

அங்குள்ள ஸ்டாக்ஹோம் பகுதியைச் சேர்ந்த ஜான் ஏக் பிரிஸ்ஸன், கான் அனிதா விக்டோர்ஸ்டம் தம்பதியரின் மகள் மரினா சூசேன் என்பவரை கூடைப்பந்து விளையாடச் சென்ற இடத்தில் சந்தித்துள்ளார். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகி வந்தார்கள். பிறகு இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்தைக் கேட்டனர். இதில், ஆச்சர்யமான விஷயம், `சாதி, மத, சடங்கு சம்பிரதாய பேதங்களால் தங்கள் காதல் திருமணத்துக்குத் தடை வந்துவிடக் கூடாது' எனக் கருதிய மணமக்கள், கிறிஸ்துவ முறைப் படியும் இந்து மத வழக்கப்படியும் திருமணம் செய்து கொண்டனர். மணமகன் தரணி சுயமரியாதைக்காரர் என்பதால் எந்தவித சடங்குகளும் இல்லாமல் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு சுயமரியாதை திருமணமும் செய்துகொண்டனர்.

காதல் மணம்
காதல் மணம்

அப்போது, மணமகன் தரணி பட்டு வேட்டி, சட்டை அணிந்தும் மணமகள் மரினா சூசேன் நீல நிறப் பட்டுப் புடவை அணிந்தும் இருந்தனர். மணமகளின் பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் தமிழ்க் கலாசாரத்தின்படி பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டுச் சேலை அணிந்து வந்திருந்தனர். வெவ்வேறு நாட்டுக்காரர்களுக்கு இடையே திருமணம் நடக்கும்போது மணமகன் சார்ந்துள்ள மதத்தின்படியோ அல்லது மணமகள் சார்ந்துள்ள மதத்தின்படியோதான் திருமணம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இவர்கள் அனைவரின் விருப்பப்படியும் திருமணம் நடந்துள்ளது, உறவினர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் தரணியிடம் பேசினோம். ``எனக்குச் சாதி, மத, இனப் பாகுபாடு கிடையாது. நான் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவன். மத நம்பிக்கையில் ஈடுபாடு இல்லை. ஆரம்பத்தில் நானும் மரியாவும் நண்பர்களாகப் பழகினோம். பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பெரியாரின் கொள்கைகளை அவரிடம் சொல்லி இருக்கிறேன். அதைக் கேட்டு வியந்திருக்கிறார். சுயமரியாதை திருமணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அது இன்று நிறைவேறியிருக்கிறது'' என்றார்.

பின் செல்ல