வண்ணமயமான பின்னணியில் அழகிய பூக்கள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து, பெரிய புன்னகையோடு நிற்கும் ஒருவரை இன்று கூகுள் டூடுலாகச் சிறப்பு செய்துள்ளது. "பிரைட் மாதம்" என்று கொண்டாடப்படும் ஜூன் மாதத்தின் இறுதி நாளான இன்று, LGBTQ+ சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடிய முதல் கறுப்பின திருநங்கையான மார்ஷா பி ஜான்சனுக்குத்தான் கூகுள் இத்தகைய மரியாதையை அளித்துள்ளது.

1945-ம் ஆண்டு மால்கம் மைக்கேல்ஸ் ஜூனியராகப் பிறந்த மார்ஷா, சமூகப் புறக்கணிப்பின் காரணமாக, பள்ளிப் படிப்பு முடிந்த கையோடு, 15 டாலர்கள் மற்றும் ஒரு துணிகள் நிறைந்த பையோடு நியூயார்க் நகரத்துக்குச் சென்றார். நியூயார்க் நகரின் கிறிஸ்டோஃபர் தெருவில் தன்னைப் போன்ற திருநங்கைகள் இருப்பதைக் கண்டு ஆறுதல் அடைந்த மார்ஷா, பிழைப்பதற்காக பாலியல் தொழில் செய்து வந்தார். நியூயார்க் நகரத்துக்கு வந்த பின்பு மால்கம் என்ற தனது பெயரை மார்ஷா.பி. ஜான்சன் என்று மாற்றிக்கொண்டார். முன்னதாக பிளாக் மார்ஷா என்ற பெயரைப் பயன்படுத்தி வந்த இவர், ஜான்சன் என்ற சொல்லை தனக்குப் பிடித்த உணவகத்தின் பெயரிலிருந்து எடுத்துக்கொண்டதாகவும், பி(P) என்ற எழுத்துக்கு அவர் அதிகம் பயன்படுத்திய சொற்றொடர், "Pay it No Mind" என்பதே விரிவாக்கம் என்று கூறியுள்ளார்.
ஸ்டோன் வால் என்று பெயர் கொண்ட நியூயார்க் நகரத்தில் அமைந்திருந்த ஒரு பார், தன்பாலின ஈர்ப்பாளர்கள் அதிகம் வருகை தரும் பாராக விளங்கியது. அவ்வப்போது காவல்துறையினர் இந்த பாரில் சோதனை மேற்கொண்டு அங்கு இருப்பவர்களைக் கைது செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படி, 1969-ம் ஆண்டு ஜூன் 27 நிகழ்ந்த கைது நடவடிக்கையின்போது, நூற்றுக்கணக்கில் கூடியிருந்த மக்கள் காவல்துறையை எதிர்த்துப் போராடியதால் கலவரம் வெடித்தது. அந்த 'ஸ்டோன்வால் ரைசிங்'கில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் மார்ஷா. கலவரம் தொடங்கிய பின்பு அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த மார்ஷா காவல்துறையினருக்கு எதிராகக் கடுமையாகப் போராடினார். பல நாள்கள் தொடர்ந்த இப்போராட்டம், தன்பாலின ஈர்ப்பாளரும் மாற்றுப்பாலினத்தவரும் தங்கள் உரிமைகளுக்காகப் போராட தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

இந்த எழுச்சியை நினைவுகூரும் விதமாக 1970-ம் ஆண்டு, LGBTQ+ சமூகத்தினர் ஸ்டோன்வால் பார் அமைந்திருந்த கிறிஸ்டோஃபர் தெருவில் அணிவகுத்து நடந்தனர். அதுவே முதல் "பிரைட் மார்ச்" என்று அழைக்கப்படுகிறது. இதில் தன் நண்பரான ஸில்வியா ரிவேராவுடன் பங்கேற்ற மார்ஷா, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான விடுதலை முன்னணியிலும் உறுப்பினர் ஆனார். மேலும், ஸில்வியா உடன் இணைந்து, STAR (Street Transvestite Action Revolutionaries) என்ற பெயரில் LGBTQ+ இயக்கத்தைத் தொடங்கினர். தான் பாலியல் தொழில் செய்து சம்பாதித்த பணத்தை வைத்து, வீடற்ற தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு உணவும் உடையும் வழங்கினார் மார்ஷா.
பார்களில் "ட்ராக் குயின்"- ஆக (ஆண்கள் பெண்களைப் போல உடை அணிந்து பெண்களின் பழக்கங்களை கேளிக்கையாகச் செய்து காட்டுவது) நடித்துவந்த மார்ஷா, 1972-ம் ஆண்டு முதல் "ஹாட் பீச்சஸ்" (Hot Peaches) என்ற குழுவில் நடித்துவந்தார். 1980 களில் தொடங்கி ACT UP (AIDS Coalition to Unleash Power) என்ற கூட்டமைப்பில் இருந்த மார்ஷா, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்தார். 1992 -ல் நடந்த ஒரு நேர்காணலில் தனக்கு 1990-ல் இருந்து எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும் அறிவித்தார் மார்ஷா.
'ஸ்டோன்வால் ரைசிங்' நினைவாக, 1980-ல் தன்பாலின ஈர்ப்பாளர்களின் விடுதலை என்ற பெயரில் இரு சிலைகள் நிறுவப்பட்டன. அதைப்பற்றிப் பேசிய மார்ஷா, "தன்பாலின ஈர்ப்பாளர்கள்களை அங்கீகரிக்க அமைக்கப்பட்டிருக்கும் இரு சிலைகளுக்காக எத்தனை பேர் இறக்க வேண்டியிருக்கிறது? மக்கள் எங்களை சகோதரனாக, சகோதரியாக, மனிதனாகப் பார்ப்பதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும்?" என்று கேள்வியெழுப்பினார்.

மன நோயால் பாதிக்கப்பட்ட மார்ஷா, அவ்வப்போது அதற்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். 1992-ம் ஆண்டு "பிரைட் மார்ச்" முடிந்து சில நாள்களுக்குப் பின்பு ஹட்சன் நதியில் மார்ஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர்கள் மார்ஷா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கூறினர். பல ஆண்டுகள் கழித்து அவருடைய வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, அவர் இறப்புக்கான காரணம் 'அறியப்படவில்லை' என்று மாற்றப்பட்டது.
கடந்த ஆண்டு, மார்ஷா மற்றும் ஸில்வியா ஆகியோரின் சிலைகள் நியூயார்க்கின் கிரீன்விச் பகுதியில் நிறுவப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும், ஸ்டோன்வால் சம்பவத்தின் 50-ஆவது நினைவு தினத்தையொட்டி மார்ஷா மற்றும் ஸில்வியாவின் உருவங்கள் வரையப்பட்ட சுவர், 'டெக்ஸாஸ்' நகரில் உருவாக்கப்பட்டது. இன்றளவிலும், மாற்றுப்பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் இதர பாலின வகுப்பினருக்கு "Pay it No mind" என்ற வாசகத்தால் ஊக்கம் அளித்து வருகிறார் போராளி மார்ஷா.