Published:Updated:

இந்த இளையராஜாவை என்ன பண்ணலாம்? - #WhyRajaisRaja

Vikatan Correspondent
இந்த இளையராஜாவை என்ன பண்ணலாம்? - #WhyRajaisRaja
இந்த இளையராஜாவை என்ன பண்ணலாம்? - #WhyRajaisRaja

ன் பதின்ம வயது. பள்ளி விடுமுறை. உடுமலைப்பேட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ் ஏற்றிவிட்டார் அப்பா. எங்கேயும் இறங்காமல், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பெரியப்பா காத்திருப்பார். அவரிடம் நான் சென்றடைய வேண்டும். இதுதான் ப்ளான்.

ஒட்டன்சத்திரம் பேருந்துநிலையத்தில் பஸ் நின்றது. 10 நிமிஷம் ஆகும் என்றார் கண்டக்டர். ஜன்னலோரத்தில் அமர்ந்திருக்கும் என் காதுகளில் வந்துவிழுந்தது அந்தப் பாடல்:

‘இன்பதுன்பம் என்பது இரவுபகலைப் போன்றது..
காலம் நாளை மாறலாம் காயமெல்லாம் ஆறலாம்..
சோகமென்ன தோழனே.. சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு.. இன்று ஓய்வெடு.. - நீ
இன்று ஓய்வெடு..’

கூட்டுக்குடும்பத்திலிருந்து அப்போதுதான் நாங்கள் தனிக்குடும்பம் வந்திருந்தோம். சிலபல வாழ்வியல் சிக்கல்கள், எனக்குப் புரிய ஆரம்பித்திருந்த தருணம். ‘ஏதோ மை பூசின கண்ணாடி மாதிரி காமிச்சாங்க. நான் பின்னாடியே போய்ட்டேன்’ என்று கடத்தப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுப்பதைக் கேட்டிருப்பீர்கள்தானே.. அதேபோல, இறங்கிப் போனேன். ஒரு டீக்கடையில் ஒலித்துக் கொண்டிருந்தது அந்தப் பாடல். அப்போதெல்லாம் ரேடியோதான். டேப் ரெகார்டர் கொஞ்சம் வசதி படைத்தவர்களிடத்தில்தான் இருக்கும். முழுப் பாடலும் எனக்குத் தந்த இதம், இப்போதும் என்னால் எழுத்தால் எழுத முடியாது. பாடல் முடிந்ததும், அறிவிப்பாளர் குரலை எதிர்பார்த்தவனுக்கு அடுத்து வேறொரு பாடல் கேட்கிறது. அப்போதுதான் பார்த்தேன். அது டேப் ரெகார்டர்.

‘ண்ணா.. கேசட்ங்களா? அந்தப் பாட்டை இன்னொருக்கா போடுங்களேன்?’ கெஞ்சலாகக் கேட்டேன்.

ஏனென்றால் மீண்டும் எப்போது அந்தப் பாடலைக் கேட்பேன் என்பதெல்லாம் நிச்சயமில்லாத காலகட்டம் அது. அவர் ஒரு சிறுபுன்னகையுடன், மீண்டும் அந்தப் பாட்டை ஒலிக்க விட்டார். ‘என்ன தேசமோ.. இது தேசமோ..’ என்று யேசுதாஸ் மீண்டும் ஆரம்பித்தார். என் கண்முன்னே பேருந்து எடுக்கப்பட்டு, போய்க் கொண்டிருக்கிறது. சொன்னால், டீக்கடைக்காரர் திட்டுவார் என்று சொல்லாமலே நான்கைந்து முறை அந்தப் பாடலைக் கேட்டு, ஒட்டன்சத்திரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு அந்த டீக்கடைக்காரரிடமே காசுவாங்கிக் கொண்டு போனதெல்லாம் வரலாறு இல்லைதான். ஆனாலும் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம்.

இந்த இளையராஜாவை என்ன பண்ணலாம்? - #WhyRajaisRaja

இப்படி, இப்படி எத்தனையோ தருணங்களில் என்னை புரட்டிப்போட்டிருக்கிறார் இந்த மகா கலைஞன். இளையராஜா. அங்கிங்கு ஆர்க்கெஸ்ட்ரா உடுமலைத் தேர்த்திருவிழாவில் ‘பாடவா உன்...’ பாடலை பாடியபோது ரகளை செய்து ஒன்ஸ்மோர் கேட்டிருக்கிறோம். அந்தப் பாடலின், இடையிசை வயலின்கள், ‘என்னமோ விபரீதம் நடக்குது’ என்று படக்காட்சியை காதுவழியாகவே கடத்தும். அதேபோலத்தான் பிரம்மா படத்தின் ‘எங்கிருந்தோ இளங்குயிலின்’ படத்தின் முதல் இடையிசையின் கோரஸும். ‘ஃப்ளாஷ்பேக் காட்டுவாங்க’ என்று பாடலைக் கேட்டபோதே நண்பனோடு பேசியது நினைவிலிருக்கிறது.

தளபதி படத்தின் கேசட்டை, வரிசையில் நின்றுதான் வாங்கினோம். ஒரு நாள் முழுதும் கேட்டுக் கேட்டு, இரவு நண்பர்களுடனான கலந்துரையாடலில் ‘ராக்கம்மா கையத்தட்டு...’ வாய்ப்பே இல்லை என்று எல்லாரும் சிலாகிக்க, ‘காலத்துக்கும் நின்னு பேசவைக்கப்போறது ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதிதான்’ என்று நானும், நண்பன் ரவியும் வாதாடினோம். இன்றைக்கும் அதன் முன்னிசையில் வயலின்கள் ஒருசேர ஆரம்பிக்க, புல்லாங்குழல் ஓசை கேட்கையில் உங்களுக்குப் புல்லரிக்க வேண்டுமென்றால் நீங்கள் இளையராஜாவைக் கொண்டாடவேண்டியதில்லை.. இசையைக் கொண்டாடுபவராக இருந்தால் போதுமானது.

என்னதான் இளையராஜாவைக் கொண்டாடுபவராக இருந்தாலும், பாடகர் என்று வந்துவிட்டால், எஸ்பிபிதான் எங்களுக்கு. எந்தக் காலத்திலும் அதை விட்டுக்கொடுக்க மனம் வந்ததில்லை. ராஜாவின் குரல் அப்படி ஒன்றும் ஸ்பெஷல் இல்லை என்று பலர் பேசிக் கொண்டிருந்தபோதும் கொஞ்சம் கொஞ்சமாய் அதிலும் வசியமருந்து வைக்க ஆரம்பித்தார். ‘கஸ்தூரி மானே மானே கண்ணீரில் நீந்தும் மீனே...’ பாடல் தரும் இதமாகட்டும், ‘ஆலோலம் பாடி...’ பாடல் தரும் தனிமையாகட்டும் ‘நான் தேடும் செவ்வந்திப்பூவின்...’ ஆரம்ப ‘ஆஆஆஆஆ’ தரும் உற்சாகமாகட்டும் அதிலும் என்னமோ இருந்தது. எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் என்று தெரியவில்லை. ‘வெற்றிவிழா’ வின் ‘மாருகோ மாருகோ மாருகயி’ டூயட் பாடலாகத்தான் உங்களுக்குத் தெரியும். அந்தப்படத்தின் டைட்டில் ஓடும்போது அதே பாடலை, ராஜா ’மாருகோ.. மாருகா.. ஜோருகோ.. ஜோருகா.. ‘ என்று சோலோவாக பாடியிருப்பார். கேட்டுப்பாருங்கள். #WhyRajaisRaja என்று தெரியவரும். நாடோடித் தென்றல் படத்தின் கேசட்டை வாங்கிவந்து நண்பர்கள் ஈஸ்டர் சாம்ராஜ், சார்லஸ் உட்பட பலரோடு சர்ச் ஒன்றில் டேப் ரெக்கார்டரில் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு பாடலில் எஸ்.ஜானகி பாடிக்கொண்டே வர, ‘ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்றவேண்டுமோ..’ என்று ராஜாவின் குரலைக் கேட்டு சாமி வந்ததுபோல கத்தினோம். அவர் ஆரம்பித்து, நான்கு விநாடிகள் விட்டுதான், பாடலைத் தொடர்ந்திருப்பார். ‘நாம கத்துவோம்னு தெரிஞ்சே இப்டி கேப் விட்டுப் பாடிருக்கார்டா மனுஷன்’ என்று பேசிக்கொண்டோம்.

கோவில் சிற்பங்களில் கவர்ச்சியைவிட, கலைநயமே விஞ்சி நிற்கும். ராஜாவின், ‘ஏதோ மோகம்’, ‘மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு’, ‘வருது வருது இளங்காத்து’, ‘கண்ணில் ஏதோ மின்னலடிச்சுடுச்சு’ உட்பட பல பாடல்கள் அந்த ரகம். ஒவ்வொரு பாட்டிலும் இசையில் என்ன பண்ணிருக்கார் என்று ஆராய்ந்தபடியேதான் கேட்கத் தோன்றும். ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால் ‘மணக்கும் மல்லிகை’ பாடலில் இடையிசையைச் சொல்லலாம். வயலின் விளையாடியிருக்கும் அதில். இசையை, பிரித்து ராகம் தாளமெல்லாம் பார்க்கத் தெரியாது என்றாலும் இன்றைக்கும் ‘பனி விழும் இரவு’ பாடலின் முன்னிசையில் வரும் புல்லாங்குழலுக்கும், ‘ஆசயக்காத்துல’ பாடலில் வரும் புல்லாங்குழல் இசைக்கும், ‘வளையோசை கலகலவென’ பாடலில் பல்லவி முடிந்தவுடன் வரும் புல்லாங்குழல் இசைக்கும் மயங்கிக் கொண்டுதானே இருக்கிறோம். தபேலா என்றால் இன்றைக்கும் ராஜா பாடல்களில் கேட்கும் சுகம் வேறெதிலும் அவ்வளவாய் கவரவில்லை என்பதைப் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம்.
 

இந்த இளையராஜாவை என்ன பண்ணலாம்? - #WhyRajaisRaja

பாடல்களில் இப்படி என்றால், பின்னணி இசையில் ராஜா செய்தது புலிப்பாய்ச்சல். ‘இதையெல்லாம் கவனிப்பாங்களா’ என்று அவர் கவலைப்பட்டதே இல்லை. ‘நாம பண்ணுவோம். ரசிக்கறப்ப ரசிக்கட்டும்’ என்று மெனக்கட்டிருக்கிறார் என்பது, பல படங்களின் பின்னணி இசையை இன்றைக்குக் கேட்கும்போது தெரிகிறது. முதல்மரியாதை படத்தில் ரஞ்சனி இறந்துவிட்டதை கரையிலிருந்து பார்க்கும் அவள் காதலன், புல்லாங்குழலைத் தூக்கி வீசும்போது ஒலிக்கும் பின்னணி இசையைக் கேட்டுப் பாருங்கள். வெறும் 35 விநாடிகளிலும் மேஜிக் நிகழ்த்தமுடியும் என்று தெரியும். ஆண்பாவம், மௌனராகம், அஞ்சலி, அழகி, சத்ரியன், நாயகன் என்று எத்தனையைச் சொல்ல! தளபதியில் ஷோபனா, ரஜினியை நீங்கிச் செல்கையில், ’நானுனை நீங்கமாட்டேன்...’ வரிகளை வயலினில் ஆரம்பிக்கிற ராஜா, சடாரென்று சுந்தரி கண்ணால் ஒரு சேதி வரிகளை மட்டும் புல்லாங்குழலில் ஆச்சர்யப்படுத்தியிருப்பார். ‘என்னாடா பண்றான் இந்த ஆளு’ என்று பிரமித்தால் கொஞ்சம் தள்ளி ரஜினி, அரவிந்த்சாமியைப் பார்க்க வீட்டுக்குப் போக, ஷோபனா எதிர்ப்படுகையில் அதே வரிகளை வேறு மாதிரி கையாண்டிருப்பார். புல்லாங்குழல் வருமோ என்று எதிர்பார்க்க வைத்து, வேறு வகையில் ரசிக்கச் செய்திருப்பார்.

நண்பர்களுடனான சந்திப்பில், பிடிச்ச ராஜா பாட்டு என்று ஆரம்பித்தால், தென்றல் வந்து தீண்டும்போது, சங்கத்தில் பாடாத கவிதை, இசையில் தொடங்குதம்மா, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, இளங்காத்து வீசுதே, ஓம் சிவோஹம் என்று ஆளுக்கொரு பாடலையும் அதற்கான நியாயத்தையும்தானே பேசிக் கொள்வோம். பெண்களின் உணர்வை, தூரத்தில் நான் கண்ட உன்முகம், தேவனின் கோவில் மூடிய நேரம், ராசாவே உன்ன நான் எண்ணித்தான், தாலாட்டும் பூங்காற்று நானல்லவா, ராசாவே உன்னைவிட மாட்டேன், மாலையில் யாரோ, என்னுள்ளே என்னுள்ளே என்று இசையில் வடித்தது இவர்தானே.

இசை ஒரு கடல். நான் ஒரு சின்னச் சிப்பியைக் கையில் வைத்துக் கொண்டு ஏதோ கொஞ்சம் அள்ளினேன் என்பார் இளையராஜா. எங்களுக்கெல்லாம் இளையராஜா இசையே ஒரு கடல்தான். அதில் ஏதோ கொஞ்சம், தொட்டு உணரத்தான் முடிகிறது. அள்ளுவதெல்லாம் சாத்தியமே இல்லை.

இளையராஜா ஆயிரம்’ பற்றிச் சொல்வதென்றால், ஆயிரம் என்பது படங்கள். இதில் ஒவ்வொரு படங்களுக்கும் வெளியானது போக, எத்தனை மெட்டுக்களை போட்டுக் காட்டியிருப்பார். எத்தனை படங்களுக்கு இசை கொடுத்து, வெளிவராமல் இருந்திருக்கும். அதையெல்லாம் கணக்கிட்டால் ஆயிரம் என்று படங்களையோ, ஐந்தாயிரத்துச் சொச்சம் என்று பாடல்களையோ கணக்கில் அடக்கிவிட முடியுமா என்ன?

ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போதும், ‘இப்டி சாவடிக்கறான்யா.. இந்தாளை என்னதான் பண்றது?’ என்பேன் நண்பன் டேவிட்டிடம். ராஜாவின் ரசிகர்கள் அவரை கடவுளைப் போல் கொண்டாடுவதுதான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது என்பான் இன்னொரு நண்பன்.

என்ன செய்ய.. அவர் அப்படித்தானே தெரிகிறார்!