Published:Updated:

ஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா?

Vikatan Correspondent
ஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா?
ஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா?

‘அவன் வேறு சாதி. அவனும் இருக்கக் கூடாது. அவன் தொட்ட, அல்லது அவனைத் தொட்ட அவளும் இருக்கக்கூடாது. சாகடிப்போம்’ என்று இளைஞர்களின் மனதில் சாதிய வெறியை பல தளங்கள் விதைக்கிறது. அதில் திரைப்படங்களுக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதிற்கில்லை. திரைக் கலைஞர்களும் ‘மேல் சாதி’ என்று சொல்லப்பட்டு வருகிற ஒரு சில சாதியைச் சார்ந்தே திரைப்படம் எடுப்பது, அவர்களைப் பற்றிய வசனங்களில் அடக்கி வாசிப்பது என்று சாடவேண்டிய சாதிக் கொடுமையைச் சாடாமல், பேசாப் பொருளாய் பட்டும் படாமலும் காட்சிகளில் வைத்துச் செல்கின்றனர். 

அதையும் மீறி, ஒருசில படங்களில் ‘இந்த மாதிரியெல்லாம் சாதியக் கொடுமைகள் நடக்கிறது’ என்று கொடுமையை முன்னிறுத்தப் படமெடுத்தால் அதுவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அது என்னமோ தங்கள் சாதிப்பெருமையைக் குறிப்பிடுவதாய் சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

சாதிமறுப்பைப் பேசும் காட்சிகள்

திரைப்படங்களில் சாதியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களில் சத்யராஜ் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார் எனலாம். 1990ல் வெளிவந்த ‘மதுரைவீரன் எங்க சாமி’ படத்தில் சத்யராஜ் தலித்தாக நடித்திருப்பார். அவருக்கும், வினுச்சக்கரவர்த்தியின் தங்கையான சாரதாவுக்கும் காதல். பெண்கேட்டுச் செல்லும்போது ‘பின்வாசல் வழியா வந்து கொட்டாங்குச்சில வாங்கிக் குடிக்கற உனக்கு.. என்ன தைரியம் இருந்தா’ என்று வினுசக்கரவர்த்தி மிரட்ட, ‘எங்களுக்கு செருப்பு தைக்கவும் தெரியும்.. தேவைப்பட்டா அதை எடுத்து அடிக்கவும் தெரியும்’ என்று சாதியை மறைமுகமாகக் குறிப்பிட்டிருப்பார்கள். காதல் திருமணம் முடிந்து இருவரும் தனித்து குடிசையில் இருக்கும்போது, வினுசக்கரவர்த்தியின் ஆட்கள் வந்து சத்யராஜைக் கொலை செய்துவிடுவார்கள். பிறகு மகனாக வந்து பழிவாங்குவதெல்லாம் இருந்தாலும், ஆணவக்கொலையை அன்றைக்கே பேசிய இந்தப் படம் சரிவர ஓடாத ஒரு படம்.

அதற்கு முன் 1988ல் வெளிவந்த 'இதுநம்ம ஆளு; மொத்தப்படமுமே இதைத்தான் அலசியது. பிராமணப் பெண்ணான ஷோபனா, நாவிதரான பாக்யராஜைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள, ஷோபனாவின் தந்தையான சோமையாஜுலுவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் இறுதிக்காட்சியில் தற்கொலை செய்துகொள்ள முயல்வார். இதில் மேல்சாதியாகக் காண்பிக்கப்படும் சோமையாஜுலு, உடல்ரீதியான வன்முறையில் இறங்கமாட்டார் எனினும் அந்த திருமணத்தை ஏற்கமாட்டேன் என்று ஷோபனாவையும், பாக்யராஜையும் மனரீதியாக துன்புறுத்துவார் எனலாம். அதுவும் ஒருவகை வன்முறைதான். .

கமல் நடித்த ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் சைவப்பிள்ளைக் குடும்பத்தில் பிறந்த கமல், சீதாவைக் காதலிப்பார். வழியில் இருவரையும் சந்திக்கும் ஜெமினி கணேசன், ‘நீ ஹரிஜனப் பொண்ணுதானே... தீண்டத்தகாதவளா இல்லையா?’ என்று கேட்க, சீதாவோ கமல் கன்னத்தில் முத்தமிட்டு, ‘தீண்டலாமே’ என்று பதிலடி கொடுப்பார். 

ஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா?


அலைகள் ஓய்வதில்லை, பாம்பே போன்று மத ஒற்றுமையைக்கூட வலிமையாய்க் காட்சிப்படுத்த முடியும். ஆனால் சாதி மறுப்பை அவ்வளவு வலிமையாக, நேரடியாக படங்களில் காட்சிப்படுத்திய படங்கள் மிகம் மிகக் குறைவே. ஆத்தா உன் கோவிலிலே, சேரன் பாண்டியன், ஒண்ணா இருக்கக் கத்துக்கணும், பாரதி கண்ணம்மா ஆகிய பல படங்கள் இந்த சாதிய வெறியைப் பேசியிருக்கும். ஆனால் எல்லாமே ‘அப்டி பண்ணினா விளைவுகள் விபரீதமாகும்’ என்கிற ரீதியில் இருக்கின்றன என்பதுதான் உண்மை. சாமி, தமிழ், சேவல் என்று ஹரியின் படங்களில் பிராமணப் பெண் வேறு சாதியில் மணமுடித்து வாழ்வதாய்க் காட்டியிருந்தாலும் முழுக்க சாதிமறுப்பைப் பேசும் படங்கள் அல்ல அவை

வேதம் புதிது படமும் சாதியை எதிர்த்துப் பேசப்பட்ட படம்தான். மகனை இழந்த தேவர் சாதி சத்யராஜ், அப்பாவை இழந்த பிராமண சாதியைச் சேர்ந்த சிறுவனான சங்கரனை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து செல்லும்போது, ’நம்ம ஆளுக நெஞ்சுல சாதியை துருப்பிடிச்ச ஆணிய அறைஞ்ச மாதிரி அடிச்சுட்டாங்க’ என்று சொல்ல, ’அப்ப பாலுத்தேவர் பாலுத்தேவர்னு சொல்லிக்கற உங்க பேர்ல இருக்கற ‘தேவர்’ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா’ என்று முகத்திலறையக் கேட்டுவிட்டு ‘நான் கரையேறிட்டேன்.. நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே’ என்று கேட்ட கேள்விக்கு இதுவரை பலரும் கரையேறாமல் இருக்கிறார்கள் என்பதே பதிலாக இருக்கிறது. 

வில்லாதிவில்லன் படத்தில் பிராமண வக்கீலாக வரும் கதாபாத்திரத்தில் சத்யராஜ், அவர்கள் எத்தனை வேற்றுமைத்தனத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருப்பார். ‘சாதியாக மதமாக இவர்கள் பிரிந்து நிற்பதுதான் நமக்கு நல்லது’ என்பதை சத்யராஜ், அமைதிப்படையில் மணிவண்ணன் வசனத்தின்மூலம் பேசி அரசியல்வாதிகள் பொட்டிலறைந்திருப்பார்.

சேரன் பாண்டியன் படத்தில், சுவர் தாண்டி வரும் பூனையை விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுவார். ஒரு விலங்குகூட, தன் சாதியைவிட கீழான சாதியாக நினைக்கப்படுகிற எல்லையிலிருந்து தன் எல்லைக்கு வந்துவிடக்கூடாது என்கிற சாதிப்பித்தை இது சொல்லும். இன்றைக்கும் தலித் குடியிருப்புகளில் ஆண் நாய்கள் வளர்க்ககூடாது என்று சொல்கிற தென்தமிழகக் கிராமங்கள் உண்டு.

நிஜமாகவே, சாதி வெறியைச் சாடுகிறதா தமிழ்சினிமாக்கள்?

என்னதான் படங்களில் சாதியை எதிர்த்துப் பேசுவதாகச் சித்தரிக்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப்பிடித்தே அதைப் பேசவேண்டியதாக இருக்கிறது என்பதே உண்மை. தேவர்மகன் படத்தில் படம் முழுக்க சாதியைத் தூக்கிப்பிடிக்கிற வசனங்கள் பாடல்கள் இருக்கும். சாதியை எதிர்த்த படமாக அது இருந்தாலும் அதைப் பேச, ஒரு ‘போற்றிப்பாடடி பொண்ணே.. தேவர் காலடி மண்ணே’ தேவைப்பட்டது. வேதம் புதிதில், ‘சாதி பேதங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பொன்மனச் செம்மலே’ என்று எம்ஜியாருக்கு படத்தை சமர்ப்பிக்கிறார். தொடர்ந்து ‘மாதா ச பார்வதி தேவோ’ என்று ராஜா குரலில் சமஸ்கிருத ஸ்லோகம் ஒலிக்கத்தான் படத்தை ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கிறது. விருமாண்டி, காதல், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, மதயானைக்கூட்டம், கொம்பன் படங்களெல்லாமே ஒரு ஆதிக்க சாதியைக் கொண்டாடிய படங்கள்தான். வெளிவர இருக்கிற ‘முத்துராமலிங்கம்’  படத்தில் இளையராஜா இசையில்  ‘தெற்கு தெச சிங்கமடா’  என்று பாடுகிறார் கமல். இதுபோன்ற முரண்களால் ஆனதுதான் சினிமாவின் சாதி எதிர்ப்புப் படைப்புகள்.


‘அதுசரி, உள்ளாடையில் அரசியல் தலைவர் படம் ஸ்டிக்கர் ஒட்டிய படத்தை வெளியிட்டவரை கைது செய்யும் காவல்துறை, ஒரு அரசியல் தலைவருக்காக கடை அடைப்பா என்று கேள்வி கேட்டு பதிவிட்டவரையும், அந்தப் பதிவிற்கு லைக் போட்டவரையும் உடனடியாக கைது செய்யும் காவல்துறை, அதிகாரம் ஒன்றையே ‘சிஸ்டமாக’ வைத்திருந்தும்கூட பொதுத் தளங்களில் இந்தக் கொலைகளை ஆதரித்தும், மிகக் கேவலமாக சாதிவெறியைத் தூண்டியும் பதிவிடுபவர்களை கிஞ்சித்தும் கண்டுகொள்வதில்லை எனும்போது.. பொழுதுபோக்கு ஊடகமாகவே பார்க்கப்படுகிற சினிமா மட்டும் என்ன மாற்றம் செய்துவிட முடியும்?’ என்று கேட்பீர்கள்.


ஒரு காவல்துறை அதிகாரி சொல்வதுதான் உங்களுக்கான பதில். ‘சினிமா தியேட்டர்களை ஒருவாரம் இழுத்து மூடிட்டா நாட்ல க்ரைம் ரேட் கூடும். நேரடியா தன்னால எதிர்க்க முடியாத ஒரு விஷயத்தை திரையில் நாயகனோ, நாயகியோ எதிர்க்கும்போது ரசிகன் சந்தோஷமாகி அவனுக்கு ஒரு வடிகாலா அமைஞ்சுடுது. சினிமா இந்த மாதிரி சமூக விரோதச் செயல்களை தொடர்ந்து எதிர்க்கணும். அட்லீஸ்ட் பேசணும்’ என்கிறார்.

ஆம். கலைகளால் நிச்சயம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றாவிட்டால் அது கலையாகாது!

-பரிசல் கிருஷ்ணா

பின் குறிப்பு: வாசகர்களே, இக்கட்டுரை தொடர்பான ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லலாம். தங்கள் விமர்சனங்களை கமெண்ட் பாக்சில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்!