Published:Updated:

இவர்களில் யார் சிறந்த சினிமா C.M?

Vikatan Correspondent
இவர்களில் யார் சிறந்த சினிமா C.M?
இவர்களில் யார் சிறந்த சினிமா C.M?

1971ல் வெளிவந்த படம் முகமது பின் துக்ளக். சோ-வின் கதை வசனத்தில் நாடகமாக வெற்றி பெற்ற இந்தப் படம், பிறகு திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றது. மக்களுடைய முட்டாள்தனத்தையும், அறியாமையையும் அவர்களுக்கு உணர்த்த இறந்த முகமது பின் துக்ளக் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரமதராவது போல கதை எழுதியிருப்பார்.

அதில் வசனங்களில், சோ பல உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்திருப்பார். அடிக்கடி ‘நன்றிகெட்ட மக்கள் இந்த நாட்டு மக்கள், இந்த நாட்டு மக்களுக்கு தெளிவில்லை’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மேடையில் பேசும் ஒருவர் ‘ருஷ்ய நாட்டைப் பாருங்கள் லெனின் என்ன சொன்னார் தெரியுமா.. மார்க்ஸ் என்ன சொன்னார்.. ஸ்டாலின் என்ன சொன்னார்?’ என்பார். நிதி மந்திரியாக விரும்புபவரிடம், ‘எல்லோருமே நிதி மந்திரிகள்தானே... நிதி திரட்டத்தானே மந்திரிகளாக வந்திருக்கிறீர்கள்? என்று கேட்பார்.

லஞ்சத்தை சட்டரீதியாக்குகிறேன் என்பார். ‘சட்டவிரோதம் எப்படி சட்டரீதியாகும்?’ என்று கேட்கும் சபை உறுப்பினரிடம் ‘ஒரு காலத்தில் கணவனை துறப்பது சட்ட விரோதம், அதையே விவாகரத்துச் சட்டம் சட்டரீதியாக்கியது.. பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது சட்ட விரோதம்.. ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் சட்டரீதியாகவில்லையா?’ என்று காரணங்களை அடுக்குவார்.

‘ஓட்டுப் போட்டு நீங்கள் கைமேல் கண்ட பலன், வெறும் மைதான்!’ என்று அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது, குழந்தைக்குப் பேர் வைங்க என்றால் ‘ரிப்பேர்’ என்று வைப்பார். ‘நாட்டின் நிலையைத்தான் வைத்தேன்’ என்பார். உங்கள் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை வெறும் நாலே நாட்களில் அடக்கிவிடலாம்.. அவ்வளவுதான் என்பார்.

‘மக்கள் மாற்றம் வரும் என்று நம்பியா ஓட்டுப் போடுகிறார்கள்? இல்லை. எந்த அரசாங்கம் வந்தாலும் நமக்கு இதுதான் கதி. இவர்கள் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுதான் வாக்களிக்கிறார்கள் என்று ‘உண்மை’யை பொட்டில் அறைத்துச் சொல்லிய இதைப் போன்ற இன்னொரு அரசியல் நையாண்டிப் படமாக, 1994ல் வெளிவந்த அமைதிப்படையைச் சொல்லலாம்.

அப்படி ஒரு நையாண்டித்தனமான, கோக்குமாக்கான அரசியல்வாதியை யாரும் விரும்பமாட்டார்கள்தான். ஆனால் இப்படி ஒரு முதலைமைச்சர் இருக்க மாட்டாரா என்று நம்மை நினைக்க வைக்கும் முதலமைச்சர் கதாபாத்திரமென்றால், இரண்டைச் சொல்லலாம்.

ஒன்று செல்வமணி இயக்கத்தில் வந்த ‘மக்களாட்சி’யின் சேதுபதி. லியாகத் அலிகானின் வசனத்தில் சேதுபதியாக மம்முட்டி பேசும் ஒரு காட்சி மிகப்பிரபலம்.

முதலில், ஏனோதானோ முதலமைச்சராக ஆள்பவர், பிறகு மக்களுக்காக ஆட்சி நடத்த தீர்மானித்துப் பேசுவார்.

வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்று மம்முட்டி சொல்ல ’மதுவிலக்கைக் கொண்டுவந்ததால அரசுக்கு 200 கோடி வருமானம் இழப்பு. இப்ப வரியும் போடலைன்னா எப்படி வருமானம் வரும்?’ என்றொரு அதிகாரி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் மம்முட்டி:

‘வரும் அதுக்கு நாலு வழி இருக்கு. நீங்க உங்க நிலத்தை 10 லட்சத்துக்கு வாங்கி 50000க்கு ஏன் பதிவு பண்ணினீங்க? 13% வரின்னதால ஆறாயிரத்துச் சொச்சம் வரி கட்னீங்க. அதே குறைச்சு 4% தான் வரின்னு சொல்லீருந்தா, ஒழுங்கா 40000 கட்டிருப்பீங்க. வரிய ஏத்தி ஜனங்கள் அரசாங்கத்தை ஏமாத்தறதவிட, வரியை கொறச்சு ஒழுங்கா வசூலிச்சாலே, அரசாங்கத்துக்கு 200 கோடி ரூபா தாராளமா வரும். இப்ப நம்ம நாட்ல பெரிய வியாபாரம் கல்விதான். பணம் ஜாஸ்தி இருக்கறவன் காலேஜ் திறக்கறான், கம்மியா இருக்கறவன் கான்வெண்ட் திறக்கறான். இனி நம்ம நாட்ல மெடிகல், இஞ்சினியரிங் காலேஜ் தனியாருக்கு கிடையாது. வசதி படைச்சவன், தனியாருக்கு பத்து லட்சம் தர்றப்ப கவர்மெண்ட்டுக்கு ரெண்டு லட்சம் தரமாட்டாங்களா? அதுனால வருமானம் வரும்.


அடுத்து கிரானைட், அதையும் அரசாங்கம் எடுத்துக்கும். நாலாவதா, அரசாங்க வேலையெல்லாம் கட்சிக்காரங்களுக்கோ அவங்க பினாமிக்கோ காண்டிராக்ட் விடக்கூடாது. எல்லாருக்கும் அந்தந்தப் பஞ்சாயத்துல இருக்கற படிச்சு வேலையில்லாம இருக்கற இளைஞர்கள், ஓவர்சியர்லாம் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தணும். அவங்களுக்குத்தான் இந்த மாதிரியான காண்ட்ராக்ட்ஸ் குடுக்கணும். மக்களுக்கு இலவசங்களை குடுக்கறத விட, இப்படி உழைக்க வழி சொன்னா அவங்களும் சந்தோஷமா செய்வாங்க’ என்பார்.

இறுதிக்காட்சியில் அவர் சொல்லும் ’ஊர்பேர் தெரியாத என்னை வாழ்கன்னீங்க. அப்பறம் ஒழிகன்னீங்க. இப்படி உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தா அவர் ஆட்சி, இவர் ஆட்சியெல்லாம் வருமே தவிர மக்களாட்சி வராது. என்னைக்கு சிந்திச்சு ஓட்டு போடறீங்களோ அப்பதான் மக்களாட்சி மலரும்’ என்ற வசனம் எந்தத் தேர்தலுக்கும் பொருந்தும்!

அடுத்து, நமக்கெல்லாம் மிகப்பிரபலமான முதல்வன் புகழேந்தி. ஷங்கரின் கனவுக் கதாபாத்திரமாக இருக்க வேண்டும். அப்படி சிரத்தையாக வடிவமைத்திருப்பார். வசனத்துக்கு சுஜாதா.. கேட்கவா வேண்டும்?

ஒருநாள் முதல்வராக பதவியேற்ற அடுத்த நொடி, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை அழைத்துப் பேசுவார்.

‘நம்ம நாடு முன்னேறாம இருக்கறதுக்கு காரணம் மூணு பேர். அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்யாதவங்க, கடமைய செய்யறப்போ குறுக்கிடறவங்க, மூணு - அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்றவங்க.  தப்பு செய்றவங்க தப்பிக்கறதுக்கு மிரட்டியோ காக்கா பிடிச்சோ லஞ்சம் குடுத்தோ தப்பிச்சுடறாங்க சாதாரண பியூன்ல ஆரம்பிச்சு, ஐஏஎஸ் ஐபிஎஸ் வரைக்கும் இந்த மாதிரி ஆளுக இருக்காங்க. இவங்கள பத்தின கம்ப்ளெய்ண்ட் வந்தும் நீங்க ஆக்‌ஷன் எடுக்கறதில்ல தண்டிக்கறதில்லை. எந்த பயமும் இவங்களுக்கு கெடையாது.. கரப்ட் டு த கோர்’ என்று கத்தி ஒரு மணிநேரத்தில் அவர்கள் எல்லாரைப் பற்றியும் ஃபைல் கேட்டு, அனைவரையும் சஸ்பெண்ட், டிஸ்மிஸ், அரெஸ்ட் என்று அதிரடி கிளப்புவார்.

தெருவில் இறங்கி, வீடுகளை உள்வாடகைக்கு விட்ட குடிசை மாற்று வாரிய டைரக்டர், எஃப் ஐ ஆர் வாங்காத காவல்துறை அதிகாரி, ரேஷன்பொருட்களில் எடை சரியாக நிறுத்தாத ஊழியர்கள் என்று எல்லாரையும் ஆன் த ஸ்பாட்டில் சஸ்பெண்ட் செய்வார். கடமை தவறிய மந்திரிகளைக் கைது செய்வார். அது முன்னாள் முதலமைச்சர் அரங்கநாதன் வரை தொடரும். மக்களிடம், அவர்கள் வாங்கும் பொருளுகெல்லாம் பில் கேட்கச் சொல்லுவார். கடைக்காரர்களை விற்பனை வரி கட்ட வைப்பார். கட்டாத கடைகளுக்கு லைசென்ஸ் கேன்சல் செய்வார். டெலிஃபோனில் நேரடியாக மக்களிடம் பேசி அவர்களின் குறைகளை அப்போதைக்கப்போதே தீர்ப்பார்.

முகமது பின் துக்ளக்கிற்குதான் நாம் தகுதியா.. அல்லது சேதுபதியோ, புகழேந்தியோ நமக்குக் கிடைப்பார்களா?
.

-பரிசல் கிருஷ்ணா