Published:Updated:

இந்த அசாத்தியம் இவர்களுக்கு மட்டுமே சாத்தியம் - தளபதி!

இந்த அசாத்தியம் இவர்களுக்கு மட்டுமே சாத்தியம் - தளபதி!
இந்த அசாத்தியம் இவர்களுக்கு மட்டுமே சாத்தியம் - தளபதி!
90களில் சினிமா டைட்டில்களில் வெள்ளை எழுத்தும், சிவப்பு நிற அண்டர்லைனும் தான் பிரபலம். 90களின் இறுதியில் இந்தப் படத்தை ஒருமுறை டி .வி யில் பார்த்தான் அவன்.  தமிழ் சினிமாவில் அதிக முறை டிவியில் போடப்பட்டது தளபதியாகத்தான் இருக்கும்.  அதன் சிவப்பு நிற எழுத்துகள் சரியாக தெரியவில்லை. அப்போது அவனுடன் இருந்த அண்ணன் ஒருவர் சொன்னார்;
“நம்ம ஊர் ஸ்க்ரீன்ல வெள்ளை எழுத்துதான் நல்லா தெரியும்.ஆனாலும் மணி ஏன் இத பண்ணார் தெரியுமா”
“ஏதாவது இங்க்லீஷ் படத்துல வந்துச்சா?”
“இல்ல. படத்துல ஹீரோ, சூர்யாதான் கர்ணன். அவன் சூரியனோட பையன். படம் பாரு. அவனோட வாழ்க்கைல முக்கியமான சம்பவங்கள் எல்லாத்திலும் சூரியன் இருக்கும்”
அவ்வளவுதான். ஆர்வம் தாங்கவில்லை அவனுக்கு. அடுத்தமுறை  டிவியில் போட்டபோது விளம்பரங்களைக் கூட விடாமல் பார்த்தான். படத்தில் அதிக காட்சிகளில் தலை காட்டியது சூரியன் தான். தளபதி படம் அவனுக்கு தமிழில் மிகப்பிடித்த படமாக மாறிப்போனது அன்றுதான். அது சன் மூவீஸ் காலம். 48 மணி நேரத்தில் மூன்று முறை தளபதி போடுவார்கள். விழித்திருந்து வெறிகொண்டு பார்த்தான்.  மூன்று நான்கு தடவை பார்த்தபின் ஒவ்வொரு காட்சியிலும் மணிரத்னம் மின்னினார். Classic.
படத்தில் ஒரு கோயில் காட்சி. ரஜினி நின்று கொண்டிருக்க, ஸ்ரீவித்யாவும் வந்து அருகே  நிற்பார். எதிரில் ஜெய்சங்கர். தன் அம்மாதான் ஸ்ரீவித்யா என்பது ரஜினிக்கோ, தன் மகன்தான் ரஜினி என்று ஸ்ரீவித்யாவுக்கோ தெரியாது. ஆனால் ஜெய்சங்கருக்கு தெரியும். அவர் இருவரையும் பார்ப்பார். அர்ச்சகர் மந்திரத்தை ஆரம்பிப்பார். பின்னால் எங்கோ ஒரு கூட்ஸ் வண்டி செல்லும் ஓசை கேட்டதும் ரஜினியும், ஸ்ரீவித்யாவும் திரும்பிப் பார்த்து கண் கலங்குவார்கள். இப்போது மந்திர ஓசை நின்று இரயில் செல்லும் ஓசை கேட்கும்.  அடுத்த நொடி மணிரத்னத்தோடு இணைவார் இசை ராட்சஷன். ‘சின்னத்தாயவள்’ என்று புல்லாங்குழல் இசைக்க தபேலாவுடன் வரும் அந்தப் பின்னணி இசை.  ஒரு மெல்லிய வெளிச்சத்தில் இந்தக் காட்சியை அழகாய் படம்பிடித்திருப்பார் சந்தோஷ் சிவன். ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, ரஜினியின் நடிப்பு, கேமரா ஆங்கிள், மணியின் இயக்கம், ராஜாவின் இசை. 

தளபதி மகாபாரதத்தின் தழுவல் என்பது நாம் அறிந்ததே. மகாபாரதத்தில்  கர்ணன் துரியோதனின் மனைவியுடன் விளையாடும்போது அவர் கைப்பிடித்து இழுத்ததும், அவள் அணிந்திருந்த முத்துக்கள் சிதறும்.  அதை துரியோதனன் பார்த்து ‘எடுக்கவோ கோர்க்கவோ’ என்பான். இது  உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். மணி இதனைத் தன் கதையிலும் வைத்திருப்பார்.  ஆனால் அதற்கிணையான காட்சி என்று சொன்னால்தான் புரியும். அந்த மேஜிக் தான் மணி.

மம்மூட்டியும், கீதாவும் ஷோபனா வீட்டிற்குப் பெண் கேட்டுச் சென்றிருப்பார்கள். அவர்கள் முடியாது என சொல்லிவிடுவார்கள். இப்போது கீதாவிடம் ரஜினி வந்து “போயிருந்திங்களாமே.. தட்டத் தூக்கீட்டுப் போயிருந்தீங்களாமே’ என ஆரம்பித்து கீதாவிடம் உரிமையோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவ்வளவு இயல்பான உடல்மொழியோடு  இருப்பார் ரஜினி. அப்போது மம்மூட்டி வர, கீதாவின் பார்வை அந்தப் பக்கம் போகும். ரஜினி கீதாவை பார்த்துவிட்டு, அந்த பார்வை சென்ற திசையில் பார்ப்பார். உடனே ரஜினியின் உடல்மொழி இறுக்கமாகும். ஹோம் ஒர்க் செய்யாத மாணவனை போல நேராக இருப்பார். “கேட்டுட்டு இருந்தேன்” என பதில் சொல்வார்.
எந்த ஒரு காட்சியையும் /கதையையும் அப்படியே எடுத்து வைப்பவர் அல்ல மணி. ரீமேக் அல்லது இன்ஸ்பிரேஷன் என்பதற்கு இந்தக் காட்சியை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். நண்பனின் மனைவியிடம் உரிமை எடுத்துக் கொள்வது,  நண்பன் பார்த்தும் அதைப்  புரிந்துக்கொள்வது என்ற சாராம்சம் மட்டும் எடுத்துக் கொண்டு அழகாக சீன் ஆக்கியிருப்பார். 
சொற்களை விரயம் ஆக்குவது மணிக்கு பிடிக்காது. 
“எத்தனை பேர்”
‘ஒருத்தன்’
‘பேரு’
‘சூர்யா..!’
மறக்க முடியுமா இந்த வசனங்களை?
ஸ்ரீவித்யா ரஜினியை தேடி வரும் காட்சியிலும் மெளனத்தை அழகாக பயன்படுத்தி இருப்பார். ரஜினி வீட்டில் அந்த மஞ்சள் நிற சேலை, கொடியில் இருக்கும். உள்ளே வரும் ஸ்ரீவித்யா அந்த சேலையை  எடுத்து அழ ஆரம்பிக்க, எல்லா விஷயங்களும் அந்த ஒற்றை ஆக்‌ஷனில் புரிந்துவிடும். அதன்பிறகு ரஜினியைத் தன் மடியில் வைத்து ஸ்ரீவித்யா அழும்போது சின்னத்தாயவள் பிஜிஎம் ஒலிக்கும். எப்படி.. வயலினிலோ, புல்லாங்குழலிலோ அல்ல.
தாலாட்டில்..!
 ரஜினி ஷோபனாவைப் பிரிந்து போய்விடுவார். போகும்போது சுந்தரி கண்ணால் ஒரு சேதியின் ‘நானுனை நீங்கமாட்டேன்’ பிஜிஎம்மில் ஒலிக்க ஆரம்பிக்கும். பின்னால் அஸ்தமனச் சூரியன் இருக்க,  இடுப்பில் கைவைத்துத் திரும்பும் ரஜினி ஸ்டில்லை மறக்க முடியுமா? ஷோபனா பார்வையில் இருந்து மறைய, ‘சேர்ந்ததே நம் ஜீவனே.. சுந்தரி... ’ வரை வயலின்களின் கலவையில் ஒலித்துக் கொண்டிருந்த பிஜிஎம்  ‘கண்ணால் ஒரு சேதி’ வரும்போது புல்லாங்குழலுக்கு மாறி புல்லரிக்க வைக்கும். 
சில காட்சிகள் தாண்டி.. ஷோபனாவுக்கு அரவிந்த்சாமியுடன் திருமணமானபிறகு, அரவிந்த்சாமியைப் பார்க்க ரஜினி செல்லும்போது சோபனா நின்று கொண்டிருப்பார். ரஜினியின் பார்வையில், அவர் வந்ததும் ஒற்றை வயலினில் ஆரம்பிக்கும் அதே ‘நானுனை நீங்க மாட்டேன்’. ஆனால் இப்போது முழுவதுமே ஒற்றை வயலின்தான். ‘நீங்க மாட்டேன்னு நீங்கிட்டியே’ என்று காட்சிப்படுத்தலில் மணி கலக்க, இசையில் ராஜா கலக்க.. ப்ச்.. வேற லெவல்!
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தமாதிரி ஒரு காட்சி உண்டு. சென்ற நூற்றாண்டின் சிறந்த காட்சியெனக் கொண்டாட அனைத்து தகுதிகளும் அமைந்த காட்சி. ரஜினியையும், மம்முட்டியையும் ‘உங்க ரௌடித்தனத்தை நிறுத்திக்கோங்க’ என்று எச்சரிக்க ‘கலெக்டர்’ அரவிந்த்சாமி அழைத்துப் பேசும் காட்சி. கேமரா ஆங்கிள்,  கிட்டி,  நாகேஷ், சாருஹாசன் உட்பட எல்லோருமே அமர்ந்திருக்கும் வரிசை, அமர்ந்திருக்கும்  விதம் என்று எல்லாமே அத்தனை திட்டமிடலோடு இருக்கும். 
நாகேஷ் சாய்ந்து உட்காராமல், கொஞ்சம் முன்னால் வந்து அமர்ந்திருப்பார். அரவிந்த்சாமியின் உடல்மொழியிலேயே கலெக்டருக்கான அதிகார தோரணை இருக்கும்.  ரஜினி, மம்முட்டி இருவருமே ‘நாங்கதாண்டா கெத்து’ என்கிற திமிருடன் அமர்ந்திருப்பார்கள். ’இவனுகள்லாம் ஒரு ஆளுகன்னு கூட்டிட்டு வந்து பேசிகிட்டு..’ என்கிற மனநிலையில் இருக்கும் கிட்டி, சாய்ந்து உட்கார்ந்ததோடு கால்மேல் கால் போட்டும் அமர்ந்திருப்பார். கலெக்டரின் உதவியாளரான சாருஹாசன், முன் சாய்ந்து ‘இதெல்லாம் நாம கேட்கக் கூடாது’ என்கிற அரசு ஊழியருக்கே உரிய பாணியில் ஏதோ பேப்பரைப் பார்த்துக் கொண்டிருப்பார். கிட்டி பேசும்போது, அரவிந்த்சாமி எதுவும் நினைப்பாரோ என்கிற பயமில்லாமல் பேசுவார். அதே நாகேஷ் பேசும்போது மம்முட்டி திரும்பிப் பார்க்க, நாகேஷும் பார்த்து நிறுத்திக் கொள்ளுவார்.  இப்படி பல நுணுக்கங்கள் இருக்கும்.
3.17 நிமிடங்கள் ஓடும் இந்தக் காட்சியில் 1.06 வது நிமிடத்தில் சின்னதாக ஒரு ஒலி ஆரம்பிக்கும். அதன் பின் அது நின்றுவிடும். ரஜினி கொஞ்சம் கோபமாக ‘நல்லாருக்கு சார். உங்ககிட்ட ஒருத்தன் பெட்டிஷன் கொண்டுவந்தா..’ என்று சூடாக ஆரம்பிக்க இசையும் கொஞ்சம் உயரும். எல்லாம் கேட்டுவிட்டு ‘நான் பயப்படமாட்டேன்’ என்று அரவிந்த்சாமி சொல்லும்போது வெறும் பத்தே பத்து செகண்ட் வரும் ஒரு பிஜிஎம். இப்படி அனைத்தும் அமைந்த காம்பினேஷன் , இந்தக் காட்சியின் அற்புதம்!

பகல்நிலவில் ஆரம்பித்து ஓ காதல் கண்மணி வரை தமிழிலே தலைப்புகள், முடிந்தவரை தமிழில் பாடல்களென மணிரத்னத்தை கொண்டாட ஏகப்பட்ட விஷயங்களிருக்கின்றன. ஆயிரம் படங்கள், வாழ்வின் அனைத்து சூழலுக்குமான பாடல்களைத் தந்தவர் என்று ராஜாவைக் கொண்டாடவும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.
 

எங்களுக்கு தளபதி படம் ஒன்றே போதும்.