Published:Updated:

’பிரின்ஸ்’ மகேஷ்பாபுவை சூப்பர் ஸ்டாராக மாற்றிய 15 விஷயங்கள்!

’பிரின்ஸ்’ மகேஷ்பாபு!
’பிரின்ஸ்’ மகேஷ்பாபு!

சூப்பர்ஸ்டார், ரசிகர்களின் ஃபேவரைட் நாயகன், பிரின்ஸ் மகேஷ்பாபுவின் பிறந்த நாள் இன்று.

தெலுங்கின் சூப்பர்ஸ்டார், ரசிகர்களின் ஃபேவரைட் நாயகன், பிரின்ஸ் மகேஷ்பாபுவின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி தெரிந்ததும்..  தெரியாததும் என விஷயங்கள் 15 இதோ!                                          

மகேஷ் பாபு நடித்த 22 படங்களில் 7 படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. 2 படங்கள் தமிழில் ( ஒக்கடு - கில்லி,  போக்கிரி - போக்கிரி, நானி மற்றும் நியூ படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகின) ரீமேக் ஆகியிருக்கின்றன. ஆனால், மகேஷ் ஒரு ரீமேக் படத்திலும் நடித்ததில்லை.

முதல் படம் ராஜகுமாருடு (இளவரசன்). அதனால் இன்றும் ரசிகர்களால்  பிரின்ஸ் என்றழைக்கப்படும் இவர், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். செயின்ட் பீட் பள்ளியில் கார்த்தி இவரின் ஸ்கூல்மேட். கல்லூரிப் படிப்பாக காமர்ஸ் படித்தது சென்னை லயோலா கல்லூரியில்.

தெலுங்கில் ரகளையாக வசனம் பேசி தெறிக்கவிடும் மகேஷுக்கு தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியாது. வசனங்களை படிக்க முடியாததால் மனப்பாடம் செய்து கொண்டு தான் பேசுவார். சென்னையிலேயே இருந்து தெலுங்கு உச்சரிப்பு மறந்து போய்விட, அதற்கு தனியாக பயிற்சி எடுத்த பின்பே நடிக்க சென்றார். அதே சமயம் தமிழில் சரளமாக பேச, எழுத, படிக்க என புகுந்து விளையாடுவார்.

தன்னுடன் 'வம்சி' படத்தில் நடித்த நம்ரதாவை நான்கு வருட காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். நம்ரதாவுக்கு மகேஷ் பாபுவை விட மூன்று வயது அதிகம்.

நடிப்பு எந்த விதத்திலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தடுக்காமல் பார்த்துக் கொள்வதில் மகேஷ் கில்லி. படப்பிடிப்புக்கு இடையிலோ, முடிந்த பின்போ ஒரு பெரிய ப்ரேக் எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் பிக்னிக் போவது வழக்கம். குறைந்த பட்சம் மகன் கௌதம், மகள் சித்ராவுக்குப் பிடித்த ரெஸ்டரென்ட்டுக்கு அழைத்துச் சென்று நேரம் செலவிடுவார்.

தந்தை கிருஷ்ணாவுடன் இவர் நடித்திருக்கிறார். அதே போல, 'நேனொக்கடினே' படத்தில் மகன் கௌதமுடன் நடித்திருந்தார் மகேஷ்.

மகேஷ் நடித்த முராரி படம் மூலம் ஸ்டன்ட் மாஸ்டராக அறிமுகமானவர் தான் பீட்டர் ஹெய்ன்.

ஒரே மாதிரி கதைகளிலேயே நடித்துக் கொண்டிருப்பதாக மகேஷுக்குத் தோன்ற ஒரு மூன்று வருடம் நடிப்புக்கு ப்ரேக் விட்டார். அதன் பின் நடித்தது தான் 'கலீஜா'

மகேஷுக்கு ஒரு ட்ரீம் ரோல் கௌபாய் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதனாலேயே அவர் ஆசை ஆசையாய் நடித்த படம் தான் 'டக்கரி தொங்கா'.

மகேஷ் ஒரு செயின் ஸ்மோக்கர். ஆனால், தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு சிகரெட் பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டார்.

தெலுங்கு சினிமாவில் மகேஷுக்கு மிகவும் க்ளோஸான இயக்குநர்கள் த்ரிவிக்ரம், பூரி, ஸ்ரீனு வைட்டலா

இதுவரை மகேஷ் 7 முறை நந்தி விருது பெற்றிருக்கிறார்.

மகேஷ் பாபு தீவிரமான கேம் ஆஃப் த்ரோன்ஸின் ஃபேன். அதில் காலீஸ் (khalesse) கதாப்பாத்திரம் மிகவும் பிடிக்குமாம்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் - தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகும் - பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மகேஷ்.

ஹேப்பி பர்த்டே பிரின்ஸ்!

பா.ஜான்ஸன்

அடுத்த கட்டுரைக்கு