Published:Updated:

அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா #25YearsOfGuna

அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா  #25YearsOfGuna
அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா #25YearsOfGuna

அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா #25YearsOfGuna

அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா  #25YearsOfGuna

“இங்க எல்லோரும் பைத்தியம் தான். பணப் பைத்தியம்…பொம்பளப் பைத்தியம்” – இவை பைத்தியக்காரன் குணாவிடம் அபிராமி கூறிய வார்த்தைகள். இச்சமூகத்தைச் செருப்பால் அடிக்கும் சொற்கள். நாகரீக மனிதனாய் வாழும் ஒவ்வொருத்தரும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள் அவை. ஆசை என்னும் போர்வைக்குள் உறங்கிக்கொண்டு, சக மனிதனை காயப்படுத்துபவர்களைவிட உன்னதமான, மனிதனாய் தான் அபிராமியின் கண்களில் விழுகிறான் குணா.

ஆமாம் யார் அந்த குணா? வாழ்க்கை, கல் போல கீழே விழும் என்று கூறிய டாக்டரிடம், தான் இறகைப் போல் பறக்க நினைப்பவன் என்று கூறிய பைத்தியக்காரன். காதல் எப்படியான உணர்வென்பதை மனித மிருகங்களுக்கு உணர்த்திய பிராந்தன். வெள்ளித்திரை எனும் தொட்டிலில் அவன் தோன்றி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள் ‘கண்மணி’யின் வாயிலாய் வாழ்ந்து வந்த இந்த குணாவைப் பற்றி... 

1991 – நவம்பர் 5... கமர்ஷியல் சினிமாவை மட்டும் கொண்டாடத் தெரிந்த தமிழ் ரசிகர்களுக்கு,  புரியாத புதிராய் விளங்கும் கமல்ஹாசன், குணா என்னும் மாபெரும் பரிணாமத்தோடு தோன்றிய தினம். அன்றைய நாட்களில் சுமாரான வசூல் தான், பெரிய வெற்றியெல்லாம் கிடையாது. ஆனால் குணா - தமிழ் சினிமாவில் மாபெரும் பொக்கிஷமாய் வெள்ளிவிழா கண்டுகொண்டிருக்கிறது. 

உலகில் இருக்கும் சுற்றுலா பகுதிகளையும் தேடிச்சென்று தமிழ்சினிமா படமாக்குகிறது. ஆனால் ஷூட் செய்த ஒரு இடத்தைப்  பின்னாளில் சுற்றுலாத்தளமாக மாற்றிய பெருமை குணா திரைப்படத்தையேச் சாரும். ‘மரணத்தின் சமையலறை’ என்று அழைக்கப்பட்ட பாறைகள் பின்னாளில் ‘குணா பாறை’களாக மாறின.  சுமார் 600-700 அடி ஆழமுள்ள குகையில், இக்கட்டாண நிலையிலும் நடிப்பின் மறுமுகத்தைக் காட்டியிருந்தார் கமல்ஹாசன். மொத்த யூனிட்டும், கொடைக்கானலின் கடும் குளிரில் உறைந்தது. ஆபத்தான அந்தப் பாறைகளில் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தியதன் விளைவு தான் நாம், இன்றும் குணாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருகிறோம்.

அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா  #25YearsOfGuna

பட இயக்குநர் சந்தானபாரதிக்கு அது வாழ்நாள் அனுபவமாய் அமைந்திருக்கும். ஆடையமைப்பு, உடல்மொழி போன்றவற்றில் மட்டும் மாற்றம் செய்யாமல், தோற்றத்தையே மாற்றி, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தார் கமல். தன் பொன்னிற தேகத்தில் கரியைப் பூசிக்கொண்டு மனநோயாளியாய் வாழ்ந்து காட்டினார்.  ரேகா, ஜனகராஜ், எஸ்.பி.பி, கிரிஷ் கர்னாட் என்று நிறைய நடிகர்கள். ஆனாலும் படம் முழுவதுமே கமல் தான் ஒன் மேன் ஷோ. 

முதன்முதலில் அபிராமியை கோவிலில் பார்த்த தருணம்.....குழந்தை முகத்தோடும் சரி, அவளைத் தூக்கிக்கொண்டு மதிகெட்டான் சோலையில் சுற்றித் திரிந்த காட்சிகளிலும் சரி, ஒவ்வொரு காட்சியிலும், ஸ்கோர் செய்த கமல், ஒரு மனநோயாளியாக கண்முன் வாழ்ந்திருப்பார். இதெற்கெல்லாம் பலம் தருகிறது இளையராஜாவின் இசை. தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத பாடல்களில் ஒன்றை குணாவின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தாக்கிய இசைஞானியின் அந்த மெட்டுகள் காதலை ஒவ்வொரு காதுக்கும் கடத்தின.

‘கண்மணி அன்போடு காதலன்’ பாட்டு இன்று சந்தோஷ் நாராயனனை ரசிக்கும் ‘ஜென் Z’ யுவ/யுவதிகளின் பிளே-லிஸ்டிலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். காதலனின் உணர்வை அப்படிய கடத்திச் செல்லும் வாலியின் வரிகள் காலத்தை வென்றவை. இன்னும் நிலைத்து நிற்பவை. இவர்களுடன் கானகத்தையும் காதலையும் ஒருசேரப் பதிவு செய்திருக்கும் வேனுவின் ஒளிப்பதிவு. வசனமும் மெட்டுகளும் சேர்ந்து ஒலித்த அந்தப் பாடல், என அனைத்துமே சினிமாவின் மைல்கல். காதலிகளுக்குக் கடிதம் எழுத நினைக்கும் ஒவ்வொருவரின் ஆப்லங்கேடாவிலும், முதலில் ஸ்டிரைக் ஆவது நிச்சயம் கண்மணியும் அபிராமியும் தான். 

இவர்களைத் தாண்டி, நிச்சயம் பேசவேண்டிய ஓர் நபர், ஜான். இந்த சரித்திரக் காவியத்தின் திரைக்கதையாசிரியர். குணா என்னும் பைத்தியக்காரக் கதாபாத்திரத்தை ரோமியோவிற்கும் மஜ்னுவிற்கும் நிகராக்கியவர். தன்னை ஒருவன் துப்பாக்கியால் சுட்டபோது, பொறுமையாய் பேசிக்கொண்டிருந்தவன், சிறு குருவியைக் கொன்றதனால் வெகுண்டெழுகிறான். தன் கற்பனையில் தோன்றிய பெண்ணுக்காக தன் வாழ்க்கையையே இழக்கவும் தயாராயிருக்கிறான். இப்படியொரு கதாப்பாத்திரம் தந்த ஜானிற்கு கோடி லைக்ஸ்.

அபிராமியை அவன் சிறைபிடித்திருந்தான், ஆனால் அவளிடம் வன்மம் காட்டவில்லை. தெய்வமாய், தேவதையாய் மட்டுமே பாவித்தான். காதல் வெறும் உடல் சார்ந்த உணர்வில்லை என்பதை மிக அற்புதமாகச் சொன்ன இடத்தில்தான் குணா வெற்றியடைகிறது. அவளுக்காக எதையும் செய்ய துணிந்தவன். பெண்மையை மதிக்கத்தெரிந்த அவனைப் போன்றவர்கள் இந்த உலகில் பைத்தியமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். 

எத்தனையோ படங்களில், காட்சிகளில் இந்தப் படமும் அதன் காட்சிகளும் இமிடேட் செய்யப்பட்டதுண்டு. ஆனால் இதுவரை அப்படத்தை ரீமேக் செய்ய யாரும் நினைக்கவில்லை. மீண்டும் இந்த குணசேகரனுக்கு உயிர்கொடுக்கமுடியுமா? என்பது சிந்திக்கவேண்டிய நிமிடங்கள். 

எந்த ஒரு மனிதனுக்கும் காதல் வரும். அந்தக் காதல் உண்மையாய் இருந்தால், அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதற்கு குணா, மிகச்சிறந்த உதாரணம். குணாவின் காதலை அந்த கடவுள் கூடப் புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் அவன் சேர நினைத்த பெளர்ணமி நாளிலே அவளைப் பிரிந்துவிடுகிறான் குணா. உணர்வுகளின் ஆகச்சிறந்த ஸ்பரிசம் காதல். உண்மையான காதல்களை, காதலர்கள் புரிந்துகொள்வதில் கூட சிக்கல் ஏற்படலாம். அதையும் தாண்டி காதல் வாழும். 

-மு.பிரதீப் கிருஷ்ணா-

அடுத்த கட்டுரைக்கு