Published:Updated:

மணிரத்னம்-வைரமுத்து, கெளதம்-தாமரை, ரஞ்சித்-உமாதேவி..எப்படி நடக்குது இந்த மேஜிக்?

Vikatan Correspondent
மணிரத்னம்-வைரமுத்து, கெளதம்-தாமரை, ரஞ்சித்-உமாதேவி..எப்படி நடக்குது இந்த மேஜிக்?
மணிரத்னம்-வைரமுத்து, கெளதம்-தாமரை, ரஞ்சித்-உமாதேவி..எப்படி நடக்குது இந்த மேஜிக்?

கோடிக்கணக்கில் பந்தயம் கட்டி தைரியமாகச் சொல்லலாம் தமிழ்ப் பாடலாசிரியர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என. காதல், சோகம், தன்னம்பிக்கை என சகல ஏரியாக்களிலும் சிக்ஸர் அடிக்கும் பாடலாசிரியர்கள் ஒரு சில இயக்குநர்களோடு கைகோர்த்தால் மட்டும் சூப்பர் ஓவரில் வெளுத்து வாங்கும் பேட்ஸ்மேனைப் போல மாறிவிடுவார்கள். இயக்குநரின் காட்சியமைப்பும் கவிஞரின் வரிகளுமாய் அந்தப் பாடல் காட்சிகள் சூப்பர் மூன் லெவலுக்கு இருக்கும். அப்படித் தமிழ் சினிமாவிற்கு வேற லெவல் பாடல்களைத் தந்த சில டைரக்டர் - பாடலாசிரியர் காம்பினேஷன்கள் இங்கே :

மணிரத்னம் - வைரமுத்து :

'ரோஜா'வில் கைகோர்த்த ரசனையாளர்கள். வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி எனத் தொட்ட இடத்தில் எல்லாம் காதலை உணர வைக்கும் ரசவாதிகள். 'என் சுவாசக்காற்று வரும் பாதை பார்த்து உயிர்தாங்கி நான் இருப்பேன்' - காத்திருத்தலை நச்சென சொன்ன வரிகள் இவை. 'பிரிவோம் நதிகளே...பிழைத்தால் வருகிறோம், மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்' - அகதிகளின் வாழ்க்கையை இரண்டு வரிகளில் விளக்க வைரமுத்துவால் மட்டுமே முடியும். காதில் குருதி வடிய வைக்கும் வரிகளுக்கு கண்ணை கலங்கச் செய்யும் காட்சிகளை வைத்தது மணிரத்னம் டச். 'மென்டல் மனதில்' என பல்ஸ் பிடித்துப் பாடல் வைப்பதிலும், 'தீரா உலா' என தீராக்காதலை உணர வைப்பதிலும் இருக்கிறது இந்த இரண்டு ஜாம்பவான்களின் வெற்றி.

செல்வராகவன் - நா.முத்துக்குமார் :

காதல் கொண்டேனில் மையம்கொண்ட இரட்டைப் புயல். 'காதல் இல்லை, இது காமம் இல்லை, இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை' - படத்தின் அழுத்தமான கதையையே ஒருவரியில் சொல்லிவிட முடிந்தது. 'அமர்ந்து பேசும் கதைகளின் நிழலும் நமது கதையை காலமும் சொல்லும்' - காதலிக்கு நிரந்தரமாக விடைகொடுக்கும் சோகத்தை இதைவிட எப்படிச் சொல்லிவிட முடியும்? 'கண் திறந்திவள் பார்க்கும்போது கடவுளை இங்கு நம்பும் மனது' - நம்மைக் கடந்து செல்லும் தேவதையைப் பளிச்சென வர்ணிக்கும் மேஜிக். அதுதான் இந்த காம்போவின் வெற்றி. முத்துக்குமாரை நம்மைவிட செல்வா நிறையவே மிஸ் செய்வார்.

விஷ்ணுவர்தன் - பா.விஜய் :

'தீப்பிடிக்க தீப்பிடிக்க' இணைந்து தமிழகத்தில் அனலடிக்க வைத்த ஜோடி. தத்துவம், ஸ்டைலிஷ் ஹீரோயிசம், ஐட்டம் நம்பர், குத்துப்பாட்டு என 'பில்லா' என்ற ஒரே படத்தில் எக்கச்சக்க ஜானர்களை கொடுத்து வெளுத்தது இந்த ஜோடி. 'காற்றுக்குள்ளே வாசம் போல அட எனக்குள் நீ... காட்டுக்குள்ளே மழையைப் போல அட உனக்குள் நான் - வாட் எ ரசனை சார்! 'சர்வம்' முழுக்க சலசலத்து ஓடியது இவர்களின் காதல் ஊற்று. 'பட்டியல்',  'ஆரம்பம்' என்று ஹிட்டடித்தவர்களுக்குக் காத்திருக்கிறது இசை வெற்றி. 

கெளதம்வாசுதேவ் மேனன் - தாமரை :

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் பெஸ்ட் காம்போ. 'மின்னலே'யில் தொடங்கிய பயணம் அச்சமின்றி 'என்னை நோக்கி பாயும் தோட்டா' வரை தொடர்கிறது. 'அடை மழை வரும் அதில் நனைவோமே...குளிர் காய்ச்சலோடு சிநேகம்...ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்' - பின்னிரவுகளில் கிறங்கடிக்கும் இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தூய தமிழ் வார்த்தைகள் இந்தக் கூட்டணி நமக்கு அளிக்கும் கொடை. 'சந்தியா கால மேகங்கள்', காட்சிப் பிழை போலே', 'காஞ்சனை', 'கலாபம் போலாடும்' எனக் கேட்டவுடன் சிலிர்க்கும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் தாமரை. இவர்கள் புண்ணியத்தில் காதலைக் கொண்டாட நமக்குப் பஞ்சமில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் - மதன் கார்க்கி :

மூன்று படங்களில்தான் இருவரும் சேர்ந்து பணியாற்றிருக்கிறார்கள். ஆனால் இயற்றும் பாடல்கள் எல்லாம் தெறி ட்ரெண்ட் செட்டிங் ஹிட்ஸ். தமிழ் தாண்டி சீன மொழியிலும் பாடல் எழுதலாம் என நிரூபித்தக் கூட்டணி இது. இளசுகளை பச்சக்கென கவரும் வரிகளை பல்ஸ் பிடித்துப் பாடல் அமைப்பது இந்தக் கூட்டணியின் பெரிய பிளஸ். 'கூகுள் கூகுள்' எனத் தேடவும் வைப்பார்கள், 'செல்ஃபி புள்ள' என ஆடவும் வைப்பார்கள். இளைய தளபதிக்கு ராப் ஹிப்ஹாப் பாணியில் ஓப்பனிங் சாங் கொடுத்தது இவர்களின் வித்தியாச வெற்றி.

பா.ரஞ்சித் - உமாதேவி :

லேட்டஸ்ட் சென்ஷேசன். பணியாற்றியது இரண்டே படங்களில்தான். ஆனால் பாடல்கள் இன்னும் 20 ஆண்டுகள் தாண்டியும் ஹிட்லிஸ்ட்டில் இருக்கும். 'தாப பூ', 'தாபத நிலை' என வித்தியாச வரிகளுக்கு சொந்தக்காரர். 'மாய நதி இன்று மார்பில் வழியுதே... தூய நரையிலும் காதல் மலருதே' - டிவைன். ஒரு பெண் பாடலாசிரியர் சூப்பர்ஸ்டாருக்கு ஹீரோயிஸ பாடல் எழுதுவது அநேகமாய் இதுவே முதல் முறை. அதுவும் 'வீர துறந்தரா' என முற்றிலும் வேறு மாதிரியான பாடல். இந்த காம்போ அடுத்தடுத்து நிறைய ஹிட்கள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 

-நித்திஷ்