Published:Updated:

நிஜங்கள் நிழலான கதை... தமிழில் அசத்திய பயோ பிக் படங்கள்! #TamilBioPics

Vikatan Correspondent
நிஜங்கள் நிழலான கதை... தமிழில் அசத்திய பயோ பிக் படங்கள்! #TamilBioPics
நிஜங்கள் நிழலான கதை... தமிழில் அசத்திய பயோ பிக் படங்கள்! #TamilBioPics

கற்பனையாக உருவாக்கப்படும் கதைகளை விட, உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு படமாக்குவது மிகப்பெரிய சவால். நமக்குத் தெரிந்த நபரின், தெரியப்படாத பக்கங்களை பயோபிக்காக  உலகளவில்  பல படங்கள் வெளியாகிவருகின்றன.  பயோபிக் படங்களை இயக்கும் போது, கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மையும், அதே சமயம் ஆடியன்ஸூக்கு பிடித்தமாதிரியும் இயக்கவேண்டியது முக்கியம். சுவாரஸ்யமாகவும், திரைமொழிக்கேற்றது போல, தமிழில் உருவான பயோபிக் கதாபாத்திரங்களில் சில... 

நாயகன்: (1987)

தலைவன் பிறப்பதில்லை, சமூகத்தின் தூய மனசாட்சியை உரசிப்பார்க்கும் போது தான், தீப்பொறியாக தலைவன் உருவாகிறான். அப்படி உருவானவர் தான், மும்பை தாராவியையே ஆண்ட வரதராஜ முதலியார். தன் தந்தையை கொன்றவனை கொலை செய்துவிட்டு, தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு ஓடிப்போகும் சிறுவன், எதிர்காலத்தில் மும்பையின் தாதா. இவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு மணிரத்னம் இயக்கிய படம் “நாயகன்”. கமல்ஹாசன், இளையராஜா,  பி.சி.ஸ்ரீராம், தோட்டாதரணி, லெனின் என்று திரையுலக ஜாம்பவான்களின் மாஸ்டர் பீஸ்.  நான்கு பேருக்கு உதவனும்னா எதுவுமே தப்பில்லை என்ற பன்ச்சுடன், தமிழ் திரையுலகின் ட்ரெண்ட் செட்டிங் திரைப்படமாக உருவெடுத்தது.

சீவலப்பேரி: (1994)

நெல்லை மாவட்டம், சீவலப்பேரியில் வாழ்ந்து வந்த பாண்டியனை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சீவலப்பேரி பாண்டியென்றால், மனதில் ஏற்படும் உருவம் நெப்போலியன் தான். பிரதாப் போத்தன் இயக்கத்தில் சீவலப்பேரி பாண்டி, அன்றைய நாளில் தெறி வசூல். பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன. படத்தின் ஹைலைட் நெல்லைத் தமிழும், அங்குள்ள கலாச்சாரத்தையும் அப்படியே பிசகாமல் படத்தில் பிரதிபலிக்கவைத்திருப்பார்கள். ஆவேசம், பாசம், வெகுளித்தனம் கொண்ட பாண்டி பாத்திரமாகவே நெப்போலியன் நடித்திருப்பார். இதன் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகவும், கமல் நடிக்கவிருப்பதாக கடந்தவருடம் செய்திகள் வெளியாகின. 

இருவர்: (1997)

மணிரத்னத்தின் தைரியமான முயற்சி  “இருவர்”. மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, ரேவதி, தபு, கெளதமி என பல முக்கிய நடிகர்கள் நடித்து 1997ல் வெளியானது. தமிழகத்தையே அரசியலிலும், சினிமாவிலும் ஆட்டிப்படைத்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம். ஆனால் அவர்களின் வாழ்க்கை தான் என்று மணிரத்னம் எதிலும் குறிப்பிடவில்லை. இருப்பினும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்ட படம். பல பிரச்னைகளைத் தாண்டி,  வெளியானது. நிச்சயம் தமிழ் சினிமாவின் பொக்கிஷத்தின் ஒன்று இந்த இருவர். மோகன்லால் இறந்துவிடுகிறார், அவரை நினைத்து நண்பன் பிரகாஷ்ராஜ் பேசும் கடைசி வசனங்கள் மெய்சிலிர்க்கவைக்கும். 

கோவில்பட்டி வீரலட்சுமி: (2003)

தலைமறைவாக வாழ்ந்த மனிதர்களைப் பற்றியான வாழ்க்கையையே பெரும்பாலும் தமிழ்சினிமாவில் பயோபிக்காக உருமாறியிருக்கிறது. சீவலப்பேரி பாண்டியைத் தொடந்து, கோவில்பட்டி வீரலட்சுமியையும் படமாக்கினார்கள்.  தீண்டாமை நிறைந்த கிராமத்தில் வளரும் தைரியமான பெண்ணின் கதை. ராஜேஷ்வர் இயக்கத்தில், சிம்ரன் தான் கோவில்பட்டி வீரலட்சுமியாக நடித்தார். பயோபிக் படங்கள், பொதுவாகவே ஹிட் அடிக்க்கும்.  ஆனால் இப்படம் தோல்வியில் முடிந்தது.  முதன்முறையாக சிம்ரன் சொந்தகுரலில் டப்பிங் பேசினார். சிம்ரனின் நடிப்பு,  நல்ல வரவேற்பை பெற்றது.  

குரு: (2007)

பயோபிக் படமென்றாலும்,  சுவாரஸ்யமும், காதலும் கலந்து எடுப்பதில் கில்லாடி மணிரத்னம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூப்பித்துவிட்டார். இவரின் பட லிஸ்டில் பயோபிக் அதிகமாக இருக்கும். அந்த லிஸ்டில் குரு கொஞ்சம் ஸ்பெஷல். சாதாரண மனிதர், வியாபார காந்தமாக மாறிய கதை. அம்பாணியின் வெற்றிக்கதை தான் குரு. இந்தியிலும் தமிழிலும் உருவானது. குருநாத் தேசிகனாக அபிஷேக், இவரின் மனைவியாக ஐஸ்வர்யா நடித்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பாடல்காட்சிகள், கூடவே, மாதவன், வித்யாபாலன் என்று படமே வேறலெவல் ஹிட். 

தி டர்ட்டி பிச்சர்: (2011)

விஜயலட்சுமி சினிமாவிற்கு அறிமுகமான முதல் படம் “ வண்டிச்சக்கரம்”.  சாராயம் விற்கும் பெண்ணாக, சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பு தான், சில்க் ஸ்மிதாவாக திரையுலகம் கொண்டாடியது.  தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்களின் மனதில் ராணியாக வாழ்ந்தவர்.  அழகு, நடிப்பு, கவர்ச்சி, அன்பு கூடவே கொஞ்சம் கோவமும் கொண்டவர் சில்க். தமிழ் சினிமாவால் மறக்கமுடியாத நடிகை. இவரின் மரணமும் ஏற்றுக்கொள்ளமுடியாத வலி. சில்க்கின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவானது தான் இந்தியில் வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிச்சர். ஒவ்வொரு காட்சியிலும் சில்க்கை கண்முன் நிறுத்தியிருப்பார் வித்யாபாலன். 

கட்டப்பொம்மன்: (1959)

“வானம் பொழிகிறது, பூமி விளைகிறது.. உனக்கேன் கொடுக்கவேண்டும் வரி.....” இந்த டயலாக்கை பள்ளிப் பருவத்தில் பேசாமல், கடந்துவந்திருக்கவே முடியாது. நிச்சயம் கட்டபொம்மனின் வரலாறும், வீரதீர தியாகங்களும் நமக்குப் பாடம். ஆற்காடு நவாபினால், அரசானையையே கைப்பற்றும் ஆங்கிலேயர்களின் பிடியில் இந்தியா  இருந்த நேரத்தில் அவர்களை எதிர்த்துபோராடிய பாளையக்காரர் கட்டபொம்மன். இவரின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்தியவர் சிவாஜி. மூச்சிவிடாமல் டயலாக் மழையில் மிரளவைத்திருப்பார். அதற்கு சின்ன சாம்பிள் தான், இந்த க்ளைமேக்ஸ் வீடியோ!  

இன்னும் சில.. 

இதுமட்டுமில்ல பாஸ், கப்பலோட்டிய தமிழன், பாரதியார், தந்தைபெரியார், காமராஜர், ராமானுஜம் மற்றும் வீரப்பனின் கதை வரையிலும் தமிழில் படங்களாக வெளியாகிவிட்டது. சமீபத்தில் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய படமென்றால் தோனியின் அன் டோல்ட் ஸ்டோரி தான். தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளிலும் டப்பாகி வைரல் ஹிட். 

-முத்து பகவத்-