Published:Updated:

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha
எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha

-கண்ணபிரான் இரவிசங்கர்

சிலுக்கு: இந்தப் பேரே.. பல பேருக்கு.. பலப்பல உணர்ச்சிகளைத் தரவல்லது!

*சிலருக்குக் கிளுகிளுப்பு
*சிலருக்கு ஒவ்வாமை
*சிலருக்கு அழகுணர்ச்சி
*சிலருக்கு நடிப்புத் திறமாடல்
*சிலருக்கோ.. இவை அனைத்தும் கலந்த கலவை!

சமூகம், இவள் கதையை "Dirty Picture" என்று பொய்யான பேரிட்டு எடுத்தாலும்,சிலுக்கு 'டர்ட்டி கேர்ள்' அல்ல என்பதை அன்பறிவுள்ள பெண்கள்/ ஆண்கள் இருவருமே கண்டு கொள்வார்கள்!

அக்கால ரசிகர்கள் மட்டுமல்ல, இக்கால ரசிகர்களும் சிலுக்குக்கு உண்டு!அவள் உதிர்ந்து போய்ப் பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பையன்களும், யூட்யூப் படங்களைப் பார்த்தே, பெரும் சிலுக்கு விசிறிகளாக, கண்ணழகில் கட்டுண்டு கிடக்கிறார்கள்!ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான்!ரேவதி, அமலா, நதியா, ஷாலினி முதலிய பெண்களும்.. சிலுக்கின் ஸ்டைல், உடை அழகு, நடன அசைவு பற்றி இன்றும் வியந்து பேசுகிறார்கள்!

35 வயதிலேயே, உதிர்ந்த விட்ட ஒரு பெண் பூ..சூப்பர் ஸ்டார் ரஜினி, காதல் இளவரசன் கமல், நடிகர் திலகம் சிவாஜி என்று.. பலரும் இவள் ஒரேயொரு நடனக் 'கால்ஷீட்'டுக்காகக் காத்துக் கிடந்த தமிழ்ச் சினிமா மாயங்கள்!அப்படி என்ன கண்டு விட்டார்கள், இந்த மாய மலர் பொம்மல் பூவிடம்?

சிலுக்கை, ஐட்டம் டான்சர் என்ற ஒரேயொரு குப்பிக்குள் அடைத்துவிட முடியாது!அப்படி எத்தனையோபேரை தமிழ்ச் சினிமா கண்டுள்ளது; ஆனால் "நீ இல்லா விட்டால் இன்னொருத்தி" என்ற அளவில் தான் அவர்களையெலல்லாம் வைத்தது! Super Starகள் யாரும் காத்துக் கிடப்பதில்லை! இன்றோ, கதாநாயகிகளே அது போல் நடனங்களை ஆடியும் விடுகின்றனர்! அப்பறம் ஏன் இந்தச் சிலுக்கு மாயை?

சிலுக்கு, கிளுகிளு கவர்ச்சிப் பொருள் மட்டுமே அல்ல!

விழி மொழிகள், உடல் மொழிகள், குழை மொழிகள்.. சிலுக்கின் பரிமாணம்!

இன்பம் காட்டும் இன்முகம், பாங்கு காட்டும் சோகமுகம் .. இப்படிப் பன்முக நடிப்பு!

சிலுக்கின் "முழு நடிப்புப் பரிமாணம்" காண, இரண்டே இரண்டு தமிழ்ச் சினிமாக்கள் போதும்!

1.அலைகள் ஓய்வதில்லை
2.அன்று பெய்த மழையில்

வண்டிச் சக்கரத்தில், 'வா மச்சான் வா - சிலுக்கோட கையால வாங்கிக் குடி" போன்ற பாடல்கள், குலுக்கும் சிலுக்கையே காட்டின; 

ஆனால், அதையும் தாண்டிய "நடிப்பைக்" காட்டியது, அலைகள் ஓய்வதில்லை!"எஸ்தர்" என்ற கிறித்துவப் பெண்ணாய், கணவனின் ஆணாதிக்கம் எதிர்த்து, காதல் கலப்புத் திருமணம் செய்து வைக்கும் சிலுக்கு!ரகசியப் போலீசில் "பாவா பாவா" என்று குழையும் மென்குரல் பெண்ணுக்குள்ளா, இத்துணை ஆணாதிக்க எதிர்ப்புக் குரல்? அது, மூன்றாம் பிறை வரைக்கும் கூடத் தொடர்ந்தது! சமூகக் கட்டமைப்புக்களை மீறும் பெண்மையின் துணிச்சலழகு!

அலைபாயுதே படத்தில், ஷாலினி அழகைக் Camera வடித்தது போலவே, சிலுக்கின் அழகையெல்லாம் திரட்டிக் காட்டிய ஒளிப்பதிவுப் படம், அன்று பெய்த மழையில்! 

அசோக்குமார் என்ற ஒளிப்பதிவு இயக்குநருக்கு நன்றி! சிலுக்கு, வில்லியா? நாயகியா? அன்பா? அழகா? என்று ஒவ்வொரு காட்சியும் நகர்த்தும் ஒளிமிகு படம்!

*பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் ஆகட்டும்..


*இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் ஆகட்டும்..
*மோகன்லால் போன்ற பிறமொழி நாயகர்கள் ஆகட்டும்..
அனைவரும், சிலுக்கு எனும் சிற்பத்தைத் தங்கள் பாணியில் செதுக்கியே உள்ளார்கள்!

சொல்லப் போனால், தமிழ்ச் சினிமா தராத நிம்மதியும் தன்மானமும்.. மலையாளச் சினிமா தந்தது சிலுக்குக்கு!அவள் கடித்துப் போட்ட ஆப்பிள்களை ஏலம் எடுப்பதும், ஒரே பாடலில் தோன்றி.. கதாநாயகியை விட அதிகச் சம்பளம் வாங்குவதுமாய், தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அதீதம் காட்ட..

மலையாள உலகமோ, சிலுக்கின் "கவர்ச்சி உள்ளிட்ட நடிப்பைக்" கூராக்கி, அவள் தன்மானம் கெடாமலும் கொண்டாடியது!

சிவாஜி படங்களில் கூட, சிலுக்கின் நிலை சிரிப்பை வரவழைக்கும்:-) . "நடிகர் திலகம்" என்ற நயன் மிகு மதிப்பால், மொத்த படக்குழுவும் எழுந்து நிற்கும் போது, சிலுக்கு மட்டும் எழாமல் அமர்ந்திருக்க..

"திமிர் புடிச்சவ" என்ற சொல்லுக்கிடையே, "நான் எழுந்து நின்னா, குட்டைப் பாவாடை உடையில், சிவாஜி சாருக்குக் கூச்சமா இருக்குமேன்னு தான் எழுந்து நிக்கலை"-ன்னு அப்பாவியாய்ச் சொன்ன சிலுக்கு! சிவாஜியே விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு!:)

இப்படி, தன் கூச்சம் கடந்தவள், பிறர் கூச்சம் உணர்ந்த "மென்மை"! 

அதான் சிலுக்கு! இதே மென்மைச் சிலுக்கு தான், நடிக்க வரவில்லையென்றால், நக்சலைட் ஆகியிருப்பேன் என்றும் சொன்னது!

"சீனு, முள்ளு குத்தினா, ஊசி போடணுமா?" என்று கமலிடம் அப்பாவிக் குரலில் கேட்கும் அதே சிலுக்கு தான்,கமலின் வயதான அப்பா கையில் முத்தம் குடுத்துத் திகைக்கவும் செய்தது! 

"உன்னை விட பெரிய கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்து" என்று கமல் அப்பா கேட்க, கமல் அறிமுகம் செய்தது, சிலுக்கு என்ற பெண்ணையே!

உடலுக்குள் அடைபட்ட உள்ளம்! அவள் உடலே அவள் செய்தி!அவள் உள்ளமோ அன்பர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்!

Unwept, Unhonoured, Unsung என்றோர் ஆங்கிலக் கவிதை!

சிலுக்கின் தனிமையும், வாழ்க்கை முடிவும் அப்படித் தான் ஆகிப் போனது!

அவள் Celluloid இன்பத்தில் பங்கு போட்டுக் கொண்ட திரையுலகம், அவள் துயர இறப்பில் கலந்து கொண்ட சிறுபான்மை மிக மிகச் சிறுமையே!

ஐயன் வள்ளுவன்.. பெண்ணின் "கண்சக்தி" குறித்துப் பேசுவான்! அது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ, சிலுக்கின் கண்களுக்குக் கச்சிதப் பொருத்தம்!

கொடும்புருவம் கோடா மறைப்பின் - நடுங்கஞர்

செய்யல மன் இவள்கண்!

ஏய் புருவங்களே நீர் வாழ்க! இவள் கண்ணுக்குத் திரைபோட்டு என்னைக் காப்பாற்றுங்களேன்?

ஐயன் வழியில், நாமும் முடிப்போம், நகைச்சுவையாக!

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல - ‘ஆண்’றோர்க்கு
ஸ்மிதா சிலுக்கே சிலுக்கு!

விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதாவுக்கு.. நினைவாலே சிலை செய்து, மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், சிலுக்கு!

அடுத்த கட்டுரைக்கு