Published:Updated:

"மந்திரியின் லஞ்சம் கட்சிக்கு நிதி!" - சோவின் அரசியல் பகடிகள்

Vikatan Correspondent
"மந்திரியின் லஞ்சம் கட்சிக்கு நிதி!" -  சோவின் அரசியல் பகடிகள்
"மந்திரியின் லஞ்சம் கட்சிக்கு நிதி!" - சோவின் அரசியல் பகடிகள்

தமிழ் சினிமாவில் துணிச்சலாக சமூகக் கிண்டல் செய்தவர்கள் எம்.ஆர்.ராதா போன்ற வெகு சிலர்தான். திமுகவின் அரசியல் எழுச்சிக்குப் பிறகு அவர்களை படங்களில் தனது வசனங்கள் 'அரசியல் கிண்டல்' பாணி மூலம் துணிச்சலாக சீண்டியவர் சோ.ராமசாமி.  இவரின் நாடகங்களில் வரும் கிண்டலை ரசிக்கவே எதிர்கருத்து கொண்டவர்களும் நிறைய வருவார்கள். அதே போல அவர் நடிக்கும் திரைப்படங்களில் அந்தந்த காலகட்ட அரசியல் பிரதிபலிக்கும். அந்த வசனங்களை வைத்தே அந்த படம் வந்த காலகட்டத்தை அறிந்துகொள்ளலாம். 

1972-ல் வெளியான 'புகுந்த வீடு' படத்தில் மனோரமா வேலை கேட்டு வருவார்.அவரிடம் இன்டர்வியூவில் கேட்கும் கேள்விகள் என்ன என்று முன்கூட்டியே சொல்லிக்கொடுப்பார். அதில் "முதலாளி முதல் கேள்வியாக 'இந்த ஆபிஸுக்கு எத்தனை படி'ன்னு கேட்பார். "மூணு படின்னு சொல்லிடாதே ஒரு படின்னு சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும்" என்று சொல்லிக்கொடுப்பார். அப்போது காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்த திமுக தேர்தல் வாக்குறுதியாக 'ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி' என்று அறிவித்திருந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்தபின் அன்றைய அரிசிப்பஞ்சத்தில் அது இயலாமல் போகவே 'மூன்று படி லட்சியம் - ஒரு படி நிச்சயம்' என்று அறிஞர் அண்ணா தெரிவித்திருந்தார். அதை கிண்டல் செய்யும் வகையில் இந்த வசனத்தை பேசியிருப்பார். 

இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான 'முகமது பின் துக்ளக்' நாடகமாக வெற்றிகரமாக அரங்கேறிக்கொண்டிருந்தது. பின்னர் அதுவே படமாகவும் வெளியானது. வரப்போகும் நெருக்கடி நிலை காலகட்டத்தின் முன்னோட்டமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இத்தகைய 'அரசியல் கிண்டல்' மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டன. 

"என் நாட்டு மக்களுக்கு அறிவேயில்லை - அவர்களின்  மன்னன் எவ்வழியோ  மக்களும் அவ்வழி செல்கிறார்கள் " 

"மொழி வாரியாக மாநிலங்கள் இருக்கும்போது மொழிவாரி மாதங்கள் இருக்கக்கூடாதா? இனி மாதம் ஒரு தேசிய மொழி இருக்கவேண்டும்"

"கலவரத்தை தற்காலிக தீர்வுகளினால் மட்டுமே தடுக்க வேண்டும், நிரந்தரமாய் தடுத்தால் அரசியல்வாதிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடும்" 

"தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகிற பேச்சையெல்லாம் அர்த்தம் கேட்கக்கூடாது." என தொடர்ந்து படம் முழுக்க 'பொலிடிக்கல் சட்டயர்' தீபாவளியே கொண்டாடியிருப்பார் அதன் இயக்குநரான சோ ராமசாமி . 

அந்த படத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் புதைக்கப்பட்ட துக்ளக்கை உயிருடன் எடுத்துவிடுவார். அதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்து செய்தியறிந்து அவரை சந்திக்க வரும் செய்தியாளர்கள் "எப்படி 600 ஆண்டுகள் வரலாற்றையும் விஞ்ஞானத்தையும் நான்கு நாட்களில் கற்றுக்கொண்டீர்கள்" என்று கேட்பார்கள். அதற்கு பதில் சொல்லும் துக்ளக் 

" வெறும் நான்கு நாட்களில் கற்றுக்கொள்ளும் அளவுக்குத்தான் உங்கள் அறிவியல் வளர்ச்சி உள்ளது"  என போகிற போக்கில் கலாய்த்துவிடுவார். இதற்கு பின்னர் சோ நடிக்கும் படங்களின் வசனங்கள் கவனத்துடன் பார்க்கப்பட்டன. அவரும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் செம சிக்ஸர் அடித்துக்கொண்டிருந்தார். 

1990-ல் வெளியான ரஜினியின் 'அதிசயப்பிறவி' படம் சோவின் அரசியல் கிண்டலுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இருந்தது. படம் முழுக்க 'விசித்திர குப்தன்' கேரக்டரில் கிண்டல் அடித்தபடியே இருப்பார். 

சித்திரகுப்தன் விகே.ராமசாமி செய்த தவறால் ரஜினி இறந்துவிடுவார். இதை தெரிந்து சித்திரகுப்தன் கோப்பில் திருத்தி எழுதப்போவார். அதைப் பாய்ந்து தடுக்கும் விசித்திரகுப்தன் சோ "பூலோகத்தில்தான் இப்படியான கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால் இங்குமா? வேண்டுமானால் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கலாம்" என்பார். உடனே ரஜினி "விசாரணை கமிஷன் அமைப்பதே நடந்த தவறை மறைக்கத்தானே" என்பார். 

ஒரு காட்சியில் சோவின் கைகளை பிடித்து ரஜினி அழுத்தி குழுக்கவும் "ஆ..கை..கை..கை போயே விட்டது" என கை சின்னத்தை காட்டி காங்கிரஸ் அந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றதை கிண்டல் செய்திருப்பார். 

அதே போல் 'குரு சிஷ்யன்' படத்தில் வில்லனின் உடன் வரும் கேரக்டர். அதில் தங்கையை பறிகொடுத்து நியாயம் கேட்டு வரும் பாண்டியனிடம் சமரசம் பேசும்போது சோ சொல்லும் வசனம் " லஞ்சமா? அது யாரோ கபோதி பய கண்டுபிடித்த வார்த்தை. மந்திரி லஞ்சம் வாங்கினால் அது கட்சிக்கு நிதி, எம்.எல்.ஏ பணம் வாங்கினால் அது மக்கள் தொண்டு, கல்லூரி பிரின்ஸ்பால் பணம் வாங்கினால் அது டொனேஷன். அது மாதிரி செத்துப்போனவங்க குடும்பத்தினர் பணம் வாங்கினா அது நஷ்டஈடு. சரி உனக்கு எவ்வளவு நஷ்டஈடு வேணும் சொல்லு. இந்த மாதிரி பணக்கார பசங்க கிட்ட நல்லா கறந்துடனும்" என்று ஆசைகாட்டும் டயலாக்கில் கூட அரசியலை சேர்த்துப் பேசுவார். 

நடப்பு அரசியலை திரைப்படங்களில் கிண்டல் செய்யும் யுக்தியை தொடங்கி வைத்தவர் சோ. அதை எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களும் திறம்பட பின்பற்றிக்கொண்டார்கள். அதேபோல சோ.ராமசாமி இயக்கிய கடைசிப்படமான 'யாருக்கும் வெட்கமில்லை' என்கிற படத்தின் கதாநாயகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

-வரவனை செந்தில்