Published:Updated:

5 வருடங்கள்.. 10 படங்கள்... செல்லமகன் சிவகார்த்திகேயன்! #5YearsOfSivaKarthikeyan

Vikatan Correspondent
5 வருடங்கள்.. 10 படங்கள்... செல்லமகன் சிவகார்த்திகேயன்! #5YearsOfSivaKarthikeyan
5 வருடங்கள்.. 10 படங்கள்... செல்லமகன் சிவகார்த்திகேயன்! #5YearsOfSivaKarthikeyan

சிவகார்த்திகேயன்..`அட நம்ம ஊரு பையன்` என்று சிவகங்கை மாவட்ட மக்கள் சொல்ல ஆரம்பித்து, திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த சில மாதங்களிலேயே ‘ஐ... இது நம்ம வீட்டுப் பிள்ளை` என்று தமிழகமே கொண்டாடி இன்றைக்கு உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டிருக்கிற ஃப்ரெண்ட்லி பாய்!   

``வாய் உள்ள பிள்ளை பொழச்சிக்கும்`` என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டு கேட்டால், அந்த லிஸ்ட்டில் முதல் வரிசையில் சிவா கண்டிப்பாக இருப்பார். ஹ்யூமர் சென்ஸ், ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் என்று ஒரு துறுதுறு இளைஞனுக்குரிய அத்தனை குணங்களையும் தனக்குள்ளே வைத்திருந்த  சிவா, முதன்முதலில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ``டைட்டில் வின்னர்`` ஆனார்.  அதன்பிறகு, ``அது இது எது`` நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் ஆனார். அதுவே, தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் இவர் முகத்தை கொண்டுபோய் சேர்த்தது. இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர். இன்றைக்கும் இணையத்தில் சிவகார்த்திகேயன் தொகுத்த அது இது எது நிகழ்ச்சிகளைத் தேடித்தேடி பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இவரின் ஸ்டாண்ட் அப் காமெடி, டைமிங்கில் கவுண்டர் கொடுப்பது, அவ்வப்போது ரோபோ சங்கருடன் இணைந்து காமெடி பண்ணுவது ஆகிய அட்ராசிட்டிகள் மூலமாக சின்னக் குழந்தைகள் மத்தியில் சிவா சினிமாவிற்கு வரும் முன்னரே ஹீரோவாகிவிட்டார் என்பது நிதர்சனம்.

’அது இது எது’ நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் போதே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஒப்பந்தமானார். அதுதான் `மெரினா` கடந்த 2012 பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியானது. நேற்றோடு ஐந்து வருடங்கள். ஹீரோவாக முதல் படத்தில் நடித்த சிவா, அதே வருடத்தில் தனுஷுடன் இணைந்து `3` படத்தில் துணை நடிகராக காமெடி வசனத்தின் மூலமும் தனது ட்ரேட்மார்க்கான கலாய்த்தலில் ஜொலித்தார். அந்தப் படத்தில் குமரனாக சிறிது நேரம் மட்டுமே தோன்றினாலும் இவரது காட்சிகள் என்றும் இனிக்கக்கூடியவை.

அதே வருடத்தின் இன்னொரு படம் `மனம் கொத்திப் பறவை`. இப்படத்தில் கிராமத்து இளைஞனாக வலம் வந்த இவரின் மீது வெகுஜனங்களின் பார்வை விழ ஆரம்பித்தது. 2013ல் இவரது க்ராஃப் கொஞ்சம் அடுத்த படிக்குச் சென்றது. விமலுடன் சேர்ந்து ``கேடி பில்லா கில்லாடி ரங்கா`` படத்தில் வரும் பட்டை முருகனை யாரும் மறக்கமாட்டார்கள். பட்டைக்கு ஒரு ஹிஸ்டரி சொல்லி அசத்தினார். அப்பாவிடம் திட்டுவாங்கி, நண்பர்களுடன் வெட்டியாய் பொழுதுபோக்கும் நடுத்தர வர்க்க இளைஞனாக வந்து இறுதியில் அப்பாவை இழந்து தன் பொறுப்பை உணரும்போது இவரது சென்டிமெண்ட் காட்சிகளும், நா.முத்துக்குமாரின் அப்பா பாடல் வரிகளும் மாணவர்கள் மத்தியில் பாப்புலர் ஆனது.

அதே வருடம் மே மாதம் வெளிவந்தது எதிர்நீச்சல். அதுவரை அஞ்சாவது வரிசையில் இறங்கி சொற்ப ரன்களே அடித்துக் கொண்டிருந்த பேட்ஸ்மேன், ஓபனிங் இறங்கி செஞ்சுரி அடித்து நாட் அவுட்டாக வந்ததுபோல சிவாவுக்கு இந்தப் படம். விரசம் கொஞ்சமும் இல்லாத டைமிங் சென்ஸ் காமெடியில் கலக்கியதும் இல்லாமல், தான் ஒரு ஹீரோ மெட்டீரியல்தான் என்று தெள்ளத் தெளிவாகப் புரியவைத்தார்.  இறுதியில் இவர் ஓடிய மராத்தான் ஓட்டம் இளைஞர்களுக்கு நல்ல எழுச்சி என்றே சொல்லலாம்.

அதே வருடத்தின், செப்டம்பரில் வெளியானது VVS. வருத்தப்படாத வாலிபர் சங்கம். தியேட்டர் முதலாளிகள் இதன் ஓபனிங்கைப் பார்த்து வியந்தது கண்கூடாகத் தெரிந்தது. ‘போன படத்தோட ஹிட். அவ்வளவுதான். படம் சாதாரணமாகத்தான் இருக்கும்’ என்ற சிலருக்கு அதன் ஹிட் பதில் சொல்லியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலமாக, எல்லா சென்டரிலும் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.  இது இவரது இன்னொரு சினிமா அத்தியாயமாய் அமைந்தது. சிவனாண்டியை சீண்டி விளையாடுவதும், சூரியுடன் இவர் செய்த அட்ராசிட்டியும் வேற லெவல். `மாப்பிள்ளை ரெடியாகி நாலு மாசம் ஆச்சு` என்று லதாபாண்டியிடம் செய்த ரொமான்ஸ் கிராமத்து இளைஞர்கள் ப்ரப்போஸ் செய்ய புது டிப்ஸ். திண்டுக்கல் ரீட்டாவுடன் நடனம், சூரியுடன் டயலாக் டெலிவரி, இவரும் ஆண்டனி தாசனும் சேர்ந்து பாடிய பாடல் ஆகியவற்றிற்கு கிடைத்த லைக்ஸ் ஒரு கோடிப்பு...ஒரு கோடி..

2014 ஏப்ரலில் வெளியானது மான் கராத்தே.  அதற்கு முன் ட்ரெய்லர் வெளியானதும் கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். காரணம் சிவாவின் நடனம். வேற லெவலில் இருந்தது இந்தப் படத்தில் இவரது நடனம். ஹீரோயின் ஹன்சிகாவுடனான ரொமாண்டிக் காட்சிகளில் ஒரு தேர்ந்த நடிப்பு இருந்தது. ராயபுரம் பீட்டர், பாக்ஸர் பீட்டராக மாறியதை நம்ப வைக்கிற உடல்மொழியை படம்முழுவதும் வெளிப்படுத்தியிருந்தார்.  இவரது வசனம் ஒருவரைக்கூட கைத்தட்டாமால் வைக்கவில்லை. அந்த மான் கராத்தே ஸ்டெப், இவரது ட்ரேட் மார்க் ஸ்டில் ஆனது.  

மூன்று முகம் ரஜினி, வேட்டையாடு விளையாடு கமல், சாமி விக்ரம், மங்காத்தா அஜித், சிங்கம் சூர்யா என பட்டியல் நீண்டு கொண்டே போக, `இதோ நானும் வரேன்` என்று காக்கிச்சட்டை அணிந்தார் நம்ம சிவா.. சமூக பொறுப்புள்ள கான்ஸ்டபிளாய் இவரது நடிப்பு, படத்திலும் நிஜத்திலும் இவருக்கு ப்ரமோஷன் கொடுத்தது.  

2016 ல் பல தடைகளுக்கு பிறகு, களமிறங்கினார் ரஜினி முருகன். இதில் மாமனாரிடம் ``முருகன்கறது உன் பேரு ரஜினிங்கறது நீ படிச்சு வாங்குன பட்டமா னு கேக்குறாங்க பதில் சொல்லுங்க...``என்று தகராறு செய்து அதகளப்படுத்தினார். சமுத்திக்கனிக்கு எதிராக,  ராஜ்கிரணிற்கு பேரனாக, சூரிக்கு நண்பனாக இவரது ரியாக்சன், டயலாக், முகபாவனைகள் என்று எல்லாரையும் கவர்ந்து,  ‘கம்ப்ளீட் எண்டர்டெய்னர்’ ஆனார்.  

இறுதியாக நம்மை பிரமிக்க வைத்தாள் ரெஜினா மோத்வானி.. ரெமோ வாக இவரது நளினம், பேச்சு, முகபாவம் எல்லாம் அடி தூள்ள்ள்ள்...`ஒய் செல்ஃபி எப்போ ஓகே சொல்லப்போற` என்ற வரி இன்று பல வயசு பசங்களின் காலர் ட்யூன்..ஒரு நிகழ்ச்சியில் விஜய் ``இவர் குட்டீஸ்க்கு எல்லாம் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டார்`` என்றார். விஜய் சொன்னது உண்மைதான். குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கிறார்களோ இல்லையோ சிவகார்த்திகேயனின் படத்தை கண்டிப்பாக பார்த்துவிடுகிறார்கள்.

இவர் அடைந்த உயரத்திற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். ஐந்து வருடங்களுக்கு முன் ரஜினியை சந்திக்க, ஷுட்டிங்கிற்கு இடையே பர்மிஷன் எல்லாம் வாங்கிக் கொண்டு அரக்கப் பரக்கச் சென்றதை பல பேட்டிகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த அளவு சூப்பர் ஸ்டாரின் ரசிகர் இவர். சென்ற மாதம் (ஜனவரி) 13ம்தேதி. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மேடை. மேடையில்  விஜய் ரஜினி இருவரும் நின்று கொண்டிருக்க, பவ்யமாகவே நின்று கொண்டிருந்தார் சிவா. தொகுப்பாளர் ஆர்.ஜே.பாலாஜி ‘எங்க ரஜினி ஸ்டைல்ல பேசுங்க பார்ப்போம்’ என்று சொல்ல, நொடியில் தயாராகி தூள் கிளப்பினார். பேசும்போது விஜயும், ரஜினியும் வியந்து போய் சிவாவைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஐந்தே வருடங்களில், ஆல் ஏரியா ஹீரோ ஆகி, தனது ஆதர்ச நாயகனுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ளுமளவு இவர் அடைந்த உயரம், எளிமையும் உழைப்பும் இவருக்குத் தந்த பரிசு.  

இன்று  எல்லா ஃபார்மெட்டிலும் செஞ்சுரி அடித்து வருகிறார். ஐந்து வருடங்களில் 10 வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.  நேற்றைக்கு அவர் தன் முகநூலிலும் ட்விட்டர் பக்கத்திலும் ``இந்த ஐந்து வருட பயணத்திற்கு உறுதுணையாக இருந்த மக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஊடகங்கள் ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.. என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் முயற்சியால் இன்னும் மக்களை மகிழ்விப்பதற்காக படங்கள் பண்ணுவேன்.. தேங்க் யூ அன்ட் லவ் யூ ஆல்!!!`` என்று பதிவு செய்திருந்தார்.

உங்கள் எண்ணம் போல் எல்லாம் நடக்கும் ப்ரோ.. இன்னும் பல வெற்றிக்கனிகளை சுவைத்து வெற்றியின் உச்சத்தை அடைய வாழ்த்துகள்.. ஆல் தி பெஸ்ட் சிவகார்த்திகேயன்.

 உ.சுதர்சன் காந்தி