Published:Updated:

தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்.. ஞாபகம் வருகிறதா? #4YearsOfVishwaroopam

பரிசல் கிருஷ்ணா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்.. ஞாபகம் வருகிறதா? #4YearsOfVishwaroopam
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்.. ஞாபகம் வருகிறதா? #4YearsOfVishwaroopam


“மிஸ்டர் ஃபாரூக்... என் பேரு தோஃபிக்” என்று சொல்லிவிட்டு மென்மையாகக் கண்களைச் சிமிட்டுகிறார் கமல்ஹாசன். ”இவனுககிட்ட எங்களை ஒப்படைச்சுட்டல்ல?” என்று பூஜாகுமார், தன் பாஸ் தீபக்கிடம் கொதிக்கிறார். தூரத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் விழுகிறது. ஓங்கி அறைகிறான் ஃபாரூக். “என்னை அடிக்கிறான் பார்த்துண்டிருக்கியே.. என்ன ஆம்பள நீ?” என்று பூஜா கேட்க, கோவப்படுகிறான் பூஜாவின் பாஸ். “ஓ.. ஆம்பள வேணுமா.. இதோ முட்டி போட்டுட்டிருக்கு. அதுகிட்டச் சொல்லு” என்று கமலைக் காட்டுகிறான் பாஸ். “ஐயோ..” என்று பதறும் கமல், “நான் எல்லா உண்மையும் சொல்றேன்” என்று விட்டு கொஞ்சலாக “ஆனா நீங்க நம்பணும்” என்கிறார். இப்படிப் போகிறது அந்தக் காட்சி. பின்னணி இசை ஏதும் இல்லை. அமைதி. “உமர் பாய் சொல்லாம யாரும் நகர முடியாது” என்றபடி உமர் பாய்க்கு அலைபேசுகிறான் ஃபாரூக்.

கீச்சுக்குரலில் “ஃபோட்டோ.. இமெய்ல்” என்று கேட்கிறார் உமர். (ராகுல் போஸ்). இங்கே ஃபோட்டோ எடுக்க, ஃபாருக் முற்பட ஃபோனைத் தட்டிவிடுகிறார் கமல். கோவப்படும் ஃபாருக், கன்னத்தில் அடித்து, உதைக்கிறான். அதுவரை தான் முஸ்லிம் என்றிருந்த கமல், இப்போது “கிருஷ்ணா....” என்று கத்துகிறார். “முஸ்லிம்ன?” என்று கோவப்பட்டும் ஃபாருக் மீண்டும் உதைக்கிறான். அடிக்கிறான். மூக்கில் ரத்தம் வழிகிறது கமலுக்கு. அப்படியே முன்புறம் சாய்கிறார். நிமிர்ந்து ஃபோட்டோ எடுக்க முயல, ‘போதும் போதும்’ என்று தலையாட்டிக் கொண்டே இருக்கிறார் கமல். ஃபோட்டோ ஷேக் ஆக, முகத்தைப் பிடித்து ஒரு கோணலாக கமலின் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

இங்கே, ஓமருக்கு கமலின் ஃபோட்டோ மெய்லில் வருகிறது. ‘எவனோ’ என்று சலிப்போடு நாற்காலியை விட்டு எழ முற்படுகிற உமர் கண்களில் மிரட்சி. கைகளால் அந்தப் புகைப்படத்தைக் கொஞ்சம் மறைத்துப், பார்க்கிறார். ஃபாருக்குக்கு ஃபோன் வருகிறது. “அவனை முட்டில ஷூட் பண்ணு. அவன்கிட்ட பேச்சுக்குடுக்காத. ஜஸ்ட் ஷூட். ரத்தம் ரொம்ப போய்டாம...” - உத்தரவுக்கு அடுத்து பூஜாவின் பாஸ் தீபக் கொல்லப்படுகிறான். கமல் அழுது, “நான் எல்லா உண்மையும் சொல்லிடறேன். முசல்மான்கிட்ட முசல்மான் கேட்கறேன். என்னை எதாவது பண்றதுக்கு முன்னாடி, என்னை ப்ரே பண்ண விடுங்க” என்று கேட்கிறார். அனுமதிக்கிறான் ஃபாருக். இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் அந்த குரான் வரிகளை ஓதுகிறார் கமல்: ’‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்”   

படித்து முடிக்கும்போது, காதுக்குள் ஷங்கர் எஷான் லாய் போட்ட அந்தப் பின்னணி இசை கேட்கிறதா உங்களுக்கு? கமல் முன்னால் குனிந்து, பின்னால் நிற்பவனை உதைத்து முன்னேறி ஒவ்வொருவரையாய் அடித்து கட்டையால் தாக்கி, வாளைக் கைப்பற்றி, துப்பாக்கி நீட்டுகிற ஃபாருக்கின் மணிக்கட்டை வெட்டித் திரும்பி, அவன் வயிற்றில் வாளைச் செருகும் காட்சி மூளைக்குள் விரிகிறதா? 

தடைகளை வென்றே சரித்திரம் படைத்த அந்தப் படம் ஞாபகம் வருகிறதா? யெஸ். வெறும் 20 விநாடி விஸ்வரூபம் அந்தக் காட்சி. இன்றைக்கும்... மாஸ் சீன்களுக்கு மட்டுமல்ல, ஒரு கதாபாத்திரத்தின் படைப்பிற்கும் இந்த ஒரு காட்சியை வைத்தே ஆய்வு நடத்தலாம். கடைசி வரை, தன் முகத்தை உமர் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்று ஃபாருக்கை கோவப்படுத்தி, அடிவாங்கி தன் முகத்தைச் சிதைத்துக் கொண்டு என்று, ஒரு ரா ஏஜண்ட் கதாபாத்திரத்தை கமலை விட வேறு யார் சிறப்பாகப் படைக்க முடியும்?

உலக தீவிரவாதத்தை தைரியமாக, நேர்மையாக படமாக்கியவிதத்தில் விஸ்வருபம் படத்தை கொண்டாடலாம். அமெரிக்காவில் ஊடுருவும் தீவிரவாதத்தை அழிக்க தன்னை மறைத்துக் கொண்டு, ஒரு கதக் கலைஞராக இருக்கும் கமல்தான், விஸ்வந்த் என்கிற விஸாம் அகமது காஷ்மீரி. ரா ஏஜண்ட். ஒன்லைன் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு முழு திரைப்படமாக அதை உருமாற்றுவதற்கு, தெளிவான திரைக்கதை வேண்டும். அதற்கு, எடுத்துக் கொண்ட கதைக்குப் பின்னால் உள்ள விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதில் கமல் அசகாய சூரன். தீவிரவாதத்தின் எல்லா முகங்களையும் அலசியிருப்பார் இந்தப் படத்தில்.

அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தான் என்று படம் பல்வேறு இடங்களில் படம் பயணிக்கிறது. படம் பார்க்கும்போது நாமும் அங்கே இருப்பதாய் உணரவைக்கிறார் இயக்குநர் கமல்ஹாசன்! ஜிஹாதி கேம்ப் எப்படி இருக்கும் என்பதெல்லாம் நாம் அறிந்திராதது. படத்தின் காட்சிகள் அவற்றையும் காட்டுகிறது. அந்தத் துணிச்சல்தான் கமல்! ஆப்கானிஸ்தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில்  உருமாறி, போராளியாகவும் தெரிவார். உளவுப் பிரிவில் பணிபுரிவதால், கொஞ்சம் தயக்கமும் காட்டுகிற விதத்தில் உடல்மொழியில் வித்தியாசமும் காண்பித்திருப்பார்.  

யாரென்று தெரிகிறதா பாடலைவிட, ‘உனைக் காணாது நானிங்கு நானில்லையே’தான் கமல் புகழ் பாடவேண்டும் என்பேன் நான். ஆம். பாடல் ஷங்கர் மஹாதேவன் குரல் என்றாலும், பாடலின் ஆரம்பத்தில் ‘அதிநவநீதா.. அபிநயராஜா கோகுலபாலா கோடிப்ரகாசா’ என்று தூள் கிளப்பியது கமல்தான். மதுரையில் இந்தப் படப் பாடல்கள் வெளியீட்டில் சரசரவென மேடையிலேயே பாடி அசத்தினார். 

இந்தப் படம் வெளியானதே ஒரு தனிக்கட்டுரைக்கான விஷயம். ஆரம்பத்தில் ‘விஸ்வரூபம்’னு பேர் வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு. எதையும் முந்திச் செய்யும் கமல், இதை DTHல் ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுக்க அதற்கு எதிர்ப்பு. ’சரி ஓகேப்பா.. தியேட்டர்லயே பண்றேன்’ என்றார். முதலில் ஜனவரி 25ல் ரிலீஸ் என்று இருக்க, “வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” என்று கலெக்டர்கள் தியேட்டர்களுக்கு உத்தரவு  போட்டனர். முஸ்லீம் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு. சென்சாரே ஓகே சொன்னபிறகும் வேறு சிலர் பார்த்து சில காட்சிகளை வெட்டி, சில வசனங்களை ம்யூட் செய்யச் சொன்னார்கள். “நாங்க வெளியூர் போயாவது பார்ப்போம் தலைவா” என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் கைகொடுத்தார்கள் இந்தப் படத்திற்கு. பெங்களூர், கேரளா என்று ரசிகர்கள் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று பார்த்தார்கள். 

படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்க, ஒரு ப்ரஸ்மீட்டில் வேதனைகளை வெளிப்படுத்தினார் கமல். அவ்வளவுதான்.. ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் கமலுக்குக் குரல் கொடுத்தது. ரசிகர்கள் காசோலைகளும், பணமும் அனுப்பி ‘நாங்க இருக்கோம்’ என்றனர். அனைத்தும் முடிந்து ரிலீஸ் ஆகும் முன், நெகிழ்ந்து போய் பேட்டி கொடுத்தார் கமல். 

“தமிழக இந்திய மக்களுக்கும், என்னைத் தேடிவந்து ஆறுதல் சொன்ன தமிழ்த் திரையுலக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், எனக்குத் தெரியாமலே எனக்காகப் போராடிய அகில இந்தியத் திரையுலகிற்கும் என் மனமார்ந்த நன்றி. என் உரிமையைத் தமதெனக் கருதி, பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும், ஓர் இந்தியனாக ஆழமனத்தில் இருந்து நன்றி.

எதற்கும் கலங்காது புன்னகையுடன் இன்னல்களை ஏற்ற நான், ஒரு நிகழ்வினால் காதலாகிக் கண்ணீர் மல்கி நிற்கின்றேன். என் தமிழக மக்கள், காசோலைகளையும், பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து, `கலங்காதே.. யாம் இருக்க பயமேன்’ என்ற அர்த்தத்தில் கடிதங்கள் இணைத்து அனுப்பி உள்ளனர். நெஞ்சு விம்மி, கண்ணீர், காட்சியை மறைக்க, என் மனது, ‘இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்?’ என்று கேவிக்கேவிப் பாடுகிறது. என் கலையையும் அன்பையும் மக்கள் நலன் பயக்கும் சிறு சிறு தொண்டுகளையும் அன்றி வேறொன்றும் செய்வதறியேன். காசோலைகளையும், பணத்தையும் அன்புடன் உங்களுக்குத் திருப்பி அனுப்புகின்றேன்.

ஆனால் உங்கள் விலாசங்கள் என் கையில். நாளை மதமும் அரசியலும் என்னை வறியவனாக்கினாலும் உண்பதற்கும், ஒதுங்குவதற்கும் அரிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளன என்ற தைரியத்தில் இதைச் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே. பொறுமை காத்த என் ரசிக நற்பணியாளர்களுக்கு, பெரு வணக்கம்! நற்பணி மன்றம் என்ற பெயர்க்காரணத்தை செயலாக்கிக் காட்டி, ரௌத்ரம் பழகாமல் அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம்பெறும். வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை என்பதை ஊருக்கு எடுத்துக்காட்டிய என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, யாம் தயாரித்த விஸ்வரூபத்தை அவர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்”  என்றார். எல்லா தடைகளுக்குப் பிறகு, ஒரு வழியாக ஃபிப்ரவரி 7, 2013 அன்று ரிலீஸானது.  

படத்தில், தன்னை மறைத்து அமைதியானவராகவே காட்சி தந்து, தேவைப்படுகிறபோது தன் பலத்தை வெளிப்படுத்தியதைப் போலவே, இன்றைக்கு நாட்டில் நிகழும் பலவற்றிற்கு தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கமல். “நெருப்புக்கு பிறந்தான்.. நித்தம் நித்தம் மலர்ந்தான்.. வேளை வந்து சேரும்போது... வெளிப்படும் சுயரூபம் / எந்த ரூபம் எடுப்பான், எவருக்கு தெரியும்? சொந்த ரூபம் மாற்றி மாற்றி.. எடுப்பான் விஸ்வருபம்” என்று வைரமுத்து எழுதியதுபோலவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியல், சமூக நிகழ்வுகளில் அவர் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் அவரது கருத்துகள், கவிதைகள் விவாதிக்கப்படுகிறது. அவற்றிலிருந்து ஒன்று புரிகிறது.

‘விஸ்வரூம் II’ எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் கமல்ஹாசனின் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டது.   

-பரிசல் கிருஷ்ணா