Published:Updated:

கலைஞனுக்கெலாம் கலைஞன்... இளைஞனுக்கெல்லாம் இளைஞன்... நம்ம டி.ராஜேந்தர்!

கலைஞனுக்கெலாம் கலைஞன்... இளைஞனுக்கெல்லாம் இளைஞன்... நம்ம டி.ராஜேந்தர்!
கலைஞனுக்கெலாம் கலைஞன்... இளைஞனுக்கெல்லாம் இளைஞன்... நம்ம டி.ராஜேந்தர்!

கலைஞனுக்கெலாம் கலைஞன்... இளைஞனுக்கெல்லாம் இளைஞன்... நம்ம டி.ராஜேந்தர்!

டி.ராஜேந்தர் என்கிற பெயரைக் கேட்டதும் சட்டென உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? தாடி, ரைமிங் டயலாக், அவரைப் பற்றிய மீம்ஸ், கிண்டலான வீடியோ, வாடா என் மச்சி, வாயிலேயே பீட்பாக்ஸ் ஸ்டைலில் மியூசிக் போடுவது, புலி ஆடியோ லான்ச். இதில் நிறைய பேருக்கு மீம்ஸும், ட்ரோல்ஸும்தான் அதிகம் நினைவுக்கு வந்திருக்கும். எழுதும் எனக்கே கூட அதுதான் வந்தது. இதை எல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நபர் அவர் என்பதுதான் நிஜம். சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் நடிப்பு, இசை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகலத்திலும், அதில் உச்சம் தொட்டவர்களுக்கு, வந்த உடனேயே டஃப் கொடுத்தவர் டி.ஆர். அந்த அட்டகாசமான டி.ஆர், அட்ராக்ட் பண்ற டி.ஆர், ஆச்சர்யப்படுத்தும் டி.ஆர். அவரைப் பற்றிய கேலி, கிண்டல் எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு சினிமாவில் அவரின் உழைப்பைப் பார்த்தால், அது உங்களை இன்ஸ்பையர் செய்யும். டி.ஆரின் சினிமா பரிமாணங்களில் இருந்தே அதைப் பற்றிப் பார்க்கலாம்.

கதாசிரியர்:

டி.ராஜேந்தருக்கு முதல் படம் 'ஒரு தலை ராகம்'. படத்தை ஈ.எம்.இப்ரஹிம் இயக்க, கதாசிரியர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மூன்றையும் ராஜேந்தர் செய்தார். 80களில் ரஜினி, கமல் என இரு பெரும் நட்சத்திரங்கள் மாறிமாறி ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூடவே இன்னும் சின்னச் சின்ன நடிகர்களுக்கும் ஒரு கூட்டம் இருந்தது. இந்த சூழலில் புதுமுகம் ராஜா நடித்த 'ஒரு தலை ராகம்' வெளியானது. ஆரம்பத்தில் சரியாக வரவேற்பைப் பெறாத படம் கவனம் பெற்ற பின் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி ஹிட்டானது. காரணம் அதுவரை வந்த படங்களில் இல்லாத ஒன்றை இந்தப் படத்தின் கதையில் வைத்திருந்தார் டி.ஆர். கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டினாலும், படத்திலிருந்த எமோஷன்ஸ் ரசிகர்களைக் கவர்ந்தது.

இயக்குநர்: 

கதாசிரியரிலிருந்து இயக்குநராக டி.ஆர் வந்த பொழுது, இங்கே இருந்த இயக்குநர்கள் எடுக்காத கதைகளே இல்லை என்கிற நிலை. காரணம் ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன், பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா எனப் பல இயக்குநர்கள் வெவேறு களங்களில் கலக்கிக் கொண்டிருந்த காலம் அது. புதிதாக யார் வந்தாலும் இதிலிருந்து விலகி என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதே நேரத்தில்தான் சரியாக பாக்யராஜ் 'சுவரில்லா சித்திரங்கள்' முடித்து இரண்டாவது படமாக 'ஒரு கை ஓசை' இயக்கிக் கொண்டிருந்தார். பாக்யராஜும் டி.ஆரின் இன்னொரு வெர்ஷன்தான். இத்தனைப் போட்டிகளையும் மீறி தன் ட்ரேட் மார்கை நிறுவினார் டி.ஆர். ஒவ்வொரு படத்திலும் ஒரே பேர்ட்டனாக இருந்தாலும் குடும்பங்களைத் திருப்தி செய்யும் சென்டிமெண்ட், இயக்குநராக டி.ஆரை ஹிட்டாக்கியது. கூடவே பாடல்களைப் படமாக்க அவர் போடும் செட்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.

வசனகர்த்தா:

இங்கும் டி.ஆருக்கு சென்டிமென்ட்தான் கை கொடுத்தது. பல ரைமிங் வசனங்களையும் கடந்து அதுதான் டி.ஆரை பலரிடமும் கொண்டு சேர்த்தது. காதலோ, தங்கை சென்டிமென்டோ, சண்டைக்கு முன்னாடி பேசும் வசனமோ எதுவாக இருந்தாலும் டி.ஆரின் அந்த ரைமிங் டச்சும் வேற லெவலில் இருக்கும். "மரம் வெயில்ல காஞ்சாதான், கீழ இருக்கவங்களுக்கு நிழல் கிடைக்கும். குடை மழைல நனைஞ்சாதான் அதைப் பிடிச்சிட்டுப் போற ஆள் நனையாம போக முடியும். அதைப் போல உனக்காக நான் கஷ்டப்படறதில் எனக்கு ஒரு சந்தோஷம்" என அவர் திரையில் பேச...  அன்றைக்கு இதைப் பார்த்த எல்லோரையும் கலங்க வைத்திருப்பார் டி.ஆர். அவரின் படங்களை தியேட்டரில் பார்ப்பது போல, வசனக் கேசட்டாக வாங்கி ரீப்பீட் மோடில் கேட்டு ரசித்து, உருகும் ரசிகர்களும் ஏராளம். அது யூ-ட்யூப் வரை நீண்டிருப்பது தான் டி.ஆரின் பவர்.

பாடலாசிரியர் - பாடகர் - இசையமைப்பாளர்:

முன்பு சொன்ன அதே தான். அதற்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்கள் ரசிகர்களை ஒரு ட்யூனிங்கில் வைத்து பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் எதிர்பார்க்காதது டி.ஆரின் இசையமைப்பாளர் என்ட்ரி, அதுவும் முதல் படத்திலேயே பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்திருந்தது சின்ன சலசலப்பை உண்டாக்கியது. டி.ஆரின் டைம் ஸ்பேன், 80ல் ஆரம்பித்து 90களுக்கு முன் முடிந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த பத்து வருட இடைவெளியில் படங்களை இயக்கிக் கொண்டு, சில படங்களுக்கு பாடல் எழுதி இசையமைப்பதையும் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பாட்டும் பட்டி தொட்டியின் ஒவ்வொரு ரேடியோ பெட்டியிலும் பலமுறை ஒலித்தது. அதிலும், ஒரு பொன்மானை நான் காண... பாடல் எல்லாம் ரசனையின் உச்சம். டி.ஆர் பாடும் பாடல்கள் பாடுவதற்கும் சுலபம் என்பதால்... "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி..." என சோகத்தை பிழிந்து ரசம் வைப்பார்கள் ரசிகர்கள்.

நடிகர்:

முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் தாடி, பொசு பொசுவென சிலுப்பிக் கொள்ளும் முடி என ஹீரோவுக்கென எந்தப் பெரிய அடையாளமும் இல்லாமல் வந்து ஹீரோவாகவும் ஜெயித்ததில் இருக்கிறது அவரின் வெற்றி. ஒரு படம், இரண்டு படம் இல்லை கடைசியாக நடித்த கவண் வரை அதே தோற்றம்தான். தன் படத்தின் தலைப்பு ஒன்பது எழுத்தில் இருக்க வேண்டும் என்பது போல, தன் நடிப்புக்கும் சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தார் டி.ஆர். பெண்களைத் தொட்டு நடிக்கக் கூடாது என்பது அதில் முக்கியமானது. அது பலருக்கும் பிடித்திருந்தது. அப்போது இருந்த ஹீரோக்கள் படங்களுக்கு செம டஃப் கொடுத்து நடித்தார் டி.ஆர். சில ஹீரோக்கள் டி.ஆர் படம் வருகிறதா எனப் பார்த்து வெளியிட்ட விஷயங்கள் கூட நடந்திருக்கிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, 'அட பொண்ணான மனசே என பாடினால், அதே போல் தாடி வளர்த்து தாளம் தட்டுவதும், சூலக் கருப்பே அடிடா, இத சொல்லிக்கிட்டே புடிடா என டி.ஆர் அடித்தால், அதேபோல ஸ்டெப் போட்டு சண்டை பிடிப்பதுமாய் ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது. 

சினிமாவில் முடிந்தவரை எல்லா சாத்தியங்களையும் செய்து பார்ப்போம் என முயன்றவர் ஒளிப்பதிவு, தயாரிப்பு, திரைப்பட விநியோகம் ஆகியவைகளையும் ஒரு கைபார்த்தார். வீராசாமி எடுத்தவர் தானே என்று டீல் செய்தாலும்,  மீம்ஸ் போட்டாலும் தன் வெற்றியாலும், உழைப்பாலும் "இந்த டி.ஆர் வேற லெவல்" என்பதை முன்பே நிரூபித்தவர் என்பது மட்டும் உண்மை.

‘எங்க தல எங்க தல டிஆரு’ன்னு இப்படி உருகி உருகித் தலைவனுக்காக ஒரு கட்டுரை எழுதிட்டு, டி.ஆருக்கு ஃபோன் பண்ணி “வாழ்த்துகள் தலைவா.. இன்னைக்கு உங்க பர்த்டே ல்ல?” -ன்னோம். 

“நான்தான் டிஆரு.. எனக்கு பர்த்டேன்னு சொன்னது யாரு?”ன்றாரு. அக்டோபர் 3தான் அவரோட பிறந்தநாளாம்! 

கில்லி விஜய் மாதிரி, “பர்த்டே இல்ல.. அதத்தானே சொன்னோம். பர்த்டே இல்லைன்னா வாழ்த்தக்கூடாதா?’ன்னு உருகிப் பேசிட்டு வெச்சுட்டோம். 

விக்கிபீடியாவே.. 
சீக்கிரம் மாத்துய்யா அவரு பிறந்த டேட்டு.. இல்ல
விக்கிக்கே போடுவோம் பூட்டு! 

அடுத்த கட்டுரைக்கு