Published:Updated:

ஒரே ஒரு உலகத்துல.. ஒரே ஒரு ராஜா! #HBDIlayaraja

பரிசல் கிருஷ்ணா
ஒரே ஒரு உலகத்துல.. ஒரே ஒரு ராஜா! #HBDIlayaraja
ஒரே ஒரு உலகத்துல.. ஒரே ஒரு ராஜா! #HBDIlayaraja

உங்கள் காதலி வீட்டுக்கு வருகிறாள். முதல் முத்தம். கன்னத்தில் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். உங்கள் முகம் கொஞ்சம் வாட, நீங்கள் எதிர்பார்க்காமல், சென்றவள் திரும்ப வந்து, உங்கள் உதட்டோடு உதடு வைத்து அழுந்த முத்தமொன்று பதித்து உங்களை அசத்துகிறாள்.

அப்ரைசல் முடிந்துவிட்டது. இன்க்ரிமெண்டும் வந்துவிட்டது. ‘சரி.. ஓகே’ என்று உங்கள் மனம் சமாதானம் அடையும் சமயம்; திடீரென்று உங்கள் பாஸ் அழைக்கிறார். ‘ஸாரி... மிஸ்டேக் நடந்துச்சு..’ என்று இன்னொரு கவரைத் திணிக்கிறார். முன்பு சொல்லியிருந்ததைவிட இருமடங்கு இன்க்ரிமெண்ட்.

ரஜினி, கமல், விஜய், அஜித்... யாரோ உங்கள் ஆதர்ச நாயகன். ஷூட்டிங் ஸ்பாட், விமான நிலையம்... ஏதோ ஓரிடத்தில் அவர்கள் உங்களைக் கடந்து செல்ல ‘ஐ பார்த்துட்டேன்.. அதே போதும்’ என்று திரும்புகிறீர்கள். சற்று நேரத்தில் அவர்கள் கரம், உங்கள் தோள்மேல். ‘ஒரு செல்ஃபி கேட்க நினைச்சீங்க. ரைட்டா?’ என்று உங்கள் ஃபோனை வாங்கி செல்ஃபி எடுத்துக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.

இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம். அப்படி ஒன்று நிகழ்ந்தது, 'என்றென்றும் ராஜா’ நிகழ்ச்சியில். இளையராஜாவின் பல பாடல்கள், அந்தப் பாடலுக்குண்டான ‘மரியாதை’யில் படமாக்கப்படாததால், பெரும்பாலும் லைவ் கான்செர்ட் வீடியோக்களைப் பார்ப்பதுதான் உசிதமாக இருக்கிறது!

பூவே செம்பூவே பாடலைப் பாடுகிறார் ஏசுதாஸ். இரண்டாம் இடையிசையில் ஒட்டுமொத்த வயலின்களும் இசைக்க ஆரம்பித்ததுமே, சாமி வந்ததுபோல கதறுகிறது கூட்டம். தவறான இடத்தில் சரணத்தை ஆரம்பிக்கிறார் ஏசுதாஸ். கூட்டம் கொஞ்சம் சுணங்க, இளையராஜா கையமர்த்தி, மீண்டும் பாடச் சொல்கிறார். 3.49 நிமிடத்தில் கவனியுங்கள். ராஜா திரும்ப இசைக்கச் சொன்னதும், கூட்டம் ‘ஹோஓஓஓஒ’ என்கிறது. அத்தனை பேரும் எதிர்பார்த்திருந்ததை ராஜா செய்ததற்குதான் அந்த ஆர்ப்பரிப்பு.

மீண்டும் இடையிசை. இப்போதும் தவறான இடத்தில் ஆரம்பிக்கிறார் ஏசுதாஸ். ராஜா கைகாட்ட, நிறுத்தி மீண்டும் பிடித்துப் பாடலைத் தொடர்கிறார் ஏசுதாஸ். பாடல் முடிகிறது. கைதட்டல் வானைப் பிளக்க, ‘இருங்க... இன்னும் பாட்டு முடியல’ என்று இளையராஜா சொல்ல, அருண்மொழியின் புல்லாங்குழலில் அட்டகாசமாய் முடிகிறது பாடல். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

இப்போதுதான் அந்தக் காதலியின் உதட்டு முத்தம்; இரண்டாம் இன்க்ரிமெண்ட்; ஹீரோவின் செல்ஃபி எல்லாம். ஆம். மீண்டும் ஆரம்பிக்கிறது பாடல்! இப்போது சரியான இடத்தில் எடுக்கிறார் ஏசுதாஸ். கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்: இரண்டு முறை தவறு செய்த ஏசுதாஸ் எனும் மகா கலைஞன் ‘நான் செய்த பாவம் என்னோடு போகும்’ என்று தன் நெஞ்சில் கைவைத்துச் சொல்கிறார். இரண்டு முறை செய்த தவறுகளைக் குறிப்பிடும்விதமாய். ராஜாவோ, ‘என்ன இது?’ என்பதுபோல கும்பிடுகிறார். பாடலின் வரிகள், அந்தத் தருணத்தையும் பதிவு செய்கிறது! என்னவொரு தருணங்கள் இவை! இந்தப் பாடலின் முடிவில் 9.14 நிமிடங்களில் கவனியுங்கள்.

அந்தப் புல்லாங்குழல் இசை Fade Out ஆக, மைக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்கிறார் அருண்மொழி. இதையெல்லாம், இந்தப் பாடல் 1988ல் ஒலிப்பதிவாகும்போது இளையராஜா எப்படிச் சொல்லிக்கொடுத்திருப்பார் என்று எண்ணும்போதே சிலிர்க்கிறதல்லவா? எப்படி இந்த ஞானியைக் கொண்டாடாமல் இருப்பது!

இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினர், தெரிந்தும் தெரியாமலும் இவரது இசையைக் கேட்டிருப்பார்கள் என்பது என் உறுதியான எண்ணம். ராக்கம்மா கையத்தட்டு வரிகளுக்கு அடுத்துவரும் இசையை மனதில் அசை போடுங்கள்.

அடி ராக்கம்மா கையத்தட்டு.. (.............................................)
புது ராகத்தில் மெட்டுக்கட்டு (.................................................................)
அடி ராக்கோழி மேளம்கொட்டு (..................................................................)
இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு (......................................................)

அந்த ப்ராக்கெட்டில் இருப்பது ‘ஜா.. ஜா.. ஜக ஜக ஜக ஜா...’ யோசித்தால் அது டிரம்ஸில் வரவேண்டிய இசை. அதை வயலினில் கொடுக்கும் யோசனை, இந்த மனுஷனின் மூளையில் மட்டுமே உதிக்கும்.

இஞ்சி இடுப்பழகி பாடலைக் கேளுங்கள்.

சிரமம் பார்க்காமல், 1.44 நிமிடத்தின்போது வந்து, தொடரும் இசையில், எது புல்லாங்குழல், எது வயலின் என்று கூர்ந்து கவனியுங்கள். நோட்ஸ் கொடுக்கும்போது தனித்தனியாகக் கொடுத்திருப்பார். கலைஞர்கள் அதை வாசித்து, பின் ஒட்டுமொத்தமாகக் கேட்கும்போது என்ன உணர்வுக்கு ஆட்பட்டிருப்பார்கள்?

இசையில் தொடங்குதம்மா, சங்கத்தில் பாடாத கவிதை, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, தென்றல் வந்து தீண்டும்போது, என்னுள்ளே என்னுள்ளே என்று பேசிப்பேசித் தீராத பாடல்களை விடுத்து, மூன்று பாடல்களை, மூன்று இசைக்கருவிகளுக்காக இன்று கேளுங்கள்.

இந்த மூன்று இசைக்கருவிகளிலும் பல நூறு ஹிட் கொடுத்த ராட்சஷன் இவர் என்பதால், ‘இதைவிட பெஸ்ட் இருக்கு’ என்று சண்டைக்கெல்லாம் வராதீர்கள். இன்றைக்கு இது என்று கொள்வோம்!

புல்லாங்குழல்: சின்னக் கண்ணன் அழைக்கிறான். ராஜாவின் இசைநிகழ்ச்சியில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய வீடியோ கீழே . இந்தப் பாடலில் புல்லாங்குழலை மட்டும், உன்னிப்பாகக் கேளுங்கள். 2.47 / 3.04 / 4.02 என்று பல இடங்களில்.

வயலின்: வயலினில் எனக்கு மிகப்பிடித்தது ‘பாடவா உன் பாடலை’ தான். ஆனால் இன்று இதைக் கேட்போம்: பிரம்மா படத்தின், ‘எங்கிருந்தோ இளங்குயிலின்’ இரண்டாம் இடையிசை ஆரம்பிக்கும் 2.44 நிமிடத்திலிருந்து வயலின் இசையை மட்டும் உன்னிப்பாகக் கேளுங்கள்.

தபேலா அம்மா உன் பிள்ளைநான்... நான் கடவுள் படத்தில் இந்தப் பாடல் இருப்பது சிலருக்குத் தெரியாது. கீழே உள்ள வீடியோவில்  கேட்டுப் பாருங்கள்.

மூன்று சரணங்கள். சரணத்தின் பின்னணியில் ஒலிக்கும் தபேலாவைக் கவனியுங்கள். ஒவ்வொரு இரண்டு வரிக்கும் தாளம் மாறும். அதுவும் இரண்டாம் சரணத்தில் (.2;30 நிமிடம்) ‘காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே’ வரிகளில் தபேலா என்னதான் செய்கிறதென்று தெரியவே இல்லை. அப்படி ஒரு உருட்டு! ‘என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு’ என்றொரு பாடல்,  

இப்படி எத்தனை எத்தனை புதிய உத்திகள்; சாதனைகள்!

இளையராஜாவின் மீது எதற்காவது, எங்காவது விமர்சனம் வைக்கப்பட்டால், நான் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவரின் ஏதோ ஒரு ப்ளேலிஸ்டைப் போட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவேன். இரண்டு பாடல்களில் நமக்கு ஒரு தெளிவு வரும்: ‘இவரைப் போய் விமர்சிக்க நாம யாரு!’ அவ்வளவுதான்.. கோபம் போய்விடும்!

இளையராஜா  கொடுத்த, ஒவ்வொரு பாடல்களையும் ஒவ்வொரு விதமாய் ரசிக்கவே இந்த ஆயுள் பத்தாது. ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.  

நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, லேசாக மழை வருவது போல இருந்தது. நண்பரின் இளையமகன் எதையோ கையில் எடுத்துக்கொண்டு ஓடினான். ‘என்ன ஃபோனைத்தூக்கிட்டு மழைல போறான்’ என்று கேட்டேன். ‘வரட்டும், நீயே கேளு!’ என்றார் நண்பர்.

கொஞ்சநேரம் கழித்து வந்த அவனிடம் கேட்டேன். ”மழைல நனைஞ்சுட்டே இந்தப் பாட்டைக் கேட்டிருக்கீங்களா அங்கிள்?” என்று இயர்ஃபோனை என் காதில் சொருகினான். அது... ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். “ஒருவாட்டி மழைல கேட்டேன் அங்கிள். போதை மாதிரி ஆகிடுச்சு. லேசா தூறல்போட்டாலே ஃபோனைக் கவர்லபோட்டுட்டு எடுத்துட்டுப் போய்க் கேட்டுட்டிருப்பேன். ஒருக்கா டிரை பண்ணிப்பாருங்க. செம்ம்ம ஃபீல் அது!” என்றான்.

அவன் பிறந்த வருடம் 2000. திரையுலகில் ராஜாவின் 24வது வருடம். ஹேராம், பாரதி உட்பட இளையராஜா 11 படங்களுக்கு இசையமைத்த ஆண்டு. அவன் சொன்ன பாடல் வெளிவந்தது, அவன் பிறப்பதற்கு 5 வருடங்களுக்கு முன்பு, 1995ல். அந்தப் பாடலை அவன் முதன்முதலில் கேட்டது அவன் 10வது படிக்கும்போது என்றான். அதாவது 2015ல்.

இன்னொரு முறை இந்த வருடங்களையெல்லாம் கவனமாகப் படியுங்கள். எத்தனை தலைமுறைகள் கடந்தும், குடும்பத்திற்கு ஒருவரையாவது தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது இவரின் பாடல்கள்.

ஒரே ஒரு ஊர்ல... ம்ஹும்.. ஒரே ஒரு உலகத்துல.. ஒரே ஒரு ராஜா!

பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜாசார்!