Published:Updated:

வைகைப்புயல் கோடம்பாக்கத்தில் நிலைகொண்ட கதை - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 6

விக்னேஷ் செ
வைகைப்புயல் கோடம்பாக்கத்தில் நிலைகொண்ட கதை - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 6
வைகைப்புயல் கோடம்பாக்கத்தில் நிலைகொண்ட கதை - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 6

திருவிழாவுல தெரை கட்டிப் படம் பார்த்த மூணாம் நாளு படம் எடுக்கப்போறேன்னு சொல்லாமக் கொள்ளாம பெட்டியைக் கட்டுன பலபேரு இன்னிக்கு கோடம்பாக்கத்துல பெரிய தலைக்கட்டுக. ஊரு, மக்க, சனம், சந்தோசம்னு ரெண்டு வேளைக் கஞ்சியோட வாழ்ந்தவரு, ஊரு ஒலகத்தையே சிரிப்பாச் சிரிக்கவச்ச கதய இப்பப் பாக்கப்போறோம். 

அவுக அப்பாரு கூலி வேலை பார்த்தாரு. அவரு, அவருகூடப் பொறந்த தம்பிங்கள்லாம் அப்பாரோட வேலைக்குப் போவாக. கண்ணாடியை அறுத்துத் தினுசு தினுசா நகைப்பெட்டிங்க மாதிரி செஞ்சு கொடுக்கிற வேலை. எவ்வளவுக்கெவ்வளவு சுருக்கா வேலை செய்யிறமோ, அவ்வளவுக்கவ்வளவு வருமானம். அதனால காலங்காத்தால கண்ணு முழிக்கிறதே வேலையிலதான். பழையசோறும் வெங்காயமுந்தேன் காலைச் சாப்பாடு. தண்ணி ஊத்தின சோத்துக்குச் சில நாள்கள் ரெண்டு தக்காளி, ரெண்டு வெங்காயம், கொஞ்சம் உப்புப் போட்டு, அம்மா கையால பிசைஞ்சே வைக்கிற 'கைக்கூட்டு' உண்டு. அந்தக் கூட்டுக்கு எதையும் அரைக்கிற வேலையுமில்ல... சமைக்க அடுப்பும் தேவையில்ல... அந்தக் கைக்கூட்டோட பழையதை ஒரு புடி புடிச்சா, சும்மா தேவாமிர்தமா இருக்கும்! இன்னிக்கு வரைக்கும் அத அடிச்சிக்கிற வேற பண்டமும் இல்ல. மதுரையில இருந்த காலத்துலயுஞ் சரி... இப்பயுஞ்சரி... பழைய சோறுதேன் அண்ணனுக்கு உசிரு. 

என்.எஸ்.கே, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், எம்.ஆர்.ராதா, பாலையா, சுருளிராஜன் இவங்களை எல்லாம் பாத்து சிரிச்சு வளந்தவரு. ஆனா, இடைப்பட்ட காலத்துல வந்த காமெடிகளை எல்லாம் பாத்தப்ப, 'ஆஹான்'னு உப்பு இல்லாம கஞ்சி குடிக்கிற மாதிரி சப்புனு ஆகிருக்கு. இவிங்களைவிட நல்லா காமெடி பண்ணலாமேனு வெறி ஏறுனவருக்கு, எங்கிட்டுப் போறது... யாரப் பாக்குறதுன்னுதான் ஒரு பாதையும் மட்டுப்படல. சரி ரைட்டு... நாமளே எறங்குவோம்னு போட்டுருக்குற டவுசரோட அங்க இங்க புடிச்சு கோடம்பாக்கத்துக்கு வந்துட்டாரு. வைகைப்புயலு கூவக்கரைக்கு வந்துசேந்த கத இதுதேன்.

அவரு சினிமா சான்ஸ் தேடி அவரு மெட்ராஸுக்குப் படையெடுத்தது ரொம்பத் தமாசு. வேலை செஞ்சு சம்பாதிச்சதுல வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி கொஞ்சங் கொஞ்சமா மிச்சப்படுத்தி மாசத்துக்கு ஒருவாட்டி மெட்ராஸுக்கு லாரியில புறப்பட்டுருவாரு. லாரி மேல தார்ப்பாய்ல படுத்துக்கிட்டு அதுல கட்டியிருக்கிற கயித்துல கையைக் கோத்துக்கிட்டுக் கனவுகளோட தூங்கிக்கிட்டே போவாராம். சினிமாக் கனவோட போறவருக்கு வேறென்ன வரும்... எல்லாம் நடிக்கிற மாதிரி கனவுதேன். மெட்ராஸுக்கு வாற ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொரு ஏரியாவில் ஏதாவது வீட்டு வாசல்ல படுத்துத் தூங்கிடுவாராம். வைகைக்கரையில வாழ்ந்த மனுசன் எதுக்கும் யார் கையையும் எதிர்பார்க்க மாட்டாரு. சினிமாவுல எப்படியும் நடிச்சிடணும்கிற ஆசையில பித்துப்பிடிச்ச மாதிரி அலைஞ்சிருக்காப்ள. அடிக்கடி சென்னைக்கு வந்து சான்ஸ் கேட்டு, கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கியிருக்காரு. பட்டணத்துக்காரவுகளும் நாயைத் தொரத்தற மாதிரி விரட்டி அடிச்சிருக்காக. சினிமாக் கெரகத்துல சாட்டிலைட் வுடுறது ஒண்ணும் லேசுப்பட்ட காரியமில்லைல. 

ஒருநாள் மத்தியான நேரம்... நல்ல பசியில ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப் போயிருக்காரு. வாசல்ல ஒரு ஆள் நிக்கிற மாதிரி கூண்டு ஒண்ணு இருக்கு. அதுல இருந்த வாட்ச்மேன் உள்ளே போகவிடாமத் தடுத்துப் பாத்துருக்கார். 'எங்கே வந்தே?’னு கேட்டதுக்கு, 'நம்ம ஊர் மருதங்க... சினிமாவுல நடிக்க சான்ஸ் கேக்கலாம்னு வந்தேங்க’னு நம்மாளு சொல்லிருக்கார்.

'அதுசரி... நானும் பெரியகுளத்துக்காரன்தான்’னு அவர் சொல்ல, அட நம்ம ஆளுன்னு சந்தோஷமா இருந்திருக்கு இவருக்கு. நடிக்கத் தெரியுமானு கேட்டவர், 'நடிச்சுக் காட்டு... பார்ப்போம்’ன்னாராம். அது போதாதா நம்மாளுக்கு... அவர் கையைப் பிடிச்சு வெளியே இழுத்துவுட்டுட்டுக் கூண்டுக்குள்ள போய் நின்னு கையக் காலை உதறி நடிச்சுக் காட்டிருக்கார் நம்ம அண்ணன். விழுந்து விழுந்து சிரிச்சார் வாட்ச்மேன். 'நல்லா நடிக்கிறியே... பொழச்சுக்குவே, போ’னு ஸ்டூடியோவுக்குள்ள அனுப்பிவெச்சாராம். சென்னையில முதன்முதலா நடிச்சதே ஏ.வி.எம்-மில்தான்னு நெனைக்கிறப்போ ஆனந்தமா இருக்குனு அண்ணன் அப்பப்போ சொல்லுவாராம். 

சினிமாவுக்கு வர்றதுக்கு முந்தி சாப்பாடெல்லாம் நேரத்துக்குச் சாப்புடுறதை நெனைச்சுப் பார்க்க முடியாதாம். மதுரைக்கு வந்திருந்த ராஜ்கிரணை முதன்முதலா ஒரு மத்தியான நேரத்துல சந்திச்சிருக்கார். சென்னைக்கு வந்து ராஜ்கிரண் கூட இருக்கறப்போ, கம்மங்களியும் கருவாட்டுக் குழம்பும்தான் காலை டிபன். 'டேய் வடிவேலு... கருவாடு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டுக் குழம்பு வெச்சு, கருவாட்டைத் தூக்கித் தூரப்போட்டுட்டு அந்தக் குழம்பை உள்ளங்கையில் ஊத்தி உறிஞ்சிக் குடிக்கணும்டா'னு சொல்வாராம் ராஜ்கிரண்.

அந்தக் காலத்துலயுஞ் சரி... இந்தக் காலத்துலயுஞ் சரி... சினிமாதேன் வடிவேலண்ணனுக்கு பெரிய பொழுதுபோக்கு. அப்பலாம் சினிமாவுக்குப் போறதுனா...  தீபாவளி, பொங்க மாதிரி. எம்.ஜி.ஆரை நேர்ல பாக்க மனசு கெடந்து அடிச்சுக்குமாம். இப்ப இருக்குற மாதிரி... இன்டர்நெட்டோ, ஸ்மார்ட் போனோ என்னவோ ஒண்ணுல டிக்கெட்டு வாங்கி, பக்கத்துத் தேட்டர்ல போயி பகுமானமா பாக்குறதெல்லாம் அந்தக் காலத்துல நடக்காதுல்ல. ஆறு மணி ஆட்டத்துக்குப் போகணும்னா... மூணு மணிக்கே கௌம்ப ஆரம்பிக்கணும். கொஞ்சம் வசதி வாய்ப்பு கொண்டவுக வண்டி பூட்டிக் கௌம்புவாகளாம். இல்லாதவுக, வண்டிப் பூட்டிப் போறவுகள வயித்தெரிச்சலோட பாக்கத்தேன் முடியும். 

இந்தச் சென்னைப் பட்டணத்துல எங்க பாத்தாலும் கேரட்டுக்குக் கை, கால் மொளைச்ச மாதிரி பொண்டு புள்ளைகபூராம் வெள்ளை வெளேர்னு திரியறாக... மூஞ்சிக்கு அப்புடி என்னத்தத்தேன் பூசுவாகளோ... அப்புடி ஒரு செவப்புனு ஆச்சரியமாப் பாப்பாராம். சின்னப் புள்ளையா இருந்தப்ப, கூடப் பொறந்த ஏழு பேர்ல அவரு ஒருத்தர்தேன் கறுப்பு. மத்த ஆறு பேரும் அவங்கம்மா கலரு. இவரு மூஞ்சியத் தொட்டு மத்த ஆறு புள்ளைங்களுக்கும் பொட்டு வெச்சு அனுப்பி வுடாதது மட்டுந்தேன் பாக்கியாம். பள்ளிக்கூடம் போனா... எல்லாப் பயலுகளும் 'ஏ கருவாப்பயலே’னுதேன் கூப்புடுவாய்ங்களாம். மதுரையிலயே கருவாப்பயனு கூப்புட்டு இருக்காகனா, சென்னையில எப்புடிப் பாத்துருப்பாக..? வாழ்ந்து பாக்கறதுக்கு வண்ணமா முக்கியம்... மனசு நோகாம நடக்குற எண்ணந்தானே முக்கியம்!

     'ஆடி அடங்கும் வாழ்க்கையடா
     ஆறடி நிலமே சொந்தமடா 
     வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
     வந்தவர் யாருமே நிலைப்பதில்லை
     தொகுப்பான் சிலர் அதைச் சுவைப்பதில்லை
     தொடங்குவான் சிலர் அதை முடிப்பதில்லை..." 
                                                               

                                                                                           - சுரதா  

பொறந்த மண்ணுல பொழங்குற வார்த்தைகதான நம்ம வாழ்க்க. நாடி நரம்பு சதையெல்லாம் ஓடிக்கெடக்குறது நம்மூரு மொழி. எங்கிட்டுப் போனாலும் அதான வரும். நீட்டி இழுத்துப் பேசுற நெல்லைத் தமிழ், மரியாதையையும் அன்பையும் குழைச்சுப் பேசுற தஞ்சைத் தமிழ், கொஞ்சிப் பேசுற கொங்குத் தமிழ்னு எல்லாத்தையும் ரசிப்பாரு. ஆனா பேசுறது பொரண்டு திரிஞ்ச மதுரப்புழுதி மொழிதேன். பாஷை ஒண்ணும் தோசை இல்லைல.. நெனச்சதும் திருப்பிப் போடுறதுக்கு..? 

நம்மூருல நாம பாக்காத கேரக்டருகளா கழுதனு விட்டு வெரட்டுனவருக்குக் குரல்மொழி ஆரம்பிச்சு குனிஞ்சு நிமிருற முதுகுத்தண்டு மொழி வரைக்கும் இன்னிக்கு அத்தனையும் அத்துப்படி. டெண்ட் கொட்டாய் தெரையில பாத்து ஹோம்வொர்க்கு பண்ணதுதேன் எல்லாம். போடா போடா புண்ணாக்குனு உள்ள நொழைஞ்சவரு புலிகேசியா ஒசந்து நின்னாப்ள. இந்த நடிப்புக்கு ரிஷிமூலம், ஆதிமூலம்னு தேடிப்போனா வைகைக்கரைதான் டெட் எண்டு. மதுர மண்ணுல சல்லித்தனமும், சவடாலும் ததும்ப உருண்டு பொரண்டவர்ங்கிறதால எப்பவுமே சுதாரிப்பு கொஞ்சம் ஜாஸ்தி. செத்த நேரங் கண்ணசந்தா... சொத்தப் பூரா எழுதி வாங்கிட்டு அனுப்பிடுற காலம்ங்கிறதால எப்பயுமே சூதானமாத்தேன் இருப்பாப்ள. ஏப்ப, சாப்பைகனா இந்த ஊருல காலந்தள்ள முடியுமா..? 

'தேவர் மகன்' படந்தேன் நம்மாளுக்கு டர்னிங் பாயின்டு. 'தேவர் மகன்' படத்துல நடிக்கும்போது, சிவாஜி, கமலைக் கூப்புட்டு 'இந்தப் படத்துல ஒரிஜினல் மதுரப் பேச்சுப் பேசி நடிச்சவன் இவந்தான்டா... இவன் பெரிய ஆளா வருவான்டா' னு சொல்லி, 'இத இப்படியே வளத்துக்கடா, லேசா என்னயவே சிலுப்பி விட்டுட்டடா... நல்லா வருவடா...'னு அழுத்தமா ஒரு முத்தம் குடுத்துருக்காரு. அதுவே அஞ்சாறு நேசனல் அவார்டு வாங்குனதுக்குச் சமானமா சொல்லிச் சிலாகிப்பாரு. இப்ப, சார்லி சாப்ளினையும் வடிவேலு அண்ணனையும் ஒப்பிடுறாய்ங்க. ரெண்டு பேருமே வறுமைக்கு வாக்கப்பட்டு வளந்து வரலாறு படைச்சவிய்ங்க. 

இங்கிலீசுல தெரிஞ்சதெல்லாம் 'வாட் இஸ் யுவரு நேமு, வெல்கம், தேங்கியூ, ஹாய், பாயி'னு ஒரு ஏழெட்டுப் பீஸுகதேன். இதுகள வச்சுக்கிட்டுத்தேன் இத்தன வருசமா கடைய ஓட்டிக்கிட்டு இருக்கோம்னு கமுக்கமாச் சிரிப்பாப்ள. போறவாற இடத்துல பெரியாளுனு மதிச்சு இங்கிலீசுல பேசுறவங்கக்கிட்ட 'ஓ... ஐ ஸீ..'னு என்னத்தையாச்சும் சொல்லிச் சமாளிப்பாப்ளயாம். தப்புத் தப்பான எடத்துல 'ஐ...ஸீ' போடுறதப் பாத்து 'யார்யா இவன் ஐஸ் யாவாரியா இருப்பான் போலருக்கே'னு அவிய்ங்க கேவலமா லுக் விட்டா ஒடனே கடையச் சாத்திருவாப்ளயாம். 

'முன்னாடியெல்லாம் புள்ளகுட்டிகளுக்கு நெலாவக் காட்டி சோறு ஊட்டுவோம். இப்ப 'எலே... இங்காரு வடிவேலு...'னு ஒன்னயக் காட்டித்தேன் சோறு ஊட்டுறோம்'னு வாய்நிறையச் சொல்லும்போதே அண்ணனுக்கு வயிறு நெறைஞ்சுபோகுமாம். நல்ல இனிமையான வார்த்தைக இருக்கிறப்ப ஏன் கொடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துறீகனு ரெண்டே வரியில சொல்லிட்டுப் போயிருக்காரு தாடிக்கார வள்ளுவரு. நீங்க பேசுறதை வெறும் வார்த்தைனு மட்டும் நெனைக்காதீக. பலரோட வாழ்க்கையே ஒங்க வார்த்தையிலதேன் அடங்கி இருக்கு! வசதியும் வாய்ப்பும் இன்னிக்குப் போகும்; நாளைக்கு வரும்; மனுச மக்கதேன் என்னிக்கும் நிரந்தரம்!

அண்ணனோட அகராதிப்படி, வாழ்க்க ஒரு வாடக சைக்கிளு... ஓனரு வண்டியப் புடுங்குற வரைக்கும் புடிவாதமா ஓட்டிக்கிட்டே திரியணும். க்ளிங் க்ளிங் க்ளிங்..!

- இன்னும் ஓ(ட்)டலாம்...