Published:Updated:

‘வல்லினம், மெல்லினம் வரலைன்னா என்ன.. தமிழினம் காப்பாற்றும்!’ - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 7

விக்னேஷ் செ
‘வல்லினம், மெல்லினம் வரலைன்னா என்ன.. தமிழினம் காப்பாற்றும்!’ - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 7
‘வல்லினம், மெல்லினம் வரலைன்னா என்ன.. தமிழினம் காப்பாற்றும்!’ - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 7

ழுபதுகளின் இறுதிப்பகுதி அது. இவரும் சினிமா வாய்ப்புத் தேடிப் புறப்பட்டார். சிவப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. நாடகங்களில் நடித்து அனுபவம் இல்லை. சினிமா பின்னணியும் இல்லை. இத்தனைக்கும்  ரஜினியும், கமலும் மசாலாப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலம் அது. ஹீரோவாக நடிக்க வாய்ப்புத் தேடிச் சென்னைக்கு வருவதற்கு முன் தன்னுடைய நண்பர் ஒருவர் சொன்னதுபோலவே ரஜினிகாந்த் ஸ்டைலில் பல போட்டோக்களை எடுத்து ஆல்பம் ஒன்றைத் தயார் செய்துள்ளார். தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்து அந்த ஆல்பத்தைக் காட்டி வாய்ப்புக் கேட்டுள்ளார். 'அதான் ஒரு ரஜினி இருக்காரே அப்புறம் நீ எதுக்கு... எடுத்துட்டு ஊருக்குப் போ' என்று அந்த தயாரிப்பாளர் சொல்லிவிட்டாராம். அதன் பிறகே தன்னுடைய ஸ்டைலில் வேறு ஒரு ஆல்பம் தயார் செய்து வாய்ப்புத் தேடத் துவங்கியுள்ளார் அந்த நடிகர். 

நாராயணனுக்கு மதுரைக்குப் பக்கத்தில் நல்ல வசதியான குடும்பம். அவரது அப்பா காங்கிரஸில் மூத்த தொண்டர். கவுன்சிலராகவும் இருந்தவர். சாப்பாட்டுக்கும், வசதிக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. வீட்டில் இருக்கும்போது  கஷ்டத்தைத் துளியும் உணராதவர் சினிமா வாய்ப்புத்தேடி சென்னைக்கு வந்து பட்ட கஷ்டங்கள் ஏராளம். இன்றும் பசியோடு யாரையாவது பார்த்தால் கலங்கிப் போய்விடுவார். நாராயணன் என்பது அவரது தாத்தாவின் பெயர் என்பதால் , விஜயராஜ் என வீட்டில் அழைப்பார்களாம். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா சூட்டிய பெயர் விஜயகாந்த். இன்று அரசியல் ரீதியாகப் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை அத்தனை பேருக்குமான நம்பிக்கைப் பாடம்! சரத்குமார், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என அவர்மூலம் பிரபலமான நடிகர்களின் பட்டியலும் ரொம்பவே நீளம்!

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து இஞ்ச் பை இஞ்ச் காட்சிகளை வர்ணித்துச் சந்தோஷப்படுவாராம். 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை 70 தடவைகளுக்கு மேல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்து, சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்த சமயம் அது. நண்பர் ஒருவருடன் சென்னைக்குக் கிளம்புகிறார். இருவரும், தியாகராய நகரில் கீதா கஃபேவுக்குப் பின்புறம் இருக்கும் லாட்ஜில் தங்குகிறார்கள். விஜயராஜ் ஒருபுரம் சினிமா வாய்ப்புத் தேடிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அவரது நண்பர் விஜயராஜுக்காக வாய்ப்புத் தேடி அலைகிறார். அந்த நண்பர்தான் பால்யகாலம் முதல் தோள்கொடுத்த இப்ராஹிம் ராவுத்தர். தமிழ்மொழிப் பற்றாளரான விஜயகாந்த் தன் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு 'மே டே' எனும் படத்தில் நடிக்கச் சம்மதித்தது இதே இப்ராஹிம் ராவுத்தருக்காகத்தான். அந்தப் படமும் வெளியாகவில்லை. இதற்கு முன்பே அவர் நெடிய போராட்டத்தைக் கடந்துவிட்டிருந்தார்.

முதல் பட வாய்ப்புத்தேடி அலையும்போது, 'உன்னோட தமிழ் நல்லாயில்லே...’ எனச் சொல்லிப் பல இடங்களில் திருப்பி அனுப்பப்பட்டார். மதுரைக்கார விஜயராஜுக்கு நாக்கு புரளாது. வல்லினம், மெல்லினம் சரியாகப் பேச வராது. ஆனால், இன்று அவரது நாக்குச் சுழல்வு நையாண்டியானது தனிக்கதை. 'வல்லினம், மெல்லினம் வரலைன்னா என்ன... மொத்தத் தமிழினமும் ஆதரவு தந்து தூக்கி நிறுத்தியது. அந்த நன்றி இன்னும் நெஞ்சுக்குள்ளே இருக்கு' என்பார் விஜயகாந்த். தான் கஷ்டப்பட்டாலும், அது வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியக்கூடாது என நினைத்ததால் உதவிகேட்காமல் பசியும் பட்டினியுமாகச் சென்னையில் நாட்களை ஓட்டினார். 

பள்ளிக்கூடம் படித்த காலத்தில், ஹாஸ்டலில் இருக்கும்போது காசு கொடுத்து வார்டனைக் கரெக்ட் செய்து வைத்துக்கொள்வாராம். எல்லோருக்கும் போலக் கொடுக்கும் சப்பாத்திகளைக் சாப்பிட்டுவிட்டு, கை கழுவும் இடத்திற்குப் பக்கத்தில் நின்றால், சமையல்காரர் எக்ஸ்ட்ரா சப்பாத்தியைத் தூக்கிப் போடுவாராம். ஹாஸ்டலில் இருக்கும்போது வீட்டிலிருந்து மிக்ஸர், முறுக்கு என டின்களில் கொடுத்து அனுப்புவதையெல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றிரண்டு நாள்களில் காலி செய்துவிடுவாராம். சினிமாவுக்கு வரவேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால், விஜயராஜ் எஸ்.எஸ்.எல்.சி-யைத் தாண்டவில்லை. ஆனால், இன்று தனது வீட்டில் வேலைசெய்பவர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் படிக்கவைக்க உதவி செய்கிறார்.

மதுரையில் சேனாஸ் சினிமா கம்பெனி வைத்திருந்த மர்சூக், எம்.ஏ.காஜா இருவரும்தான் விஜயகாந்த்தின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர்கள்.  நடிச்சா ஹீரோதான் எனும் எண்ணத்தோடு வந்தவர் வேறு வழியின்றி, 'இனிக்கும் இளமை' படத்தில் வில்லன் ரோலில் நடித்தார். அவர் வில்லனாக நடித்த ஒரே படமும் அதுதான். 'தூரத்து இடி முழக்கம்' படம்தான் இவருக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது. இது மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்ற படமாகும். எஸ்.ஏ சந்திரசேகர் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்.

விஜயராஜுக்குத் தெரிந்தது சண்டையும், சிலம்பமும்தான். இவற்றைச் செய்துகாட்டித்தான் வாய்ப்புக்கேட்க வந்தாராம். இயற்கையாகவே அவரது கால்களை உயரமாகத் தூக்க முடிந்ததால் லெக் ஃபைட்டிங்கைத் தொடர்ந்து பயன்படுத்தினார். 'உப்ஹாய்' சத்தத்தோடு சுவரில் கால் வைத்துப் பறந்து உதைப்பது, முஷ்டி மடக்கியே பத்துப் பேரைப் போட்டுப் பொளப்பது என டேபிள் சேர்களை உடைத்து கிராமத்து இளைஞர்களுக்கு இன்னும் நெருக்கமானவரானார்.

பெரிய இயக்குநர்கள் அனைவரும் ரஜினி, கமலை வைத்துக் கடையை நடத்திக்கொண்டிருக்க, திறமையான புது இயக்குநர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். இவர் நடித்த ஒரே பெரிய இயக்குநர் பாரதிராஜா மட்டுமே.  திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என இந்தப் பட்டியல் நீளும். 

அந்தக் காலகட்டத்தில் சிறு பட்ஜெட் படங்களின் வசூல் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தார். கதைக்குத் தேவையென்றால் இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிப்பவர் எனும் நற்பெயர் உண்டு. தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984-ல் 'மதுரை சூரன்' முதல் 'ஜனவரி 1' படம் வரை 18 படங்களும் 1985-ம் ஆண்டில் மட்டும் 'அலை ஓசை'யில் ஆரம்பித்து 'நானே ராஜா நானே மந்திரி' வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது.
 
'வானத்தைப் போல' படத்தின் கதையைப் போலவே, எல்லாத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்தபோதே விஜயகாந்துக்கு 37 வயதாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். 

"வெற்றின்னா ஆடுறதும், தோல்வின்னா புலம்புறதும் கிடையாது. மகிழ்ச்சியோ, வருத்தமோ எல்லாமே கொஞ்ச நேரம்தான். கோடிக்கணக்குல சம்பாதிச்சும் பார்த்துட்டேன்... நஷ்டப்பட்டும் பார்த்துட்டேன். 'எங்கேயும் நின்னுடாதே... நடந்துட்டே இரு’ங்கிறதுதான் என்னோட தத்துவம். நான் ஓடிக்கிட்டே இருக்கேன்..!''

'பாய்ஸ்' படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் சொல்வதாக ஒரு வசனம் வரும். 'விஜயகாந்த் ஆபிஸ்ல எப்ப கறிச்சோறு போடுறாங்க...' என சென்னையில் இலவசமாக சாப்பாடு கிடைக்கும் இடங்களின் டேட்டாபேஸ் சொல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் விஜயகாந்த் வீட்டில் 100 பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த்!

(தகவல் உதவி : திரு.திருநிறைச்செல்வம் - விஜயகாந்த்தின் ஆரம்பகால உதவியாளர்)

இன்று புதிதாகச் சினிமா வாய்ப்புத் தேடுகிறவர்கள் நாளையோ, நாளை மறுநாளோ உச்சிக்குச் சென்றாலும், உதவி செய்தவர்களின் நன்றி மறக்காமல் இருப்பதைத் தனது அனுபவங்களின் மூலம் கற்றுத்தருகிறார் விஜயகாந்தாகிய விஜயராஜ். வெற்றி எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு முழுத் தகுதியாயிருப்பது உங்கள் பண்புகளில் இருக்கிறது. 

- இன்னும் ஓடலாம்...