Published:Updated:

'ஆலமரத்தடியில புல்லு மொளைக்காது!' - கமல் உதவி இயக்குநரின் கதை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 9

விக்னேஷ் செ
'ஆலமரத்தடியில புல்லு மொளைக்காது!' - கமல் உதவி இயக்குநரின் கதை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 9
'ஆலமரத்தடியில புல்லு மொளைக்காது!' - கமல் உதவி இயக்குநரின் கதை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 9

ந்த மதுரைக்காரப் பங்காளி நடிக்கிறதுக்காகச் சென்னைக்கு வந்தது 1998-ல. பள்ளிக்கூடம் படிக்கும்போதே நடிப்பும் சினிமாவும்னா கொள்ளைப் பிரியம். சுத்துப்பட்டுல இருக்கிற கிராமங்கள்ல சமூக விழிப்புஉணர்வு நாடகங்கள்ல நடிச்சதுதான் பயிற்சி. அவுக அப்பாவுக்கு இவரு டைரக்டரா சினிமாவுல ஒசந்து பேர் நிலைக்க வாழணும்ங்கிறதுதான் ஆசை. 'படம் எடுக்கப் போறதுனா படிச்சுட்டுப் போ... அங்க போய்த் திக்கும்தெரியாம தெசையும்தெரியாம திரியப்படாதுல'னு சொல்லியிருக்கார். அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவரு படிப்பு முடிஞ்சதும் மெட்ராஸுக்கு வண்டியேற ஆயத்தமாகிட்டார். 

எடுத்தவொடனே டைரக்டராகிற முடியுமா... படிப்படியா மலையேறுவோம்னு ஒருநாள் ராத்திரி, பக்கத்து வீட்டுல காரணத்தைச் சொல்லாம முந்நூர்ருவா கடனா வாங்கிக்கிட்டு 'சினிமாவுல நடிக்க மெட்ராஸுக்குப் போறேன். என்னைய யாரும் தேடவேணாம்... விரைவில் திரையில பாருங்க...'னு வீராப்பா கடுதாசி எழுதி வெச்சுப்புட்டு சொல்லாமக் கொள்ளாம வண்டியேறியிருக்காரு. கூட்டாளி அட்ரஸத் தொலைச்சவரு இங்க ராஜா அண்ணாமலைபுரத்துல வந்து தங்கியிருந்துருக்காரு.  எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினியை இமிடேட் பண்ணினவங்களுக்கு மத்தியில, வடிவேலு கொடிகட்டிப் பறந்த சமகாலத்துலேயே வடிவேலுவை இமிடேட் பண்ணின மொத ஆள் இவருதான். 

நடிக்கப்போனா என்னடா தெரியும் ஒனக்குனு கேட்பாய்ங்களேனு டான்ஸ், ஜிம்னாஸ்டிக், குங்ஃபூனு சிலபல வித்தைகளையெல்லாம் கத்துக்கிட்டுத்தேன் கெளம்பிருக்காரு. இங்க வந்து பார்த்ததுக்கு அப்புறந்தேன் சினிமாவுல இதையெல்லாத்தையும் பண்றதுக்கு டூப்னு ஒரு புது ஐட்டம் இருக்குங்கிறதே தெரிஞ்சிருக்கு. திரைக்கு முன்னாடி நடிக்கிறவங்களை ஹீரோன்னும், ஹீரோவுக்குப் பதிலா பத்துமாடிக் கட்டடத்துல இருந்து குதிக்கிறவன டூப்புன்னும் சொல்ற முரண்தான் சினிமான்னு புரிஞ்சதுக்கு அப்புறம் 'இம்புட்டு நாளா சூதுவாது தெரியாமயே வளந்துட்டம்போல...'னு பொட்டுல உரைச்சிருக்கு. 

சென்னைக்கு வந்தும் ஷூட்டிங் நடக்குற ஸ்டூடியோக்களுக்குள்ள எல்லாம் போகமுடியாம வாட்ச்மேன்களால விரட்டப்பட்ட கதையும் நிகழ்ந்திருக்கு. விஜயவாஹினி, ஏ.வி.எம், பிரசாத்னு எல்லாப் பக்கமும் அலைஞ்சாலும் கொஞ்சங்கூட அசந்து உள்ளவிட ஆள் இல்ல. அட்ரஸ் தேடித்திரிஞ்ச கூட்டாளி, யதேச்சையா வடபழனிப் பக்கம் ஒரு ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்துருக்கார். நிகழ்ச்சி முடியுறவரைக்கும் உக்காந்து பார்த்துட்டு அப்புறமா தேடிப்பிடிச்சு மெட்ராஸுக்கு வந்த கதையைச் சொல்ல, ஒருவழியா தங்குறதுக்கு இடமும் கிடைச்சிருச்சு. அவர் மூலமா அப்படியே கூடமாடச் சேர்ந்து கோயில் திருவிழா டான்ஸ் க்ரூப்கள்ல ஆடித் திரிஞ்சிருக்கார். அதுலயும் வடிவேலு பாட்டுன்னா அப்படியே ஆட்டம் களைகட்டிரும். குடியாத்தம் பக்கத்துல ஒரு கோயில் திருவிழாவுல ஆடுறதுக்குக் கூலி முப்பது ரூவா. 'எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டக் கேக்கும்...'னு கரகரன்னு ஆடி முடிச்சா அந்தூரு ஆளுக குடுத்த டிப்ஸு மட்டும் ஐந்நூறு ரூவாய்க்கு மேல. இது நல்ல யாவாராமா இருக்குனு அவிங்ககூடவே ஊர்த் திருவிழா கலைநிகழ்ச்சிகள்ல ஆட ஆரம்பிச்சிட்டார்.

'புதிய பூமி'ங்கிற டான்ஸ் க்ரூப்ல சேர்ந்து ஊர் ஊராப் போயி பெர்பார்மன்ஸ் பண்றதுதான் அப்போ வேலை. சினிமாவுக்கு வந்தும் சான்ஸ் கிடைக்காம இப்படித் திரிஞ்சவருக்கு, வடிவேலுத்தம்பி இருந்தாத்தான் உங்க க்ரூப்ப புக் பண்ணுவோம்ங்கிற அளவுக்கு தமிழ்நாடு பூராம் ஏகப்பட்ட ரசிகர்கள். கொஞ்சம் வசதியானதும் சேர்த்துப் பிடிச்சு ஒரு செயினும் மோதிரமும் வாங்கிப்போட்டுக்கிட்டு ஊர்ப்பக்கம் போனா பெருமையா நினைப்பாய்ங்கனு நினைச்சு வாங்கிப் போட்டிருக்கார். செயினு வாங்கி போட்ட நேரமோ என்னமோ அதிர்ஷ்டம்(!) முகட்டைப் பிச்சிக்கிட்டுக் கொட்டுன கதையா ரஜினி படத்துல நடிக்கிற வாய்ப்பு தேடி வந்திருக்கு. அந்தக் கதையக் கேளுங்க... 

அப்பத்தான் புரோகிராம் மேனேஜருனு அறிமுகமான ஒருத்தர், 'தம்பி... உங்களத்தான் தேடிக்கிட்டிருந்தோம்... படையப்பா படத்துல நடிக்கிறதுக்கு ஆள் கேட்டாங்க ­­­வாங்க'னு ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கார். சினிமாவுல நாம வியந்து பாக்குற ஆளுகளையெல்லாம் லெஃப்ட்ல டீல் பண்றவர்மாதிரி அந்தாளு பேச்சு அம்புட்டு கெத்தா இருந்துருக்கு. ஸ்டூடியோ வெளிவாசல்வரைக்கும் போனவர் என்ன யோசிச்சாரோ, தம்பி உங்க செயினு மோதிரத்தைப் பார்த்தா வசதியானவர்னு வாய்ப்புக் குடுக்க யோசிப்பாங்க. கழட்டி இந்தப் பேப்பர்ல மடிச்சு பாக்கெட்ல பத்திரமா வெச்சுக்கங்க'னு சொல்லவும் 'இதுவும் சரித்தேன்'னு கழட்டிக் குடுத்து,  அதை வாங்கி பேன்ட் பாக்கெட்டுக்குள்ள வெச்சுருக்கார். இங்கேயே இருங்க தம்பி... இன்னொருத்தர் வர்றாராம். அவரையும் போய்க் கையோட கூட்டியாந்தர்றேன்'னு சொல்லிப்புட்டுக் கெளம்பிப்போனவர் போனது போனதுதான். 

ரெண்டு மணி நேரம் ஆகிருக்கு... மூணு மணிநேரம் ஆகிருக்கு... ம்ஹூம். அந்த ஆள் வந்தபாடு இல்ல. அவர் வராம இந்த வாட்ச்மேனும் உள்ள விடமாட்டாப்ள. ரைட்டு கெளம்புவோம்னு வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் பாக்கெட்ல மடிச்சு வெச்ச செயினையும் மோதிரத்தையும் போடலாம்னு எடுத்தா மடிச்சுவெச்ச பேப்பருக்குள்ள ரெண்டு சின்ன செங்கக்கட்டிக இருந்துருக்கு. 'மாயமில்லே... மந்திரமில்லே' கணக்கா முழிச்சகண்ணுலயே நாலு லோடு மண்ணைத் தூவி தங்கத்தை அடிச்சிட்டுப் போயிருக்காய்ங்க. இனிமே, யாரையும் நம்பி இந்த ஊர்ல எதுவும் பண்ணக்கூடாதுனு பாடத்தையும் படிச்சிப்புட்டு பொத்துனாப்ள உக்காந்து அழுதிருக்கார். தொலைச்சவனுக்குத் தானே உழைப்போட வலி தெரியும். 

அப்புறம், ராஜ் டி.வி யில 'ஊர்வம்பு'ங்கிற நிகழ்ச்சிக்கு வாய்ப்புக் கேட்டுப் போயிருக்கார். நம்ம ஊர்ப்பக்கம் அந்திசாய்ஞ்ச நேரத்துல வீட்டு வாசல்ல உக்காந்து பொரளி பேசுற புள்ளைக மாதிரி ஊர்வம்பு பேசுற நிகழ்ச்சி அது. புள்ளைக பேசுற நிகழ்ச்சியில நாம போயி என்ன பண்றதுன்னு யோசிச்சி, அரசியல் நையாண்டி, வடிவேலு - பார்த்திபன் மாதிரி குண்டக்க மண்டக்கனு காமெடி ட்ராக் எழுதி நடிச்சிருக்காப்ள. கிட்டத்தட்ட 175 எபிசோடுகள்ல பட்டையைக் கெளப்புனவரு படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே நடிப்பையும் நல்லாத் தெரிஞ்சிக்கிட்டாரு. அதுக்கப்புறம், கஸ்தூரி ராஜா, 'காதல் ஜாதி'ங்கிற படத்துக்கு நடிக்கக் கூப்பிட்டிருக்கார். யாரு வெச்ச செய்வெனையோ இவரு பாட்டுப் பாடுன அந்தப் படம் ரிலீஸாகவே இல்ல. அடுத்து 2002-ல 'கலகலப்பு'னு ஒரு படத்துல காமெடி வில்லன் ரோல்ல நடிச்சிருக்காப்ள. அதுதான் நம்மாளுக்கு அறிமுகப் படம். 

'தவசி' படத்துல நடிச்சிக்கிட்டு இருக்கும்போது வடிவேலுக்கு கால்ல அடிபட்டதால ஷூட்டிங்குக்கு வர முடியல. அந்த நேரத்துல இவரைப் பத்திக் கேள்விப்பட்டவுக வடிவேலு வரமுடியாமப்போன காட்சிகளுக்கு இவர டூப்பா நடிச்சுத் தரச்சொல்ல, அது நமக்குச் சரியா வராதுனு விலகிட்டாப்ள. வடிவேலு டூப் விவகாரம் ஒரு தனிப் பஞ்சாயத்து. அப்புறம் நடிகர் சங்கிலிமுருகனைப் பார்த்துப் பேசினவர் கமலுக்கு அசிஸ்டென்டா விருமாண்டி படத்துல சேந்துட்டார். கமலோட சேர்ந்து நடிச்ச காலத்துல, கமல் இவருக்கு சினிமாவுல பல கண்களைத் தொறந்து விட்ருக்காரு. ஆலமரத்தடியில புல்லு மொளைக்காதும்பாங்க... ஆனா, தன்னைச் சுத்தி இருக்குறவங்களுக்கு நிழல் கொடுக்கும்ல.  

"நான் ஆரம்பகாலத்துல மைக்கைப் புடிச்சுப் பாடுனதால எல்லாப் படத்துலயும், மைக்கோட பாடுற பாட்டை வெச்சுக் கொடுமைப் படுத்துனாய்ங்க. ரொம்பகாலமா கூடவே வெச்சிருந்த மைக்கை மோகன் வந்து ஒருவழியா வாங்கிட்டுப் போயிட்டார். நீயும் ஜிம்னாஸ்டிக் தெரியுமேனு இப்ப பல்டி அடிக்க ஆரம்பிச்சா ரிட்டயர்டு ஆகுறவரைக்கும் பல்டி அடிச்சிக்கிட்டேதான் கெடக்கணும்."  

                             - கமல்ஹாசன்  'காதல்' சுகுமாரிடம் சொன்னது...

இவரு கமல் கூட இருக்கும்போதே பிரமாண்ட ஷங்கர் ஆபிஸ்ல இருந்து 'காதல்'ங்கிற படத்துல நடிக்கக் கூப்புட்றாக. 'பாய்ஸ்' படத்துல நடிச்ச மணிகண்டன்தான் அந்தப் படத்துல ஹீரோவா நடிக்கிறதா இருந்துருக்கு. காமெடி வேசத்துக்கு மதுர வட்டாரமொழியில பேசுற இவரை நடிக்கக் கேட்டுட்டு, அப்படியே சேந்தாப்ல ஹீரோ மணிகண்டனுக்கும் மதுர நடையைச் சொல்லித்தரச் சொல்லிருக்காக. டிபிக்கல் சென்னைக்காரரான மணிகண்டனுக்கு மதுர பாஷை சுட்டுப்போட்டாலும் செட்டாவல. சொல்லிக்குடுத்த நம்மாளுக்கு மெட்ராஸ் பாஷை வந்துருச்சு. மணிகண்டனுக்கு மதுர ஸ்லாங்கு கடைசிவரைக்கும் வரல. அப்புறம் அவரத் தூக்கிப்புட்டு அந்த எடத்துல பரத் நடிச்சது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயந்தேன். 

ஆறு மாசங் கழிச்சு, கமலோட 'சிறுக்கி சிரிச்சி வந்தா சீனாதானா டோய்...' பாட்டு ஷூட்டிங்ல பிஸியா இருக்கும்போது, 'காதல் பட ஷூட்டிங் இருக்கு... நாளைக்கு மதுரக்கி வந்துருங்க'னு போன் வந்துருக்கு. 'என்னய்யா முன்னபின்னச் சொல்லாம பொசுக்குனு கூப்பிடுறீக'னு யோசிச்சவரு, கமல் போகச் சொல்லவும் நைட்டோட நைட்டா பஸ் ஏறிட்டாரு. போய் எறங்குனதூம், மொத சீனுலயே கதாநாயகி சந்தியா வண்டியக் கொண்டாந்து குறுக்கால விடுறத காட்சியத்தேன் எடுத்துருக்காக. யதார்த்தமான காட்சி, இயல்பான நடிப்பு... நல்லா அமைஞ்சிரும்னு பூரிச்சுப் போனவர் முழுப்படத்தையும் திருப்தியா நடிச்சுக் கொடுத்திருக்கார். 

அதுவரைக்கும் ஆயிரத்துக்கும், ரெண்டாயிரத்துக்கும் கஷ்டப்பட்டவருக்கு காதல் படம் வெளிவந்ததுக்கு அப்புறம் பத்துப் படங்களுக்கும் மேல நடிக்கச் சொல்லி அஞ்சு லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்துருக்காக. திக்குமுக்காடிப் போனவரு பாலாஜி சக்திவேலைத் தேடிப்போய் 'என்னை எப்படிண்ணே தேடிப்பிடிச்சீங்க'னு கேட்க, 'உன் பேச்சுல மணக்குற மதுர வாசத்தோட சிரிப்பும், சோகமும் ஒண்னாத் தெரிஞ்சது. உனக்கே தெரியாம அந்தச் சோகத்தை வெளியே கொண்டுவரணும்னு நெனச்சேன். படம் முழுக்க உன்னோட பரிதவிப்பு அதை முழுசா கொண்டுவந்துடுச்சு'னு சொல்லியிருக்கார். 'வேறென்னணே... கண்ணுமுன்னாடி பாத்து வளந்த வறும கண்ணுல சோகமாத் தெரியுது'னு சொல்லிட்டுத் திரும்பியிருக்கார் நம்மாளு.

"மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை; வெற்றியில் தான் இருக்கிறது!"

                                                                                                                        - ராக்ஃபெல்லர்

'ஒருநாள் ஒரு கனவு' படத்துல 'காதல் சுகுமார்'ங்கிற பேர்ல நடிச்சவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புக் கிடைச்சுது. காமெடி நடிகரா நல்ல நிலைமையில இருக்கும்போது அவுக அப்பாவப் பாக்க ஊருக்குப் போயிருக்கார். 'நீ நல்ல க்ரியேட்டருய்யா... நடிகனா இருந்தீனா நம்ம குடும்பம் மட்டும் நல்லாருக்கும். டைரக்டராகிட்டா உன்னால நூறு குடும்பம் நல்லாருக்கும்'னு சொன்னதும், அரைகுறையா ஆரம்பிக்கக் கூடாதுனு லண்டனுக்குப் போய் ஒன்றரை வருசம் சினிமாப்படிப்பு படிச்சிட்டு வந்திருக்கார். இங்கே வந்து 'திருக்குரல்'னு படம் எடுக்க ஆரம்பிக்க, அதுக்கும் குறுக்கால கட்ட விழுந்திச்சு. அதைக் கிடப்புல போட்டுட்டு அப்புறம் எடுத்த 'திருட்டு வி.சி.டி' படம்  சுமாராகப் போச்சு. 'சும்மாவே ஆடுவோம்'னு இன்னொரு படமும் எடுத்தவர் இப்ப '9 கிரகங்களிலும் உச்சம் பெற்றவன்' பட வேலைல இறங்கியிருக்கார். ஒருபக்கம் நடிப்பு, மறுபக்கம் டைரக்‌ஷன்னு இந்த அலங்காநல்லூர்க் காளை களத்துல நின்னு விளையாடுது..!

அடுத்தடுத்த வெற்றிக்கான ஃபார்முலாவே தோல்வியிலதான இருக்கு. இதுல சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன..? அடிச்சு ஆடுவோம்!

- இன்னும் ஓடலாம்...