Published:Updated:

‘பாலுமகேந்திராவின் கடிதத்தால் சென்னைக்கு வந்தேன்..’ - சுகா : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 11

‘பாலுமகேந்திராவின் கடிதத்தால் சென்னைக்கு வந்தேன்..’ - சுகா : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 11
‘பாலுமகேந்திராவின் கடிதத்தால் சென்னைக்கு வந்தேன்..’ - சுகா : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 11

தாமிரபரணிக் கரையில் இருந்து கோடம்பாக்கத்துக் கனவோடு கிளம்பியவர் அவர். பள்ளி இறுதி நாட்களில் 'கமல்’ ரசிகராக இருந்தவர். 'வீட்டுப் பாடம்லாம் செய்வேளா, எப்பிடிடே?’ என டிக்கெட் கிழிப்பவர் கேட்கும் அளவுக்கு ராயல் டாக்கீஸில் 'தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் மீண்டும் மீண்டும் பார்த்தவர். படப்பெட்டி வருவதற்கு முன்பே தியேட்டர் வாசலில் தவமாகக் காத்துக்கிடக்கும் கூட்டத்தில் ஒருத்தர். நண்பனின் காதலுக்காக அப்புறமாய் ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்ததெல்லாம் தனிக்கதை. 

திருநெல்வேலி செல்வம் தியேட்டரில் 'அழியாத கோலங்கள்' படத்தைப் பலவருடங்கள் கழித்துப் பார்த்ததுதான் சினிமாவை நோக்கி ஆளைத் தள்ளி இருக்கிறது. அதுவரை பார்த்துப் பார்த்துப் பழகிய சினிமாவாக அது இல்லை. வண்ணதாசனின் கதைகளைப் போல... 'ராஜி கட்டியிருந்தது ஒரு கருநீலப் புடவை. சந்திரா சொல்வது மாதிரி சொன்னால், 'நவ்வாப் பழக் கலர்.' புடவை முழுவதும் வளையம் வளையமாகக்கிடக்கிறது. கோயில் வாசல் வளையல் கடையில் இருந்து எல்லா வளையல்களும் உருண்டு உருண்டு வந்து, ஒன்றின் மேல் ஒன்றாக மண்டபத் தரையில் சுழன்றன. வளையல்களுக்கு உயிர் இருப்பதுபோலவும் ஒவ்வொரு வெவ்வேறு நிற வளையலும், குவியலுக்குள் புதைந்து, இன்னொரு புதிய நிறத்தோடு வெளியே வருவதும் நன்றாகத்தானே இருக்கும். ஸ்டூலில் நிற்கிற ராஜியின் புடவையில் இருந்து எந்த விநாடியிலும் அப்படி ஒன்றிரண்டு வளையல்கள் உருண்டு கீழே வரக்கூடும்...' என்பது போலக் கதையே சொல்லாமல் நெஞ்சைப் போட்டு நெருக்கியிருக்கிறது 'அழியாக் கோலங்கள்' படம். 

அதன்பிறகு பார்த்த 'யாத்ரா' என்றொரு மலையாளப் படத்தின் மூலம் பாலுமகேந்திரா என்னும் பெயர் இன்னும் அழுத்தமாக மனதில் பதிகிறது. பிறகு, 'ஓளங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம்' என பாலுமகேந்திராவின் பல படங்களைப் பார்த்திருக்கிறார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு எந்த எதிர்கால நோக்கமும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில் 'வண்ண வண்ணப் பூக்கள்' படம் பார்த்திருக்கிறார். அதுவரை தோன்றாத 'சினிமாவுக்குப் போனால் என்ன?' என்ற எண்ணமும் அப்போதே தோன்றியிருக்கிறது. பாலுமகேந்திராவுக்குக் கடிதம் எழுதுகிறார்... நான்கைந்து முறை கடிதங்கள் பரிமாற்றத்தோடு, ஒரு கடிதத்தில் 'கிளம்பி வாடா' என அவர் சொல்ல, சுகா அண்ணன் கிளம்பியிருக்கிறார் சென்னைக்கு.

திருநெல்வேலி போன்ற சிறு நகரத்திலிருந்து சென்னைக்கு வந்தவருக்கு, நகரத்தின் பிரமாண்டத்தையும், சினிமா எனும் மாய உலகத்தையும் கண்டு மிரண்டுவிடாமல் மனம் முழுக்க வியாபித்திருந்த தாழ்வு மனப்பான்மைகளை மயிலிறகால் வருடி அகற்றியிருக்கிறார் பாலுமகேந்திரா. சினிமாவில் இருப்பவர்கள் கக்கூசுக்கே காரில்தான் போவார்கள் என்பனபோன்ற பாமரத்தனமான எண்ணங்கள் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தபின்புதான் இவருக்கு மறைந்திருக்கின்றன. பாலுமகேந்திரா எனும் மலையுச்சியை அடைந்தபின்பு போக என்ன இருக்கிறது..? பாலா, ராம், வெற்றிமாறன், நா.முத்துக்குமார், மீரா கதிரவன், சீனு ராமசாமி எனப் பலரோடு சேர்ந்து அவரிடம் சினிமாப்பாடங்கள் கற்றுக்கொண்டார்.

   "அறிவின்மைக்குத்தான் வருத்தப்படணும்; வாய்ப்பின்மைக்கு இல்லை.

    Beggars can't be choosers''

                                                            - பாலுமகேந்திரா. 


 மனம் முழுதும் கற்பனையையும் தாங்கள் வடிவமைத்த ஏராளமான கதாபாத்திரங்களையும் சுமந்தபடி சென்னைக்கு உதவி இயக்குநர் கனவோடு வந்து இறங்குகிற இளைஞர்களை முதலில் முகத்தில் அறைந்து வரவேற்பது, 'இவ்ளோ பெரிய மெட்ராஸ்ல எங்கே தங்கப்போற?’ என்ற கேள்விதான். எங்கெங்கோ பிறந்தவர்கள் சென்னையில் தங்களுக்கு என்று ஒரு கூரை கிடைக்க எதிர்கொள்ளும் போராட்டம் கொடுமையானது. இந்தத் தொடர் போராட்டம் தரும் நெஞ்சுரம்தான், பிற்காலத்தில் இந்த இளைஞர்களைப் படைப்பாளிகளாக, ஒப்பற்ற கலைஞர்களாக உயர்த்துகிறது எனச் சொல்லி மனதைத் தேற்றிக் கொள்ளலாம். மேன்ஷன் வாழ்க்கையைத் தாண்டி ஓரளவு வசதியாக ஒரு வீடு எடுத்துத் தங்கிக்கொள்ள முடிவு எடுத்த பின், உதவி இயக்குநர்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஹவுஸ் ஓனரும், அவர்களை 'ஏன்டா இந்த சினிமாவுக்கு வந்தோம்?’ என்று எளிதாக நினைக்க வைப்பார்களாம்.

'ஐயா மகனே, இவனுக சினிமாக்காரங்களுக்கு நாட்டைக் குடுப்பானுக. ஆனா, குடியிருக்க வீட்டக் குடுக்க மாட்டானுக. இந்தக் கொடுமைக்குள்ளதான் நாமளும் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். என்ன பண்ணச் சொல்றிய?’ என மனம் வெதும்பிப்போன ஒரு தருணத்தில் சீமான் இவரிடம் சொல்லியிருக்கிறார். 'நாமளும் ஒருநாள் அப்படி வளர்ந்து, இதே ஏரியாவுல பெரிய பில்டிங் கட்டி வாடகைக்கு விடுவோம். அதுவும் அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு மட்டும் குறைஞ்ச வாடகைல.’ என மற்றொரு நண்பர் மன உறுதியோடு உற்சாகப்படுத்துவாராம். மாநகர வாழ்க்கையில் தாக்குப்பிடிக்க முடியாமல் கிட்டத்தட்ட செங்கல்பட்டில் இருந்தெல்லாம் உதவி இயக்குநர்கள் படப்பிடிப்புக்கு வந்துபோவார்களாம். 'மாப்ளே, இதுக்கு நீ பேசாம புதுக்கோட்டைலயே இருந்துருடா. நாங்க மிஸ்டுகால் குடுத்தா, கௌம்பி வா. என்ன சொல்றே?’ என புதுக்கோட்டையில் இருந்து வந்திருக்கும் உதவி இயக்குநரைக் கலாய்ப்பது என வாழ்க்கையின் ஒவ்வொரு சிரமமான கட்டத்தையும் இப்படி நகைச்சுவையுடனே தினந்தினம் கடந்திருக்கிறார்கள்.

பாலுமகேந்திராவின் அருகிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக, சாலிகிராமத்திலேயே வீடு தேடி இருக்கிறார் சுகா அண்ணன். அப்போது படும் சிரமங்களை நினைத்து ஊருக்கே போய்விடலாம் என்றுகூட எண்ணம் தோன்றுமாம். ஃபேமிலிமேன், வெஜிடேரியன் என வீடு தேடுவதற்கான இரு அடிப்படைத் தகுதிகள்(!) இருந்தாலும், 'சினிமாவுல இருக்குறவங்களுக்கு வீடு கொடுக்குறதில்லை. இது எங்க பாலிஸி' என ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிடுவார்களாம். 'அதென்ன சார்... பெரிய இன்சூரன்ஸ் பாலிசி... தியேட்டர்லயும், டி.வி-லயும் தினமும் நீங்களும் சினிமாதான பார்க்குறீங்க...' எனக் கேட்டால் 'அது வேற இது வேற...' என ஒருமாதிரி பேசிக்கொண்டே நாய் கழுத்தில் உள்ள சங்கிலியை அவிழ்க்க முனைவார்களாம். இன்னொரு வீடு பார்க்கச் செல்லும்போது, முன் அனுபவங்கள் கொடுத்த படிப்பினைகளால் 'அட்வர்டைஸிங் கம்பெனியில் வொர்க் பண்றேன்' எனச் சொல்லியிருக்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு வீடு கொடுக்கச் சம்மதித்திருக்கிறார் ஓனர். நடிகர் ஆர்யா ஒருமுறை இவரைப் பார்க்க வந்துபோன விவகாரத்தில் அந்தக் குட்டும் வெளிப்பட்டிருக்கிறது.

சென்னைக்குப் புதிதாக வரும் இளைஞர்களை ஆரம்பத்தில் மிரட்டும் ஆங்கிலம் இவரையும் மிரட்டியிருக்கிறது. அதுவும் சினிமாத்துறையில் இருப்பவர்கள் தும்மினாலும் ஆங்கிலத்தில்தான் தும்முவார்கள். ஒரு சினிமாகூட எடுத்துவிடலாம். அதைவிடக் கடினமானது, அதன் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி வாய்ப்பு வாங்குவது. சினிமா பாஷையிலேயே சொல்வதாக இருந்தால், 'கதையை ஓ.கே பண்ணுவது’. அப்படி ஓ.கே செய்யப்பட்ட கதைகள் படமாகுமா என்பது அடுத்த கேள்வி.

பாலுமகேந்திராவிடம் இருந்து வந்த பின்னர், தனியாக ஒரு படம் இயக்க வாய்ப்பு தேடி அலைந்த சமயம். முதன்முதலில், ஆந்திரா கிளப்பில் இருந்த ஒரு ஃபைனான்ஸியரிடம் அவரது நண்பரும் எடிட்டருமான பீட்டர் ஃபாபியா அழைத்துச் சென்றிருக்கிறார். வீடியோவில் இயக்குநர் ஸ்ரீதரின் 'தில் ஏக் மந்திர்’ ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது. 'மொதல்ல டீ... அப்புறம் ஸ்டோரி’ என்றிருக்கிறார் ஃபைனான்சியர். டீ வந்து குடிக்கும் வரை மனதுக்குள் மீண்டும் ஒருமுறை கதையைச் சொல்லிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் சுகா அண்ணன். டீ குடித்து முடிக்கவும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, 'இப்போ ஸ்டார்ட் பண்ணலாமா சார்?’ என ஃபைனான்சியர் கேட்டதும் 'யெஸ் சார்’ என்று நிமிர்ந்து உட்கார்ந்து தயாராகியிருக்கிறார். 

காலை டிபன், மதிய உணவு, மாலை டீ, பிஸ்கட் என அன்றைய பொழுது முழுதும் அவருடனேயே கழிய, ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் மூன்று கதைகள். மூன்றாம் கதை முடியும்போது, இரவு 7 மணி. 'எப்படி சார் இருந்தது?’ என்று கேட்டிருக்கிறார் ஃபைனான்சியர். (ப்ரூஃப் மிஸ்டேக் எல்லாம் இல்லை.) காரணம், மூன்று கதைகளையும் சொன்னது அந்த ஃபைனான்சியர்தான். 'சூப்பர் சார்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டு சுகா அண்ணன், நண்பர் பீட்டர் ஃபாபியாவைத் தேட, கைகளுக்குச் சிக்காமல் தடதடவென மாடிப் படிகளில் இறங்கி ஓடியிருக்கிறார் அவர். கதை சொல்லும் அனுபவத்தின் முதல் முயற்சியில் கதையே சொல்ல முடியாத சோகம் அரங்கேறியிருக்கிறது.

செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகத் தொடர்ந்து பல தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்றிருக்கிறார் பீட்டர். அடுத்து, ஒரு வெள்ளிவிழா தயாரிப்பாளரிடம் கதை சொல்லல் நிகழ்வு. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் அவர். ரொம்ப மரியாதையாக நடந்துகொண்டவர், 'நீங்க என்ன மாதிரி கதை சொல்லுவீங்க தம்பி?’ என்று கேட்டிருக்கிறார். 'என்ன மாதிரி கதை... ஆங்...' என யோசித்த சுகா அண்ணன், தனது முதல் கதை சொல்லும் அனுபவத்தையே சொல்லியிருக்கிறார். விழுந்து விழுந்து சிரித்தவர், கதை சொல்லத் தொடங்குவதற்கு முன்பு, 'தம்பி, இப்போ நான் படம் எடுக்கிறது இல்ல. நீங்க சொல்லப்போற கதை எனக்குப் பிடிச்சாலும், என்னால எதுவும் செய்ய முடியாது. டைம் வேஸ்ட்டுன்னு நெனச்சீங்கன்னா, நீங்க சொல்லாமயே தவிர்க்கலாம்.’ என கேப்ஷன் போட்டிருக்கிறார்.  'உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்குங்க...' என முடிவெடுத்துக் கதையைச் சொல்லியிருக்கிறார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பிறகு, யாரிடம்தான் கதை சொல்லிப் பழகுவதாம்?

இன்னொரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல நேரம் கேட்டபோது, காலை 9 மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார். பரவாயில்லை என எட்டே முக்காலுக்கே போனவருக்கு, ஆபிஸ் பாய் ஒரு தினசரியை வாசிக்கக் கொடுத்து காத்திருக்கச் சொல்லியிருக்கிறார். வரி விளம்பரம் உள்பட அனைத்தையும் வரிவிடாமல் படித்துவிட்டுப் பசி மயக்கத்தில் சோர்ந்திருந்த நேரத்தில் அழைத்திருக்கிறார். போய் அமர்ந்ததும், 'ம்ம்ம், சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு, ஆபீஸ் பாய் கொண்டு வந்து வைத்த அன்றைய தினத்தந்தியைப் பிரித்து முகத்தை மறைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டாராம். 'ரைட்டு' என அப்படியே இவரும் கிளம்பி வந்திருக்கிறார்.

தொடர் கதைசொல்லும் படலத்தால் மனம் வெறுத்துப் போயிருந்த நேரத்தில் இன்னொரு வாய்ப்பு வந்திருக்கிறது. முன்பு நடந்தவை போல இப்போதும் சோதனைகள் நிகழக்கூடாது என வேண்டிக்கொண்டே தொழிலதிபர் ஒருவரிடம் கதை சொல்லப் போயிருக்கிறார். 'சினிமா எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னு வைங்க. அதுல இருக்கிற வெவரமான ஆட்கள்கூட சேர்ந்துக்கிட்டுதான் எடுக்கணும்.' எனச் சொன்னவர் அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு திருக்குறளையும் சொல்லியிருக்கிறார். இப்போதுதான் நம்மாளுக்கு முழுத் தெம்பும் வந்திருக்கிறது. 

'சினிமால எத்தனையோ டிபார்ட்மென்ட் இருக்கு. ஆனா, நான் கொஞ்சம் வித்தியாசமானவன். எப்போதுமே ஒரு படத்தோட எடிட்டிங்கைத்தான் உன்னிப்பா கவனிப்பேன்’ என்றிருக்கிறார். தொழிலதிபரின் சினிமா ரசனை ஆச்சர்யப்படுத்தியதில், 'ச்சே... நாம மொதல்ல இவரை மீட் பண்ணியிருக்கணும்' என மனதில் நினைத்துக்கொண்டே, 'எடிட்டர்ல உங்களுக்கு யாரை சார் ரொம்பப் பிடிக்கும்?’ என்று கேட்டிருக்கிறார். சற்றும் யோசிக்காமல் அந்தத் தொழிலதிபர் சொன்னது...  'வேற யாரு? தோட்டாதரணிதான்!'

இப்படியாகப் பல நிகழ்வுகளுடன், ஒருவழியாக கதை ஓகே ஆகி 'படித்துறை' படம் இயக்கினார். சிலபல காரணங்களால் அந்தப்படம் வெளியாகவில்லை. இப்போது அடுத்த பட வேலைகளில் சுகா அண்ணன் பிஸி. பல வருடங்களாக இணை இயக்குநராகவே திரையில் ஒளிர்ந்த பெயர் இயக்குநராக டைட்டில் கார்டில் மின்னும் படம் விரைவில் வரப்போகிறது. கோடம்பாக்கத்தின் கனவுக் கதவு திறக்கக் காத்திருப்பவர்கள் மட்டுமே வெற்றிக்கோட்டை எட்டுகிறார்கள். பாதியில், தடுமாறுபவர்களைக் காலமும், வெளியே தள்ளிக் கதவைச் சாத்திவிடுகிறது. சுகா அண்ணன் இவற்றில் முதலாவது. எப்போதும் எழுதப்படுவதும், நினைவுகொள்ளப்படுவதும் முதலாவது வகையினரின் கதைகள்தாம்...  

இன்னும் ஓடலாம்...