Published:Updated:

பாண்டியராஜனின் முதல் க்ளாப்பின்போது என்ன நடந்ததாம்? - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part -12

பாண்டியராஜனின் முதல் க்ளாப்பின்போது என்ன நடந்ததாம்? - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part -12

பாண்டியராஜனின் முதல் க்ளாப்பின்போது என்ன நடந்ததாம்? - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part -12

பாண்டியராஜனின் முதல் க்ளாப்பின்போது என்ன நடந்ததாம்? - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part -12

பாண்டியராஜனின் முதல் க்ளாப்பின்போது என்ன நடந்ததாம்? - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part -12

Published:Updated:
பாண்டியராஜனின் முதல் க்ளாப்பின்போது என்ன நடந்ததாம்? - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part -12

திருட்டு முழி... எவரும் அத்தனை எளிதாக அலட்சியப்படுத்திவிடக்கூடிய சிறிய உருவம்... தமிழ் சினிமா கட்டமைத்திருந்த கதாநாயகனுக்கான பிம்பம் எதுவுமில்லாமல் கதாநாயகனாக வெற்றியடைந்தவர் பாண்டியராஜன். பல்லவன் பஸ் டிரைவராகப் பணியாற்றிய தந்தை இவர் வயலின் கற்றுக்கொள்வதற்காக இசை வகுப்புக்கு அனுப்பினார். வயலின் வாசிக்க மேடையேறியவர், பின்னாட்களில் பாடல்களுக்கு இசையமைத்தார், பாடல் பாடினார், வெற்றிப் படங்களை இயக்கினார், படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் பாவம், குள்ளமான அவர் தொட்ட உயரத்தைப் பார்க்க அவரது தந்தை இல்லை.  

ஆறாம் வகுப்பு படிக்கும்போது நாடகங்களில் நடித்தவருக்கு நடிப்பு மீது அலாதி ஆர்வம். நாடகங்களுக்காக மேக்கப் போடுவதே அப்போது போதையாகியிருக்கிறது. அதுதான் சினிமாத் தீக்குச்சிக்கான பொறி. மேக்கப் போட்டு நாடகம் முடிந்ததும் அவற்றை வேண்டுமென்றே சரியாகக் கலைக்காமல் அடுத்தநாள் பள்ளிக்குச் செல்வாராம். பள்ளிக்கூட நண்பர்கள் பார்த்து என்னவெனக் கேட்டால், தான் நடித்ததைச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் அப்படி ஒரு ஐடியாவாம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போதெல்லாம் சினிமாவை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு திரையில் வருபவர்களை மட்டுமே தெரியும். நடிப்பு மட்டும்தான் சினிமா எனப் பலரும் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. நடிப்பதற்காகத்தான் ஊர்களில் இருந்து ஆட்கள் கிளம்பி வருவார்கள். இங்கே வந்து 'பட்டு'த் தெளிந்தபின்புதான் சினிமாவில் திரைக்குப் பின்னால் இத்தனை துறைகள் இருப்பதே தெரியவரும். இவரும் அப்படித்தான் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற எண்ணத்தோடு கோடம்பாக்க வாசலில் வலதுகால் வைத்திருக்கிறார். சென்னைதான் சொந்த ஊர் எனும்போது, பிறகென்ன கவலை... நினைத்தபோதெல்லாம் சினிமா கம்பெனிக்குப் போய் வாய்ப்புக் கேட்கலாம் என நினைத்தவருக்கு, ஸ்டூடியோ கேட்டுக்குள்ளேயே அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பிறகுதான் நமக்கு முன்னே அங்கே ஒரு பெருங்கூட்டம் இருக்கிற யதார்த்தம் புரிந்திருக்கிறது. 

அப்போது யானைக்கொடி கட்டிப் பறந்த தேவர் பிலிம்ஸில் வாய்ப்புக் கேட்க தினமும் நூற்றுக்கணக்கானோர் தவம் கிடப்பார்களாம். பாண்டியராஜனும் நூறில் ஒருவராக நடிக்க வாய்ப்புத்தேடிப் போயிருக்கிறார். அதிலும் நடிக்க வாய்ப்புக் கேட்பவர்கள் நல்ல கலராக, ஆஜானுபாகுவான உடலமைப்போடு, கர்லிங் ஸ்டைல் தலையோடு இருப்பார்கள். இவர்களுக்கு மத்தியில் நாம் வாய்ப்புக் கேட்பதும், சாவி போடாத வண்டியில் கிக்கரை உதைத்துக் கொண்டிருப்பதும் ஒன்றுதான் என உணர்ந்தவருக்கு உதவி இயக்குநர் என்கிற பதம் ஒன்று சினிமா உலகில் இருப்பது தெரிந்திருக்கிறது. 'அசிஸ்டென்ட் டைரக்டர்' - பேர்லேயே டைரக்டர் இருக்கு... நல்ல வேலைதான்... படத்தில் டைரக்டருக்கு அடுத்த லெவல் போல... எனச் சமாதானமும் சந்தோஷமும் ஒருசேர அசிஸ்டென்ட் டைரக்டர் ஆவதற்கான அட்டெம்ட்டுகளைச் செய்திருக்கிறார். 

தினமும் தேவர் பிலிம்ஸுக்குப் போனவரை ஒருநாள் பார்த்த தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா தூயவன், 'என்ன உன்னைய அடிக்கடி இங்க பார்க்குறேனே.. 'எனக் கேட்டிருக்கிறார். 'இதோட 118 முறை வந்துருக்கேன்' என டைரியில் ஒவ்வொரு முறை வந்ததையும் எழுதி வைத்திருந்ததைக் காட்ட, இவரது கையெழுத்து பிடித்துப்போனவர், இவரை காப்பி ரைட்டர் வேலைக்குச் சேர்த்துக்கொண்டு அவரது அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார். அடுத்தநாள் முதல் தினமும் போனவருக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் தூயவனைப் பார்க்க முடிந்திருக்கிறது. அதுவரை அவர் அந்த ஆபிஸுக்கே வரவில்லையாம். வந்த முதல்நாளே காபி வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். 'காப்பி ரைட்டர் வேலைன்னா இதுவாதான் இருக்குமோ...' எனச் சந்தேகத்தோடு அதையும் செய்திருக்கிறார் பாண்டியராஜன். 

"சினிமாவுக்கு நீங்க வர ஆசைப்பட்டா, முதல் விஷயம் , 'ஏமாறத் தயாரா இருங்க’னு சொல்வேன். ஏன்னா, இது ஆபத்தை நோக்கிப் போற சாகசப் பயணம். அதே சமயம் நம்ம இலக்குக்குப் போய்ச் சேர்ற வரை நாம ஓயக் கூடாது."

                                                                                         - ஆர்.பாண்டியராஜன் 

அந்தக் காலகட்டத்தில், கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தைப் பார்த்ததும் மண்டையில் ஸ்பார்க் தோன்றியிருக்கிறது. வீட்டுக்கு எதிர்ல உட்கார்ந்து போற வர்ற புள்ளைகளை சைட் அடிக்கும் காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு, 'யதார்த்தமாகப் படங்கள் எடுக்கிற இவர்கிட்ட தான் அசிஸ்டென்ட்டா சேரணும்' எனக் கங்கணம் கட்டியிருக்கிறார். ஒரு நாள் வசனகர்த்தா தூயவன் இவரை அழைத்து, 'பாண்டியா நாளைக்கு ஆபீஸுக்கு, நாம தயாரிக்கப் போற 'விடியும் வரை காத்திரு' பட டிஸ்கஷனுக்காக பாக்யராஜ் வர்றாரு. அவரை நல்லா கவனிச்சுக்கணும். அவர் எது கேட்டாலும் வாங்கிக் கொடு' என்று அவர் சொன்னது முதல் கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டாராம்.

தினமும் டிஸ்கஷன் டீமுக்கு டிபன் வாங்கிக் கொடுப்பதுதான் அவர் வேலை. டிபன் கொடுத்து முடித்ததும் கதவைச் சாத்திக்கொள்வார்களாம். டிஸ்கஷனில் எப்படிக் கதை விவாதம் செய்வார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, டிபன் கொடுத்து முடித்ததும் கதவை முழுவதுமாகச் சாத்தாமல் சின்ன இடைவெளி இருக்குமாறு சாத்திவிட்டு வந்துவிடுவாராம். அதற்கு அப்புறம் அந்தக் கதவு இடுக்கில் ஒட்டுக்கேட்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தே 'விடியும் வரை காத்திரு' படத்தின் மொத்தக் கதையையும் தெரிந்துகொண்டாராம். இப்படி, கதவு இடுக்கில் பார்த்துப் பார்த்து, எப்படியாவது அதே டிஸ்கஷன் ரூம்ல நாமளும் உட்காரணும்கற வைராக்கியமும் நாளுக்கு நாள் அதிகமாகியிருக்கிறது. 

டிஸ்கஷன் முடிந்து ஷூட்டிங் தொடங்கியதும், பாக்யராஜிடம் சென்று உதவிக்கு சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டிருக்கிறார். 'ஏற்கெனவே ஆள் நிறைய இருக்காங்க...' எனச் சொல்லிவிட்டாராம் பாக்யராஜ். பிறகு ஒருமுறை பாக்யராஜின் அசோஸியேட் ஒருவர், இவரை சிபாரிசு செய்தும், வேண்டாமெனச் சொல்லியிருக்கிறார். இத்தனை முறை முயற்சித்துத் தோல்வியைத் தழுவினாலும், மானசீகமாக பாக்யராஜையே குருவாக ஏற்றுக்கொண்டதால் வேறு யாரிடமும் அசிஸ்டென்ட்டாகச் சேர விரும்பவில்லையாம். அஸோசியேட் இயக்குநர் கோகுலகிருஷ்ணா வேறு படம் எடுக்கச் செல்லவும், உதவி இயக்குநர் இணை இயக்குநர்களாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இப்போது க்ளாப் அடிக்க ஒரு ஆள் தேவைப்பட்டது. அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கும் கொஞ்சம் கூடக் கூச்சப்படாமல் காபி, டீ வாங்கிக்கொடுத்து கரெக்ட் செய்திருந்ததால் அவர்கள் தயவில் க்ளாப் அடிக்கும் வேலையைப் பெற்றிருக்கிறார். 

'மௌன கீதங்கள் படப்பிடிப்பு தொடங்கியது. என்ன ஆனாலும் சரி என்று தன்னைத்தானே தயார்படுத்திக்க்கொண்டவர் டைரக்டர் கிளாப் சொன்னவுடன் கேமரா முன் சென்று டக்கென்று அடித்து விட்டு ஓடி ஒளிந்துகொண்டாராம். டைரக்டர் உடனே 'கட்' சொல்லியிருக்கிறார். லைட் பிரச்சினையா, இல்லை டயலாக் பிரச்சினையா? எதுக்காக கட் சொன்னார் என்று யூனிட் குழம்ப, பாக்யராஜ் உதவி இயக்குநர் கோவிந்தராஜைக் கூப்பிட்டு 'நீதானப்பா கிளாப் அடிக்கணும். இப்ப கிளாப் அடிச்சுட்டு ஒளிஞ்ச பையன் யார்? அவனைக் கூப்பிடு' எனச் சொல்லியிருக்கிறார். ஒளிந்துகொண்டிருந்தவர் ஓடிவந்து அப்படியே சாஷ்டாங்கமாக காலைப் பிடித்துக்கொண்டு 'சார் நான் அப்பா இல்லாத பையன். கத்துக்கொடுங்க. என்னை நம்பி இரண்டு தங்கச்சிங்க. அம்மா இருக்காங்க. எனக்கு சினிமான்னா உயிரு' என்று அழுதவரை சரிதா உட்பட படப்பிடிப்பு அரங்கில் இருந்த எல்லோரும் பரிதாபமாகப் பார்த்தார்களாம்.

'அந்த ஏழு நாட்கள்' உள்பட சில படங்களுக்கு உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். அப்போது பல உதவி இயக்குநர்களுக்கு மத்தியில் சின்னப்பையனாகப் போனதால் அவர்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் செய்வாராம். சாப்பாடு போட்டுத் தருவது முதல் தட்டுகளைக் கழுவி வைப்பது வரை எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்ததால் அப்போது எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாம்.

'இன்று போய் நாளை வா' படத்தில் ஒரு காட்சி. ஜி.என்.செட்டி ரோட்டில் வைத்து காட்சி படமாக்கப்படுகிறது. உதவி இயக்குநர் பாண்டியன் ஒரு தெலுங்கு பேசும் துணை நடிகருக்கு டயலாக் சொல்லிக் கொடுக்கிறார். 

"ஒரு பொண்ணு ரோஸ் கலர் புடவை கட்டிக்கிட்டு நின்னுச்சா..?"
"ஆமா..."
"அது சம்பளப் பணத்தைத் தொலைச்சுட்டேன்னு சொல்லுச்சா...?"
"ஆமா..."
"நீங்க பணம் கொடுத்தீங்களா..?"
"ஆமா..."
"கோவிந்தா கோவிந்தா... " 

- இதுதான் டயலாக்.

இதை பாண்டியன் சொல்லிக் கொடுக்க, அந்தத் தெலுங்குக்காரரோ, 'ஒரு பொண்ணு ரோஸ் கலர் புடவ கட்டிக்கிணு நிக்கிதே அது இது...'என சுந்தரத் தமிழில்(!) திணறியிருக்கிறார். அப்போது டைரக்டர், 'யார்யா டயலாக் சொல்லிக்கொடுத்தது' எனக் கேட்க, பாண்டியராஜனை மாட்டிவிட்டிருக்கிறார் அந்த துணை நடிகர். 'யோவ்.. நான் இப்படியா சொல்லிக்கொடுத்தேன்..?' எனத் தலையில் அடித்துக்கொள்ள, அந்தக் காட்சியில் நடிகராகியிருக்கிறார் பாண்டியராஜன். அந்தக் காட்சி பிறகு படத்தில் இடம்பெறவில்லை. அதற்குப் பிறகு தனியாக அழைத்த பாக்யராஜ், 'நீ நடிக்கத்தான் வந்தியா' எனக் கேட்டவர், 'வருங்காலத்துல நல்ல நடிகனா வருவ... இந்தா அட்வான்ஸ்' என 11 ரூபாய் கொடுத்திருக்கிறார்.

அப்போது பாண்டியன் என்கிற பாண்டியராஜனுக்கு இருபது வயது. தனது முதல் படம் இயக்கும் வாய்ப்பு வந்ததும், தனது குருநாதர் பாக்யராஜிடம் இரவு இரண்டு மணிக்குச் சொல்லியிருக்கிறார். 'உனக்கு ரெண்டு அட்வைஸ் சொல்றேன்' எனச் சொல்லியிருக்கிறார் பாக்யராஜ். அவர் சொன்ன அறிவுரையைத்தான் பாண்டியராஜன் எப்போதும் பின்பற்றி வருகிறாராம்.  'இவ்வளவு இளம் வயதில் இயக்குனராவதற்கான தகுதிகள் படைத்தவன் நீ. நீ இயக்கும் படத்தை எங்கோ ஓர் மூலையில் உள்ள டென்ட் கொட்டாயில் திரைக்கு முன்னே மணலைக் குவித்து அதன்மேல் அமர்ந்து பீடியைப் பிடித்துக்கொண்டே பார்ப்பவன் ஏதாவது ஒரு காட்சியில் லயித்து பீடியைப் பிடிப்பதை மறந்து கையைச் சுட்டுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு படம் அமைந்தால் இன்டஸ்ட்ரியில் உன் பெயரை அழிக்க முடியாது' என்றிருக்கிறார். 'ரெண்டாவது அட்வைஸ் என்ன குருவே...' எனக் கேட்டதற்கு,'ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்‌ஷன் பண்ணு... டைரக்‌ஷன் பண்றமாதிரி நடிக்காதே!' என்றாராம்.

பாக்யராஜ், பாண்டியராஜனிடம் சொன்ன அறிவுரைகள் அவருக்கு மட்டுமானது அல்ல. அது சினிமாவில் சாதிக்கத்துடிக்கிற ஒவ்வொருவருக்குமானது. கதையை எப்படி எழுதுவதென்கிற சந்தேகம் சினிமாவை வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு நிச்சயமாக ஏற்படும். பாண்டியராஜன் எடுத்த படங்கள் எல்லாம் யதார்த்தமானவைதான். முப்பது மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்து கதாநாயகியின் உயிரைக் காப்பாற்றுகிற மாதிரியான சூப்பர் ஹீரோ சப்ஜெட்டுகள் இல்லை. அன்றாடம் பார்க்கிற காட்சிகளை மனதில் பதித்து அதை சினிமாவுக்கு ஏற்றபடி ருசிப்படுத்தினார். 'கன்னிராசி', 'ஆண்பாவம்' என வெற்றிப்படங்கள் கொடுத்தார். 'மீடியம் பட்ஜெட் படமா... பாண்டியராஜனைக் கூப்பிடு.' என்கிற நிலை வந்தது. லாப நஷ்டங்களைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதும், கஷ்டங்களைப் புலம்பிக் கொண்டிருப்பதுமே சிலநேரங்களில் ஒரு முழுப் படத்திற்கான கதையையும் தந்துவிடும். அது பெரும்பான்மையானோரின் கதையாகவும் இருக்கக்கூடும். அதையே படமாக்கும்போது ரசிகர்களையும் கதைக்குள் இழுத்துப்போட்டு tag செய்யமுடியும். அதை செம்மையாகச் செய்தார் பாண்டியராஜன். இப்போது ஒரு படத்திற்காகக் கதை விவாதத்தில் இருக்கிறாராம்.


"புலி ஒரு மான் கூட்டத்தையே துரத்தத் தொடங்கினாலும் கடைசியாகக் குறிவெச்சுப் பிடிக்கிறது ஒரு மானைத்தான். அப்படி நான் பிடிச்ச மான்  'ஆண்பாவம்'. இன்னும் அதேமாதிரியான  மான் வேட்டைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு..!"

                                                                                                   - ஆர்.பாண்டியராஜன்.


பாக்யராஜ், அவர் எடுத்த காட்சியையே வேண்டாம் எனச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் காட்சியை எடுப்பாராம். அவருக்கு முழுதிருப்தி ஏற்படாதவரை எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளமாட்டாராம். வெற்றி கிடைக்கும்வரை சமரசம் செய்துகொள்ளாமல் போராடிக்கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் வெற்றிபெறுகிற நாள்களின் இடைவெளி மட்டுமே மாறுபடுகிறது. வெற்றிப்படி ஒன்றுதான்!

- இன்னும் ஓடலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism