25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை!

ரோல் மாடல் ராமஜெயம் ஆச்சர்யம்... ஆனால், உண்மைஆ.சாந்தி கணேஷ், படங்கள் : பா.காளிமுத்து

மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தாம் ரோல் மாடல்கள். ஆசிரியர் ராமஜெயமோ ஆசிரியர்களுக்கே பல விஷயங்களில் ரோல் மாடலாக அசத்துகிறார்.

‘`நான் ஆங்கில ஆசிரியரா வேலை பார்க்க ஆரம்பிச்சு 28 வருஷங்களாகிடுச்சு. முதல் மூணு வருஷங்களில் நானும் லீவ், பர்மிஷன் எல்லாம் எடுத்துக்கிட்டுதான் இருந்தேன். நாலாவது வருஷம் நான் லீவ், பர்மிஷன்  எதுவும் எடுக்காம ரெகுலரா ஸ்கூலுக்குப் போனது எதேச்சையாகத்தான் நடந்தது. அதுக்காக, நான் வேலைபார்க்கிற சென்னை கே.கே.நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சேர்மன் ராஜகோபாலன்  ஆயிரம் ரூபாய் கேஷ் அவார்டு கொடுத்துப் பாராட்டினார். அப்போதான் என் மனசுக்குள்ள ஒரு ஸ்பார்க்... ‘லீவ் போடாம, லேட் அட்டெண்டன்ஸ் இல்லாம வேலைக்குப்போறது நம்ம கடமைதானே? அதை இனிமே எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது’னு முடிவு செய்தேன்.’’

மகன் குழந்தையா இருக்கும்போதுகூடவா லீவ் எடுக்கிற சூழ்நிலை வரலை..?

‘`வராத அளவுக்கு நான் அவனை ஆரோக்கியமா பார்த்துக்கிட்டேன். காலையில சமைச்சு முடிச்சு, நான் ரெடியாகி, அவனை ரெடியாக்கி, தூக்கிட்டுப் போயி கிரச்ல விட்டுட்டு, காலை 8:20-க்கு அட்டெண்டன்ஸ்ல கையெழுத்து போட்டுடுவேன். அவனுக்குப் பத்து வயசு ஆகிறவரைக்கும் வாழ்க்கை இப்படித்தான் ஓடிச்சு.’’

லீவு போட்டே ஆகவேண்டிய சூழ்நிலை வந்ததா?

‘`ரெண்டு தடவை வந்தது. முதல் தடவை, பிள்ளை அம்மையில துவண்டு கிடக்கிறான். அவனை கிரச்லேயும் விட முடியாது. லீவு எடுக்கவும் மனசு வரலை. ஸ்கூல் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்க நெருங்க பதற்றமாகி, போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன். திரும்பிப் பார்த்தால், கடவுள் என் மாமியார் உருவத்துல வந்து நின்னார். 500 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம், தேனியில இருந்தவங்க, எங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சுனு, திடீர்னு சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்து நின்னாங்க. என்னைப் பார்த்து, ‘நீ பள்ளிக்கோடத்துக்கு கெளம்பு’ன்னு சொல்ல, தெருவுக்குக் கிட்டத்தட்ட ஓடிவந்து, ஆட்டோ பிடிச்சு, ஸ்கூலுக்குப் போனேன். பெல் அடிக்க ரெண்டு நிமிஷம் இருக்கிறப்போ அட்டெண்டன்ஸ்ல கையெழுத்து போட்டுட்டேன்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick