கிச்சன் பேஸிக்ஸ்: சப்பாத்தி சத்துகளின் சங்கமம்!

விசாலாட்சி இளையபெருமாள், படங்கள் & வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

லகம் முழுவதும் பயன்படுத்தும் தானியங்களில் முதலிடம் கோதுமைக்கே. நம் நாட்டில் 13% சாகுபடி நிலத்தில் கோதுமை விளைகிறது. அரிசிக்கு அடுத்தபடியாகக் கோதுமைக்குத்தான் நம் உணவுகளில் முக்கியத்துவம் அதிகம். கோதுமை சாகுபடியின் உலகப் பட்டியலில் நம்நாடு நான்காவது இடம் வகிக்கிறது. முழு கோதுமையில் புரதம், தாதுக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என நிறைய சத்துகள் உள்ளன.

கோதுமை விளையும் நிலத்தைப் பொறுத்துச் சப்பாத்தியின் மிருதுத்தன்மையும் ருசியும் மாறுபடும். மத்தியப்பிரதேசத்தில் விளையும் `கோதுமையின் தங்கம்' என அழைக்கப்படும் `ஷர்பத்தி’ வகை கோதுமையில் செய்யப்படும் சப்பாத்தி மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும். பஞ்சாப் கோதுமையிலும் சப்பாத்தி நன்றாக இருக்கும். பொதுவாக வடநாட்டில் விளையும் கோதுமையில் ‘க்ளூட்டன்’ எனப்படும் ஒருவகைப் புரதம், மற்ற கோதுமைகளைவிட அதிகமாக இருப்பதாலும் பிசைந்த மாவு நன்கு நெகிழும் தன்மையுடன் இருப்பதாலும் சப்பாத்தி மிருதுவாக வரும்.

கோதுமை மாவு தயாரிப்பதற்குக் கோதுமையை வாங்கி ஒருநாள் முழுக்க வெயிலில் உலரவைக்கவும். மெஷினில் கொடுத்து நன்கு நைஸாகத் திரித்துக்கொள்ளவும். கோதுமை மாவைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளவும். இப்படி தயாரிக்கப்படும் மாவில் ‘வீட்ஜெர்ம்’ இருப்பதால் இதில் வெளியே விற்கும் மாவைவிட அதிக நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து இருக்கும்.

சப்பாத்தி வகைகள்

ரெகுலர் சப்பாத்தி

கோதுமை மாவில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து மாவைப் பிசிறவும். உலர் மாவு முழுவதிலும் தண்ணீர் கலந்து மாவு சேர்ந்து வந்ததும் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு, மாவு நன்கு மென்மையான பந்து போல் உருண்டு வரும் வரை பிசையவும். எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணி நேரமாவது மூடிவைத்து ஊறவிடவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick