ஆடிப்பூர தரிசனம்!

ஓவியம்: பத்மாவாசன்

கிளிப் பிரசாதம்!

ண்டாளின் அழகுக்கு அழகு சேர்ப்பவை ஆண்டாள் கிளியும் கொண்டையும். இலைகளினால் கட்டப்பட்ட கிளிப் பிரசாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விசேஷம். ஆண்டாள் உற்சவ மூர்த்திக்கு தினமும் மாலையில் இலைகளால் செய்யப்பட்ட கிளி சாற்றப்படுகிறது. இந்தக் கிளி செய்வதற்குத் தேவையான மரவள்ளிக் கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் மற்றும் குச்சிகள் முதலானவை திருப்பூர நந்தவனத்தில் வளர்க்கப்படுகின்றன. இந்த நந்தவனம் வடபெருங்கோயிலுக்கும் ஆண்டாள் கோயிலுக்கும் இடையே உள்ளது. மாலை கைங்கர்யத்துக்காக பெரியாழ்வாரால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனம். இங்கே, ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தார் ஆண்டாள். இதனை நினைவுகூரும் விதமாக, மாதந்தோறும் பூர நன்னாளில் ஆண்டாள் இங்கே எழுந்தருள்கிறார். பெருந் திருவிழாக்களின்போது மண்ணெடுத்தல் நிகழ்ச்சியும் இங்கு நடைபெறுகிறது. கிளி கட்டும் வம்சாவளியினர் நந்தவனத்திலிருந்து இலை மற்றும் பூக்களைப் பறித்து கிளி கட்டும் பணியைச் செய்கின்றனர். இவ்வாறு ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட கிளிகள், மறுநாள் காலை, வேண்டி வருபவர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆண்டாள் ஏந்திய கிளியை வீட்டின் பூஜையறையில் வைத்து வழிபட்டால், திருமணப் பாக்கியம் கூடிவரும் என்பதும், மகப்பேறு வாய்க்கப் பெறும் என்பதும் நம்பிக்கை.

ஆண்டாளும் அழகரும்!

நாறு நறும்பொழில்மாலிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங் கொலோ!


வ்வாறு ஆண்டாள், நாச்சியார் திருமொழியில், திருமாலிருஞ்சோலை அழகருக்கு 100 தடா வெண்ணெயும்,100 தடா அக்காரவடிசிலும் பிரார்த்தித்துக்கொள்ள, பின்னாளில் ஸ்ரீராமாநுஜர் அவற்றைச் செய்து முடித்தார். இன்றைக்கும், மார்கழி துவங்கிவிட்டால், நூறு டபராக்களில் அக்கார வடிசல் பிரசாதமும், நூறு கிண்ணங்களில் வெண்ணெய் கல்கண்டும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. மார்கழி 27-ம் நாள், இது விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

அன்றைக்கு அனைவருக்கும் அக்காரவடிசல் பிரசாதம் வழங்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick