14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி!

மீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாண உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தாஹிரா சஃப்தாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமேடையில் அறிவித்தார் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார். ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஃபக்ருன்னிஸாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மியான் சாகிப், லாகூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு வர தனக்குத் தகுதி இருந்தும், தான் நிராகரிக்கப்பட்டதை ஃபக்ருன்னிஸா தெரிவித்ததாகக் கூறினார். எப்போதோ நிகழ்ந்த தவறு அது என்றும், அதைச் சரிசெய்யும் விதமாக, பலூசிஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு, தாஹிராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் ஃபக்ருன்னிஸாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக அதைப் பார்க்கவில்லை என்றும், ஒட்டுமொத்தமாகப் பெண் இனத்துக்கு நிகழ்ந்த அநீதி அது என்றும் மியான் சாகிப் தெரிவித்தது பாகிஸ்தான் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

61 வயதாகும் தாஹிரா சஃப்தார், கெட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற வழக்கறிஞர் செய்யது ஹனாஃபியின் மகள். 1982-ம் ஆண்டு, பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான எமெர்ஜன்சிகால அத்துமீறல்கள் வழக்கை விசாரிக்கும் மூன்று நபர் நீதி ஆணையத்தில் இப்போது பணியாற்றி வருகிறார் தாஹிரா.

ஆகஸ்ட் 31 அன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவிருக்கிறார் இந்த சாதனைப் பெண்மணி.            

சபாஷ்... சஃப்தார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick