எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

ருணாநிதி, காவேரி மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த ஆகஸ்ட் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியமே, இறுதி அஞ்சலி குறித்த பேச்சு ஆரம்பித்துவிட்டது. ‘மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்ததுபோலவே, அவரது உடலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. அன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஸ்டாலின், மெரினா கோரிக்கையுடன் ராஜாஜி ஹாலில் உடலை வைப்பதற்கான அனுமதியையும் கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் தரப்பில் உடனடியாக ஓகே சொல்லப்பட்டது. ஆனால், ‘‘ஒரு நாளுக்கு மேல் வைக்க வேண்டாம். பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்பட்டுவிடும்’’ என்ற ஸ்டாலினிடம் முதல்வர் சொன்னாராம்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் அன்று மாலையே ராஜாஜி ஹாலைப் பார்வையிட்டனர். கருணாநிதியின் மரண அறிவிப்பு வருவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பே ராஜாஜி ஹாலை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பமாகிவிட்டன.

சி.ஐ.டி காலனி இல்லத்திலிருந்து கருணாநிதியின் உடலை அதிகாலை 4 மணிக்குள் ராஜாஜி ஹால் கொண்டுவருவதாகத் திட்டம். ஆனால், 4.40 மணிக்குத்தான் அங்கிருந்து கருணாநிதியின் உடலைத் தாங்கிய ஆம்புலன்ஸ் கிளம்பியது. அப்போது, மழை பெய்ய ஆரம்பித்தது. ஆம்புலன்ஸ் சரியாக 5.05-க்கு ராஜாஜி ஹாலை வந்தடைந்தது. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே ராஜாஜி ஹாலில் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. நெருக்கியடித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, போலீஸார் கெடுபிடி செய்யத் தொடங்கினர்.

கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை, ராஜாஜி ஹாலில் அமைக்கப்பட்டிருந்த சாய்வு மேடையில் வைக்கப்பட்டது. வைத்த நேரத்தில், கருணாநிதியின் உடல் ஒருபுறமாகச் சாய்ந்துவிட்டது. பதறிப்போய் அதைச் சரிசெய்து சாய்வு மேடையில் வைத்தனர். வரும்போது உடலின்மீது தி.மு.க கொடியே போர்த்தப்பட்டிருந்தது. உடல் வைக்கப்பட்டபின் ராணுவத்தினர் வந்து தேசியக்கொடியைப் போர்த்திய பிறகே, மற்றவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது.

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டதும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு சூழ்ந்தனர். எ.வ.வேலு, பொன்முடி என முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ-க்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், ராஜாஜி ஹால் படிக்கட்டுகளில் வரிசையாக இடம்பிடிக்கத் தொடங்கினர். கருணாநிதியின் உடலுக்குக் கீழே இருபுறம் அமைந்திருக்கும் முதல் படிக்கட்டில் அமர்வதற்குப் பெரும் போட்டியே நடந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!