அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

கோபாலபுரம் வீட்டு வாசலில் சரசரக்கும் வேப்பமரத்தின் அசைவை ரசித்தபடியே வரும் கருணாநிதி, ஆகஸ்ட் 7-ம் தேதி இரவில் அப்படி உள்ளே நுழையவில்லை. 62 ஆண்டுக்காலம் வாழ்ந்த, நடமாடிய அந்த வீட்டுக்கு உயிரற்ற உடலாகத்தான் அவர் கொண்டுவரப்பட்டார். தலைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள, தலைவரை ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்ல, கோபாலபுரம் வீட்டுவாசலில் காத்திருக்கும் தொண்டர் கூட்டம் அன்று, அவர் உடலைக் காண கண்ணீருடன்  தவித்துக்கொண்டிருந்தது.

‘கருணாநிதியின் உடல்நிலை மோசமாகிவிட்டது’ என அன்று மாலை 4.30 மணிக்கு அறிக்கை வெளியானதுமே, காவேரி மருத்துவமனை முன் திரண்டது ஒரு கூட்டமென்றால், கோபாலபுரம் வீட்டைச் சுற்றியும் கூட்டம் சூழ ஆரம்பித்தது. மாலை சரியாக 6.40 மணிக்கு கலைஞர் இறந்து விட்டதாக மருத்துவ அறிக்கை வந்ததும், “ஐயோ... தலைவா!’’ என்ற ஓலம் அங்கு பெரும் பதைபதைப்பை உண்டாக்கியது. ‘‘தலைவர் வாழ்கன்னு இனி சொல்ல முடியாம பண்ணிட்டியே தலைவா’’ என்று அதே குரல் அழுகையாக மாற, கோபாலபுரம் வீட்டைச் சுற்றி திரண்டிருந்த மக்கள் கதறி அழ ஆரம்பித்தனர்.

‘‘ஒரு தடவையாச்சும் உள்ளே விடுங்கய்யா!’’

‘‘நான் மயிலத்துலேந்து வரேன். 67-ல முதல்முறையா கலைஞரைப் பாத்து தி.மு.க-வில் சேர்ந்தேன். எப்போவெல்லாம் தலைவரப் பாக்கணும்னு தோணுதோ, அப்போவெல்லாம் இங்கே வந்து நிப்பேன். இப்போ அவரு முகத்தப் பாக்க அஞ்சு நாளா காத்துக் கெடக்கேன்.  தலைவர் இறந்துட்டதா சொல்றங்க. தாங்கிக்க முடியலை. இனிமே இந்த வீட்டு முன்னாடி நான் எதுக்கு வந்து நிக்கப்போறேன்’’ என்கிற ஒரு பெரியவருக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை. எல்லோரும் கருணாநிதி பற்றிய நினைவுகளுடன் கண்கலங்கிக் கொண்டிருந்தனர்.

காவேரி மருத்துவமனையிலிருந்து அந்த முன்னிரவில் ஓர் ஊர்வலம் போலவே ஆயிரக் கணக்கான தொண்டர்கள் நடந்துவர, அவர்களின் பின்னால் நிதானமாக ஊர்ந்து வந்தது கருணாநிதியின் உடலைச் சுமந்துவந்த வாகனம்.

கோபாலபுரம் வீட்டு முன்பு குவிந்த தொண்டர்களை போலீஸார் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, கூட்டத்தைச் சமாளிக்க துணை ராணுவப்படை அங்கே வந்தது. ‘‘எங்க தலைவர் வாழ்ந்த வீடு... ஒரு தடவையாச்சும் உள்ளே விடுங்கய்யா’’ என்ற தொண்டர்களின் வேண்டுதலை கண்டுகொள்ளா மல், அவர்களை அப்புறப்படுத்தியது காவல்துறை.

Editor’s Pick