யம்மி விருதுகள் - தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா!

`இப்படியொரு ருசியான சாப்பாட்டை செஞ்ச கைக்கு, தங்கக் காப்புதான் போடணும்’ என்று வயிறு நிறைந்த உற்சாகத்தில் மனதார நாம் வாழ்த்துவதுண்டு. அப்படிப்பட்ட சுவையான உணவு அளிக்கும் கைகளில் `யம்மி விருது’ கொடுத்து மகிழ்ந்தது, அவள் விகடன் கிச்சன். உணவகங்கள், செஃப், டயட்டீஷியன், எழுத்தாளர் போன்ற 15 பிரிவுகளில் விருது அளித்து, தன் முதல் தடத்தைப் பதித்துள்ளது.

வெயில் சாய்ந்த நேரம், வண்ண வண்ண உடைகளில் விருந்தினர்களின் வருகை அரங்கையே கலர்ஃபுல்லாக்கியது. நெல்லிக்காய், மசாலா மோர் மற்றும் பானகத்துடன் வரவேற்பு தந்த யம்மி விழாவை `விஜய் டி.வி புகழ்’ ரம்யா தொகுத்து வழங்க, கலகலவென நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. விருதுகளுக்கு இடையே இன்சமாம் மற்றும் ஆனந்தின் ராப் இசை, ஸ்டேண்ட்அப் காமெடியன் பார்கவ்வின் நகைச்சுவைச் சரம், `அருண் தி மென்டலிஸ்ட் ஷோ’ போன்ற வித்தியாச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறந்த சைவ உணவகத்துக்கான அங்கீகாரம்தான் முதல் விருது. பல ஆண்டுகளாக சுவையான சைவ உணவுகளைப் பரிமாறிக்கொண்டிருக்கும் கோவை `ஸ்ரீ ஆனந்தாஸ்’, இந்த விருதைத் தட்டிச்சென்றது.