தியேட்டர் கதவு திறக்கிறது!

ஓவியம் செந்தில்

கிழிக்கப்பட்ட பாதி சீட்டைக் கையில் திணிக்கும்போதெல்லாம்
தியேட்டர் கதவு திறக்கிறது.
சிறிது வெளிச்சமும் மணமூட்டப்பட்ட குளிரும்
‘`ஓடினாள்... ஓடினாள்”
ஒலித்துணுக்கும் கசிகின்றது.
தேன் தினைமாவு சுத்தி அரிவாளுடன் வந்த துருவனுடன்
பார் டான்சர் ஜோதியுடன் ஈயும் வந்து சேர்ந்தான்.
‘போற்றிப் பாடடி பெண்ணே...’
மஞ்சள் சட்டைக்காரரிடம்
“செல்போனை சைலன்ட்ல போடுங்க” என்கிறார்
கறுப்புச்சட்டை கிட்டு அண்ணன்.
சட்டை பட்டனில் சிக்கியிருந்த நூலைப் பிரித்தபடி
வந்த ஜீவா இப்போது புதுமாப்பிள்ளை.
முதுகில் காயம் ஆறவில்லை.
“இன்னும் நாலுபேரு வருவாங்க” என்று
பதிவுக் குறுந்தகவலைக் காட்டியபடி நுழைகிறான் அப்சல்.
அயோத்திதாசர் டி-ஷர்ட் அணிந்த காளியுடன்
கரிகாலனும் கபாலியும்
மூலிகை வாசனையுடன் ரங்கசாமியும்கூட.
ஆழ்துளைக் கிணற்றின் மணல்துகள் படிந்த தன்ஷிகாவுடன்
செல்லம்மாளும் வந்தாள் தங்கமீன்களுடன்.
“மீன்கள் குவிச்சிருக்கும் வாயைப் போலத்தான்
ஆனந்திக்கு கன்னம் உப்பியிருக்கும்” என்ற
பிரபாகரனும் அவன் நாயும் ஆனந்தியும்கூட
தண்டவாளத்திலிருந்து மீளவில்லை.
பிரபாகரனிடமிருந்து வந்த பரியன்
தண்டவாளத்திலிருந்து மீண்டுவிட்டான்.
கருவறை போல்தான்
இன்னும் திரையரங்கம் இருளில்.
ஆனால் திரையை நோக்கிப் பாய்கிறது வெளிச்சம்.
விசில்களும் கைத்தட்டல்களும் தொடங்கட்டும்.

சுகுணா திவாகர் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்