மக்களுக்கு வேண்டும் விளக்கம்! | Editor Opinion - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

மக்களுக்கு வேண்டும் விளக்கம்!

டந்த சில மாதங்களாக சி.பி.ஐ-யில் நிலவிவந்த பனிப்போர், அதன் இயக்குநரான அலோக் வர்மா நீக்கப்பட்ட பிறகு வெளிப்படையான போராக வெடித்தது. இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானாமீது லஞ்சப்புகார்கள் எழ, அலோக் வர்மா விசாரணைக்கு உத்தரவிட்டதில்தான் குழப்பம் தொடங்கியது. அடுத்து, அலோக் வர்மாமீது அஸ்தானா குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இருவரையும் சி.பி.ஐ பொறுப்புகளிலிருந்து விடுவித்தது மத்திய அரசு.
 
இந்த நீக்கத்தை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றம் ``மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது, குழுதான் முடிவெடுக்க வேண்டும்’’ என்றது. இறுதியில் குழு கூடிப் பேசி அலோக்கைத் தீயணைப்புத்துறை இயக்குநராக நியமிப்பது என முடிவெடுத்தது. அலோக் வர்மாவோ ‘எதுவும் வேண்டாம்’ என்று பதவி விலகி விடைபெற்றுக்கொண்டார்,

அவிழ்க்கமுடியாத புதிர்கள் கொண்டதாக இருக்கிறது சி.பி.ஐ விவகாரம். இதில் எழும் சில வலுவான கேள்விகளுக்குத் தகுந்த பதில் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.

*லஞ்சப்புகாரில் சிக்கிய அஸ்தானாவின் குற்றச்சாட்டுகளை மட்டும் நம்பி, அலோக் வர்மாமீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது சரியா?

*சர்மாமீது அஸ்தானா முன்வைக்கும் 10-ல் 6 குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. 4 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி முடிவுக்கு வரலாம் என்றுதான் மத்திய புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி விசாரணை நடத்தாமலேயே, வர்மாவை இடமாற்றம் செய்தது ஏன்?

*குழுவின் மேற்பார்வையாளரான நீதிபதி ஏ.கே. பட்நாயக், ‘அந்த அறிக்கையை நான் பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார். அத்தகைய அறிக்கையின் அடிப்படையில் வர்மா விரட்டப்பட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

*வர்மாமீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகவே எடுத்துக் கொண்டாலும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரைப் பணி இடைநீக்கமோ, பணிநீக்கமோ செய்யாமல், வேறொரு துறைக்குத் தலைவராக நியமித்தது நியாயமான செயல்தானா?

*முழுமையடையாத ஓர் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், சி.பி.ஐ-க்கான புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினருமான மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு காட்டியபோதும், அவசரமாக அலோக் வர்மா மாற்றப்பட்டது ஏன்?

முக்கியமான வழக்குகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்த சி.பி.ஐ-யே இப்போது சிக்கலான புதிராக மாறியிருக்கிறது. ‘மன் கி பாத்’ மத்திய அரசுதான் இதுகுறித்து மக்களுக்கு வெளிப்படையாக விளக்க வேண்டும். 

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமா என கனத்த மனதோடு காத்திருக்கிறார்கள் மக்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க