அன்பு வணக்கம்! | Editor Opinion - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

னவரி மாதம் கார் வாடிக்கையாளர்களுக்குக் கோலாகலமாகப் பிறந்திருக்கிறது. டாடா ஹேரியர், நிஸான் கிக்ஸ், மாருதி சுஸூகி வேகன்-R, பிஎம்டபிள்யூ X4, பென்ஸ் V Class, டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் என்று ஏகப்பட்ட கார்கள் அறிமுகமாகியிருக்கின்றன. இதில் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்தது விலை.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதாலும், ஜீப் காம்பஸின் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸோடு இயங்குவதாலும், டாடா ஹேரியரின் விலை, ஜீப் காம்பஸோடு போட்டி போடும் அளவுக்குப் பெரிதாக இருக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஹேரியரின் விலையை, யாருமே எதிர்பாராத வகையில் ஹூண்டாய் க்ரெட்டா அளவுக்கு நிர்ணயித்திருக்கிறது டாடா. இது அறிமுக விலையே என்றாலும், இது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்! விலை தெரியாத முன்பே சுமார் 16,000 பேர் இதை முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

விலை மட்டுமல்ல... பாதுகாப்பு அம்சங்களும் இப்போது அறிமுகமாகும் கார்களில் முன்னுரிமை பெற்று வருகின்றன. புதிய வேகன்-R-ஐ எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு மத்தியில் அமலாக்கப்பட இருக்கும் பாதுகாப்புக் கோட்பாடுகளுக்கு ஏற்ப அதில் டிரைவர் காற்றுப்பை, ABS, EBD, ரியர் பார்க்கிங் சென்ஸார், சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டது மாருதி சுஸூகி.

அதேபோல சிறப்பம்சங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு வாண வேடிக்கைதான். நிஸான் கிக்ஸை எடுத்துக் கொண்டால், அதில் 360 டிகிரி கேமரா, 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன், லெதர் ஃபினிஷ் டேஷ்போர்டு என்று அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக டெலிமேட்டிக் ஸ்மார்ட் வாட்ச் அபாரம்.

இந்திய கார் சந்தையில் இன்னுமொரு விநோதமான மாற்றமும் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக விற்பனையில் முதலிடத்தில் இருந்த ஆல்ட்டோவை, இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது மாருதி ஸ்விஃப்ட் டிசையர். இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், விலை குறைந்த கார்களைவிடவும், பாதுகாப்பு வசதிகளும் மற்ற சிறப்பம்சங்களும் நிறைந்த கார்களையே மக்கள் விரும்புகிறார்கள்.

அன்புடன்

ஆசிரியர்

[X] Close

[X] Close