“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்!” | Rahul Gandhi Prime Minister and Stalin Chief Minister - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்!”

ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியை விட, 4,46,000 வாக்குகள் மட்டுமே அதிகம்பெற்றது அ.தி.மு.க. சதவிகித அளவில் பார்த்தால், 1.1 விழுக்காடுதான் அ.தி.மு.க அதிகமாகப் பெற்றது. இந்த ஜனநாயக ஆச்சர்யத்தின் விளைவாகத்தான் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இரண்டாம் முறை முதல்வராகப் பதவி ஏற்று, 100 நாள்கள் கடந்த நிலையில், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், வீடு திரும்பாமலேயே மரணம் அடைந்துவிட்டார்.

அவர் மறைந்தபின், அ.தி.மு.க-வில் குழப்பங்கள் மேல் குழப்பங்கள். அடுத்து முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், ஒரு மாதத்துக்குள் சசிகலா குடும்பத்தால் ஒதுக்கப்பட்டார். நிர்பந்தத்தால் பதவி விலகி தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா முதல்வராக முயன்று, சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததால், சிறைக்குப் போனார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் முகாமில் எடப்பாடி பழனிசாமியையே அ.தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வுசெய்தனர். இதையடுத்து, அவர் முதல்வரானார். ‘‘எடப்பாடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது போராட்டம் நடத்தப்போகிறேன்’’ என்று அறிவித்த ஓ.பி.எஸ்.,  ஒருகட்டத்தில் எடப்பாடியுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து சசிகலாவின் வாரிசான டி.டி.வி.தினகரனை ஓரங்கட்டினார். இப்படிச் சந்தர்ப்பவாதிகளின் கூடாரமாக அ.தி.மு.க. மாறிவிட்டது. இப்படி உள்கட்சிக் குழப்பத்தால் தமிழகத்தின் வளர்ச்சி பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டது.

இரு பெரிய மாநிலக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க நிலை இப்படி இருக்க, இன்னொரு மாநிலக் கட்சியான தி.மு.க-வில் ஐம்பது ஆண்டுக்காலம் அதன் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, செயல் தலைவராக இருந்த ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். தலைவரான பின்பு, முதல் பேச்சிலேயே தனது அரசியல் பாதையைத் தெளிவுபடுத்தி, மத்தியில் நடைபெற்றுவரும் பாசிச வகுப்புவாத பி.ஜே.பி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை, துணிச்சலுடன் பகிரங்கப்படுத்தினார். மோடியைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இலக்கைக் கோடிட்டுக் காட்டி, தி.மு.க-வின் பாதையைச் சரியாக வகுத்துள்ளார் ஸ்டாலின். மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க-வின் அணுகுமுறை தெளிவாக இருக்கிறது.

[X] Close

[X] Close