அன்பு வணக்கம்! | Editor Opinion - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ல்லாம் இருந்தும், பெரிய ஈர்ப்புத்தன்மை இல்லாத வாகன வகை உண்டு என்றால், அது எம்பிவியாகத்தான் இருக்க முடியும். தாராளமான இடவசதி. பெரிய டிக்கி, மூன்று சீட் வரிசைகள் என பெயருக்கு ஏற்ற வகையில் மல்ட்டி பர்ப்பஸ் வாகனமாக இருந்தாலும்... எஸ்யூவி அல்லது செடான் கார்களுக்கு இருக்கக் கூடிய மதிப்பு, ஈர்ப்பு, கவர்ச்சி ஆகியவை எம்பிவி வாகனங்களுக்கு இல்லைதான். ஆயினும், சந்தடியே இல்லாமல் எம்பிவிக்கான மார்க்கெட் ஒரு காலகட்டத்தில்  விரிவடைந்தது.

நீண்டகாலமாகப் போட்டிக் களத்தில் நிற்கும் எம்பிவி, மாருதி சுஸூகி எர்டிகா. புதிதாகக் களம் கண்டிருக்கும் எம்பிவி மஹிந்திராவின் மராத்ஸோ. இந்த இரண்டுக்கும் இடையில் ரெனோ லாஜி. இந்த மூன்றில் எது யாருக்கு ஏற்ற எம்பிவி என்பதை ஓட்டிப் பார்த்து ஒரு ஒப்பீட்டுக் கட்டுரையைக் கொடுத்திருக்கிறோம். நியாயமாகப் பார்த்தால் இந்தப் பட்டியலின் ஆரம்பப் பெயராக இருந்திருக்க வேண்டியது டொயோட்டாவின் இனோவா க்ரிஸ்டா. ஆனால், இதன் விலை வேறு லெவல் என்பதால், இந்த ஒப்பீட்டில் அதைச் சேர்க்கவில்லை.

அடுத்து இந்த இதழில் நாம் விரிவாகப் பேசியிருக்கும் விஷயம். மாருதி சுஸூகியின் வேகன்-R. அறிமுகமான நாள் தொட்டு, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த கார் இது என்றாலும், கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து களத்தில் நின்று விளையாடும் கார் இது. இதுவரை 22 லட்சம் பேர் இதை வாங்கியிருக்கிறார்கள். அடுக்கடுக்கான விமர்சனங்களைத் தாண்டி வேகன்-R எப்படி அமோகமாக விற்பனையாகிறது? டாப்-10 கார் பட்டியலில்கூட அடிக்கடி எப்படி இடம்பெறுகிறது என்பதெல்லாம் புரியாத புதிரல்ல! வேகன்-R என்பது தாராளமான, சிறிய, பிராக்டிக்கலான, அதிகம் செலவு வைக்காத கார் என்பதெல்லாம் அதைப் பயன்படுத்தியவர்கள் கொடுத்த சான்றிதழ்கள். இப்போது முன்பைவிட அதிக தாரளமான இடவசதியோடும், அதிக நீளத்தோடும், அகலத்தோடும், புதிய இன்ஜினோடும் அறிமுகமாகியிருக்கும் புதிய வேகன்-R எப்படி இருக்கிறது என்பதை டெஸ்ட் டிரைவ் செய்து, அதன் ரிப்போர்ட்டையும் இந்த இதழில் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

மூன்றாவதாக ஹோண்டா சிவிக். இது மற்ற கார்களை எல்லாம் விட பாரம்பரியமிக்க கார். தலைமுறைகள் தாண்டி மக்களின் மனங்களின் இடம் பிடித்திருக்கும் கார். ஸ்டைலிஷ் கார். தனி ரசிகர்கள் பட்டாளம் கொண்ட கார். சிவிக் பற்றிச் சொல்வதற்கு இப்படிப் பல நல்ல விஷயங்கள் உண்டு. இப்போது வெளிவரும் பத்தாவது தலைமுறையைச் சேர்ந்த சிவிக் பெட்ரோல்/டீசல், ஆட்டோமேட்டிக்/மேனுவல் என்று பல ஆப்ஷன்களில் வெளிவருகிறது. இதில் எந்த வேரியன்ட் யாருக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதற்கு, நாம் பெங்களூரில் செய்த டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் நிச்சயம் பதில் சொல்லும்.

அன்புடன்

ஆசிரியர்