பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர் | Sattur by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர்

தி.மு.க சார்பில் வி.சீனிவாசன், அ.தி.மு.க சார்பில் ராஜவர்மன் போட்டியிடுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று, தினகரன் அணிக்கு மாறியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட
எஸ்.ஜி.சுப்பிரமணியன், இப்போது அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் மூவருமே முக்குலத்தோர் சமூகத்தினர். சாத்தூர் தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர் சரிபாதியாக உள்ளனர். அடுத்த இடத்தில் நாயக்கர் சமூகத்தினரும், நாடார் சமூகத்தினரும் உள்ளனர். இதனால், மூன்று தரப்பிலும் ஓட்டுகள் சிதறும். பட்டாசு ஆலைகள் பிரச்னையால் தொழிலாளர்கள் அ.தி.மு.க அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் மூலம் எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் ராஜவர்மனுக்கு சீட் கிடைத்துள்ளது. இவருக்கு இப்பகுதி மக்களிடம் போதிய அறிமுகம் இல்லை. பி.ஜே.பி., பா.ம.க வாக்குகள் இங்கு எடுபடாது. இவை எல்லாம் அ.தி.மு.க-வுக்கு பாதகம். தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளின் வாக்குகள் மட்டுமே அ.தி.மு.க-வுக்கு சாதகம்.

அ.ம.மு.க வேட்பாளர் சுப்பிரமணியன், ஏற்கெனவே இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றவர். அ.ம.மு.க-வுக்கு இங்கு ஓரளவு செல்வாக்கும் இருக்கிறது. இதனால், அ.தி.மு.க வாக்குகள்  பெருமளவில் அ.ம.மு.க-வுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு.

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு, தி.மு.க-வுக்குச் சாதகம். தி.மு.க-வுக்குக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் கூடுதல் பலம். ஏற்கெனவே இந்தத் தொகுதியில் ஆறுமுறை வெற்றிபெற்று மக்களிடம் நன்கு அறிமுகமான முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியிருப்பது தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கிறது.