Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெஞ்சல் மொழிகளும் கொஞ்சல் விழிகளும்!

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்... தினம் தினம் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மட்டுமல்ல... ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையும் இதன் வழியாகத்தான் கடந்து பயணிக்கிறது.

பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள், புத்தகம் விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள், பிச்சை எடுப்பவர்கள் எனப் பலருடைய வாழ்க்கையும் இந்தப் பேருந்து நிலையத்தைச் சுற்றிதான்.

'மல்லிப் பூ, முல்லைப் பூ...' என, தள்ளு வண்டியில் கலர் கலர் பூக்களோடு கூவிக் கூவி விற்கும் சுரேஷ், ''எம்.காம். படிச்சிருக்கேன் சார். பல இடங்கள்ல வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன். வேலை கிடைச்சிடும்னு நம்பிக்கை இருக்கு. அதுவரைக்கும் சும்மா இருக்க முடியுமா..? அதான் இந்த வியாபாரம் பாக்குறேன். ஒருநாளைக்கு 200 ரூபா கிடைக்குது. போதும் சார்'' என்பவருக்கு 30 வயது.

''என்ன ஒண்ணு... வீட்டுல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. ஆனா பலரும், 'மாப்பிள்ளை பூ விக்குறவரா?’னு கேவலமாப் பேசுறாங்க. படிப்பை முடிச்சுட்டு வெட்டியா ஊர் சுத்தாம, உருப்படியா ஒரு வேலை பார்க்குறது தப்பா சார்?'' -சாட்டையடிக் கேள்வியை வீசிவிட்டு, பூக்களை எடைபோடத் தொடங்குகிறார்.  

''10 ரூவா தர்றீயா?'' என்ற ஒப்பந்தத்தோடு பேச ஆரம்பிக்கிறார் பிச்சை எடுக்கும் தாத்தா. ''பொண்டாட்டி செத்துப் போய்ட்டா. ஒரே பையனும் கை விட்டுட்டான். சொந்தக்காரங்க யார்கிட்டேயும் போய் நிக்கப் பிடிக்கல. ஒரு வருஷமோ... ரெண்டு வருஷமோ... அதுவரைக்கும் உயிர் பொழைக்கணும்ல?' -வார்த்தைகளில் சலிப்பு.

'நாங்க எல்லாம் வேற ஊரு. அப்பா இல்ல. அம்மா மட்டும்தான். சீஸனுக்குத் தகுந்த மாதிரி ஏதாச்சும் விப்போம். இப்ப கிளி பொம்மை. படிக்கலாம்தான். சாப் பாட்டுக்கு என்னா பண்றது?' -கொச்சை யான தமிழில் பேசினாலும் அர்த்தம் விளங்குகிறது. 'ஒரு கிளி வாங்கேன்...'' கெஞ்சுகிறான் அந்த வட மாநிலச் சிறுவன்.

அவ்வப்போது தலைகாட்டும் குழந்தைப் பிச்சைக்காரர்கள் காசு வேண்டி பயணிகள் காலில் விழ... பதைபதைக்கிறது நெஞ்சம். 'வெளியூர்ல இருந்து வந்தேன். பணத்தைத் தொலைச்சுட்டேன்’, 'அப்பாவுக்கு உடம்பு சரியில்ல’, 'தங்கச்சிக்கு அடுத்த மாசம் கல்யாணம்’ என்று போங்கு காரணம் சொல்லி பணத்தைக் கறப்பவர்களும் இங்கே அதிகம்.

ஏகப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் இருப்பதால் வாண்டுகளும் இளசுகளும் ஆங்காங்கே திரிகிறார்கள். பலர் கூட்டமாக... சிலர் ஜோடியாக!

''ஸ்கூல் விட்டு ஒரு மணி நேரம் கழிச்சுதான் எங்க ஊருக்கு பஸ் வரும். அதுவரைக்கும் பஸ் ஸ்டாண்டையே அலசுவோம். அப்பப்ப காலேஜ் அண்ணாக்களுக்குக் காதல் தூதும் நாங்கதான். எல்லாத்துக்கும் சார்ஜ் உண்டு. சாக்லேட் வாங்கித்தாங்க!'' தகவல் சொன்னதுக்கு சார்ஜ் வசூலிக்கிறான் ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன். ''ஒரு பெண்ணோ ஒரு பையனோ எந்த பஸ்லேயும் ஏறாம ரொம்ப நேரம் தனியா நின்னா... யாருக்கோ வெயிட்டிங்னு அர்த்தம். பார்வையிலேயே பல லவ்ஸ் ஓடும்ணே!'' -அனுபவக் குரல் கல்லூரி மாணவனுடையது.

'இங்கே இருக்கிற ஜவுளிக் கடையில வேலை பாக்குறேன் சார். நைட் ஒன்பதரைக்கு எங்க ஊருக்குக் கடைசி பஸ். ஓடி வந்தாதான் பிடிக்க முடியும். அதைவிட்டா பஸ் இல்ல. ஆனாலும் நான் ஒருநாளும் பஸ்ஸை மிஸ் பண்ணது இல்ல' -புன்னகைக்கிறார் பணிக்குச் செல்லும் இளம்பெண் ஒருவர்.

பேருந்துகளின் ஹாரன் சத்தத்தையும் தாண்டி... ஏக்கக் குரல்கள், கோபக் குரல்கள், கெஞ்சல் குரல்களால் நிரம்பி இருக்கிறது சத்திரம் பேருந்து நிலையம்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ர.அருண் பாண்டியன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சிறுவர்களின் ‘பொற்களம்’!
புல்ஸ் ஐ.... கும்மி ஆட்டம்... கொண்டாட்டம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close