Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் ஊர் - ரயிலை நிறுத்திய காபி கிளப் !

அழகு.பன்னீர்செல்வம் க.ராஜீவ்காந்தி படங்கள்: ந.வசந்தகுமார்

''எங்க ஊருக்கு இந்தப் பெயர் வரக் காரணமே... ஊர் நடுவுல வீற்றிருந்து பேரருளை வாரி வழங்குகிற ஆபத்சகாயேஸ்வரர்தான். ஒருமுறை வாலி, சுக்ரீவன் மீது கடும் கோபம்கொண்டு துரத்தியபோது, சுக்ரீவன் இங்கிருந்த சிவலிங்கத்தின் பின்னால் மறைந்து தப்பித்தானாம். சுக்ரீவன், தன்னைக் காப்பாற்றிய சிவனை ஆரத்தழுவி ஆனந்தக் கூத்தாடிய இடம் என்பதால், திருதென்குரங்காடுதுறை என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி ஆடுதுறை என ஆயிற்று' - பட்டிமன்றத்தில் பேசுவதைப் போலவே ஊர் பெருமையையும் ஆணித்தரமாகப் பேச ஆரம்பிக்கிறார் பிரபலப் பட்டிமன்ற நடுவரும் ஆன்மிகப் பேச்சாளருமான ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம்.

''ஆடுதுறை என்றால் நினைவுக்குவருவது இந்திய வேளாண் நெல் ஆராய்ச்சி மையம். ஆடுதுறை 27, ஐ.ஆர்-8  என, நாடு முழுவதும் பிரபலமான நெல் வகைகள், இங்கு இருந்துதான் அறிமுகப்படுத்தப்பட்டன. வாழைத் தோப்புகள் நிறைந்த ஆடுதுறையில் இருந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு வாழைத்தார், வண்டி வண்டியாகப் போகும். திருப்பதி உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் பிரசாதம் கொடுக்கப் பயன்படுத்தப்படும் தொன்னைகள்  இன்னமும் இங்கிருந்துதான் போகின்றன.

எங்கள் ஊருக்குப் பெருமை சேர்க் கும் இன்னொரு விஷயம் நாடக மன்றம். 90 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசங்கரநாராயண சபாவில் நடிக்காத பிரபலங்களே இல்லை. ஆச்சி மனோரமா இங்குவந்து நடித்தபோது, எனக்கு ஐந்து வயது. தாத்தா காலத்தில் இருந்தே எங்கள் குடும்ப ஆட்கள்தான் இந்த மன்றத்தின் புரவலர்கள். அதனாலேயோ என்னவோ சின்ன வயசிலயே நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டேன். மேடைக் கூச்சம் போக்கவும் பிரபலங்கள் முன் பேசவும் வாய்ப்பு அமைத்துக்கொடுத்தது அந்த மேடைதான்.

அந்தக் காலத்தில் சென்னை செல்லும் புகைவண்டிகளை ஆடுதுறையில் கண்டிப்பாக நிறுத்துவார்கள். அதற்கு முக்கியக் காரணம், ஸ்டேஷன் அருகில் இருந்த பத்மவிலாஸ் என்ற காபி கிளப்தான். அந்த கிளப், மலையாள பிராமணர் ஒருவரால் நடத்தப்பட்டது. இப்போது அவர்களின் உறவினரால் நடத்தப்படும் சீதாராமவிலாஸ் அந்தப் பெருமையைக் கட்டிக் காப்பாற்றுகிறது. நவக்கிரகக் கோயில்களுக்கு வரும் பக்தர்களும் பிரபலங்களும் அந்த ஹோட்டலுக்குக் கண்டிப்பாக வருவார்கள்.

சுற்றிலும் நவக்கிரக ஆலயங்கள் அமைந்த ஊர், தென் இந்தியாவின் பண்டரீகபுரம்னு அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஊர்னு எங்க ஊரோட ஆன்மிகப் பெருமைகளையும் அடுக்கிக்கிட்டே போகலாம். ஊரிலேயே பெரிய திருவிழானு சொன்னா அது மதுரகாளியம்மன் கோயில் திருவிழாதான். 50 கிராம மக்கள் கூடும் அந்தத் திருவிழா, மூணு நாள் விமர்சையா நடக்கும்.  இப்போ உள்ள இயந்திர வாழ்க்கையால் எல்லா ஊர்கள்லயும் திருவிழா நாட்கள் சுருங்கிப்போக, இங்க மட்டும் மூணு நாள் விழாவை அஞ்சு நாளா நீட்டிச்சு சிறப்பாக் கொண்டாடிட்டு  வர்றோம். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்துல இருக்கிற மேலமருத்துவக்குடி விருச்சிக ராசி ஸ்தலமும் உலகப் புகழ்பெற்றது. தேள் வடிவ விநாயகரை இங்க மட்டுமே பார்க்க முடியும்.

அப்பவும் சரி, இப்பவும் சரி... கல்யாண மண்டபங்கள் அதிகமா உள்ள ஊர் எங்க ஆடுதுறை. சுற்றிலும் கோயில்கள் நெறைஞ்சு

உள்ளதால இங்க திருமணங்கள் அதிகமா நடக்கும். என்னை வளர்த்துவிட்டதும் இந்த மதுரகாளியம்மன் தாயிதான். அதனால, அந்தத் திருவிழாவுல 24 வருஷமா விடாம பட்டிமன்றம் நடத்திட்டு வர்றேன். அம்மாவுக்கு என்னால வேற என்ன செய்யமுடியும்? சொல்லுங்க!'

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வலையோசை - கொக்கரக்கோ
ஆசை வெச்சேன் உன் மேல !
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement
[X] Close